’செல்ஃபி’ திரை விமர்சனம்!

120

சென்னை.

கல்லூரியில் மாணவனாக படிக்கும் நாயகன் ஜி.வி.பிரகாஷ்,  தந்தை வாகை சந்திரசேகர் சொல்லுக்கு கட்டுப்பட்டு  ஊரிலிருந்து சென்னைக்கு வந்து இன்ஜினீயரிங் படிக்கிறார். படிக்கும் போதே பணம் சம்பாதிக்க ஆசைப்படும் ஜி.வி.பிரகாஷ், கல்லூரியில் மாணவர்களை சேர்த்துவிடும் புரோக்கர் வேலை பார்க்கிறார். இதனால் ஏற்கனவே தொழிலில் இருப்பவர்களுக்கும் ஜி.வி.பிரகாஷிற்க்கும் மோதல் உண்டாகிறது. அந்த மோதலில் இருந்து தப்பித்த ஜி.வி.பிரகாஷ்,  பெரிய அளவில்  சம்பாதிக்க வேண்டும் என்று  ஆசைப்படுகிறார். பின்னர் லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று  ஆசைப்பட்டு தன் நண்பர்களுடன் இணைந்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இதனால் அவரது நண்பர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது. கடைசியில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களும் அந்த  சிக்கலில் இருந்து வெளியே வந்தார்களா?  இல்லையா ? என்பதுதான்  ‘செல்ஃபி’ படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், கல்லூரி மாணவனாக கனல் கதாபாத்திரத்தில் தனது  நடிப்பில் கலக்கி இருக்கிறார். கதைகேற்றவாறு  ஜிவி பிரகாஷ் படம் முழுவதும் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.  நண்பர்களுடன் நட்பு,  தந்தையுடன் கோபம் கொள்ளும்போது ஏற்படும்  பாசம், தன் காதலியுடன் வேதனையுடன் வசனம் பேசும் காட்சியிலும்,  ஆக்ரோஷமாக சண்டை போடும் காட்சியிலும்  தனது நடிப்பில் பளிச்சிடுகிறார்.

ஜி.வி.பிரகாஷிற்க்கு ஜோடியாக வரும் வர்ஷா பொல்லம்மாவிற்கு கதையில் அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும்,   தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக நடித்து தன் கடமையை செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் டி.ஜி.குணாநிதி, அறிமுக நடிகர் என்றாலும்,  முதல் படம் என்பது தெரியாதவாறு மிக தெளிவாகவும், நன்றாகவும் நடித்திருக்கிறார்.

இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜில் படிப்பதற்க்காக மாணவர்களை சேர்ப்பதற்கு இடம் வாங்கித்தரும் தரகராக ரவி வர்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கவுதம் மேனன். அசத்தலான வில்லன் வேடத்தில் அமைதியாக எந்த ஆர்ப்பாட்டம் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். கல்லூரி அதிபராக ஈஸ்வரமூர்த்தி கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன் உண்மையிலேயே நல்ல தேர்வு என்றே சொல்லலாம். தந்தையாக வரும் வாகை சந்திரசேகர் தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜில் படிப்பதற்க்காக மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் பல பெரிய மாஃபியா கும்பல் நடத்தும் லட்சக் கணக்காண பணம் வசூல் வேட்டையும், அதை சார்ந்து இருக்கும் புரோக்கர்களை பற்றியும் மிகச் சிறந்த முறையில்  தமிழ் சினிமாவில் வெளி வராத ஒரு கதையை தேர்வு செய்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் மதிமாறன். சமுதாயத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் முறைகேடுகளை தைரியமாக சொல்லியிருக்கும் மதி மாறனுக்கு கைத்தட்டல் கொடுக்க வேண்டும். இந்த கதை சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அதே சமயம், அந்த விஷயத்தை கமர்ஷியலாக சொல்லியிருந்தாலும், தேவையில்லாத காட்சிகள் எதுவும் திணிக்கப்படவில்லை,

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பெரிய அளவு எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் கைகொடுத்திருக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘செல்ஃபி’படம்  கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு பெரிய பாடமாக இருக்கும். மாணவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 4/5

RADHAPANDIAN.