பிரச்சனைகளுக்கு சண்டை தீர்வாகாது – ’கம்பெனி’ பட விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேச்சு!

133

சென்னை.

ஸ்ரீமகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஆர்.முருகேசன்,

“இந்த படத்தை முடிப்பதற்குள் நான் பல போராட்டங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டேன். படம் தொடங்கிய உடன் கொரோனா பிரச்சனை வந்தது. அது முடிந்த பிறகு இந்த படத்தில் நடித்த என் மகனுக்கு காலில் அடிபட்டு விட்டது. அதனால் சுமார் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. அவருக்கு உடல்நிலை சரியானதும் மீண்டும் கொரோனா பிரச்சனை, இப்படி பல பிரச்சனைகளை சந்தித்து தான் இந்த படத்தை முடித்தேன். நான் இளம் வயதில் நிறைய சிரமப்பட்டிருக்கிறேன். இதே வடபழனி பகுதியில் உணவின்றி சுற்றி  திரிந்திருக்கிறேன்,  ஒரு நாள் பசியால் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். அப்படி பல கஷ்ட்டங்களை சந்தித்தாலும், வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற லட்சியத்தோடு இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். ஏதோ பிறந்தோம், இறந்தோம் என்று வாழாமல், நான் பிறந்தேன், சாதித்தேன் என்று காட்ட வேண்டும், என்ற லட்சியத்தோடு இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். படத்தையும், படக்குழுவினரையும் வாழ்த்த வந்த அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன், நன்றி.” என்றார்.

நாக் ஸ்டுடியோ கல்யாணம் பேசுகையில்,

“இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள். இந்த படத்தோட இயக்குநர் கொரோனா பிரச்சனையில் சிக்கினாலும், அதில் இருந்து மீண்டு படத்தை முடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு படத்தை வெற்றிகரமாக முடித்தார். அவர் என்னிடம் வரும்போதெல்லாம் முகத்தை தொங்க போட்டுக்கொண்டே வருவார். அப்போது நான், என்னடா இவரு இப்படி வருகிறாரே, படத்தை முடிப்பாரா, என்று நினைத்தேன். ஆனால், படம் முடியும் போது, எந்தவித முகசுழிப்பும் இல்லாமல், அனைத்து பணிகளையும் வேகமாக செய்து படத்தை முடித்துவிட்டார். இந்த படத்துல நான்கு பேர் நடித்திருக்கிறார்கள். அதில் சில புதியவர்கள், சிலர் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்கள். அதுபோல் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைவரும் வளரும் கலைஞர்கள், தயாரிப்பாளர் புத்தம் புதுசு. வேலூரில் இருந்து எதுவும் தெரியாமல் வந்து, ரொம்ப கஷ்ட்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி இந்த படத்தை எடுத்திருக்கிறார். நானும் தான் சாப்பாடு இல்லாமல் கஷ்ட்டப்பட்டிருக்கிறேன். பாரதிராஜா சார் என்னை தலையில் அடித்திருக்கிறார். ஆனந்த் தியேட்டரில் தியேட்டர் கொடுக்க மாட்டேன், என்று கூறியதால் அவர் என்னை தலையிலேயே அடித்தார். ’ஒரு கைதியின் டைரி’ படத்திற்கு, ஆனால் அவர் இப்போது அதை மறந்து விட்டார் போலிருக்கு. பிறகு தியேட்டர் கொடுத்து விட்டேன், படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதனால இந்த மேடையில் நான் நிற்க எனக்கு எல்லோரும் சப்போர்ட் பண்ணியிருக்காங்க. ஆனால், இந்த படத்தை பற்றி பேச எனக்கு எந்த தகுதியும் இல்லை. ஆனால், புதுஷாக சொல்லியிருக்கிறார்கள். புதிய கான்செப்ட் படம் என்பதால், இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகர் கராத்தே வெங்கடேஷ் பேசுகையில்,

“தமிழ் சினிமாவின் தூண்களாகவும், மூவேந்தர்களாகவும் இருக்கும் ஜாம்பவான்களுக்கு வணக்கம். இந்த படத்தில் எனக்கு சிறப்பான வேடத்தை கொடுத்த இயக்குநர் தங்கராஜுக்கு நன்றி. பரியேறும் பெருமாள் வேடத்திற்கு இணையாக ஒரு வேடம் கொடுத்திருக்கிறார்கள். என் வேடத்தை பார்க்கும் போது உங்களுக்கு கோபம் வரும், என்ன கூடவே கொஞ்சம் அனுதாபமும் வரும். சிறப்பாக இசையமைத்த ஜுபின், சிறப்பாக ஓளிப்பதிவு செய்த செந்தில், சிறப்பான கதாப்பாத்திரத்தை உருவாக்கிய இயக்குநர் தங்கராஜ், எனக்கு நண்பராக இருந்து பல உதவிகளை செய்த தயாரிப்பாளர் முருகேசன் அனைவருக்கும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.” என்றார்.

இசையமைப்பாளர் ஜுபின் பேசுகையில்,

“மேடையில் அமர்ந்திருக்கும் அனைத்து பெரியவர்களுக்கும் என் பன்பான வணக்கங்கள். நான் ஒரு ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். அந்தபடங்களில் இசை வெளியீட்டு விழா இதே பிரசாத் லேபில் தான் நடைபெற்றது. இந்த படத்தோட வாய்ப்பு எடிட்டர் சசிகுமார் மூலமாகத்தான் கிடைத்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகே நான் இசையமைக்க தொடங்கினேன். படத்தை பார்த்தவர்கள் இசையை வெகுவாக பாராட்டுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் படத்தில் செண்டிமெண்ட் அதிகம் இருக்கிறது. அதனால் தான் இசையும் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் ஒரு பாடல் தான், இந்த பாடலை விவேகா சார் சிறப்பாக எழுதியிருக்கிறார். கதையுடன் பார்க்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கும். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில்,

“என் இனிய தமிழ் மக்களே, என் சக தோழர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் பேசும் போது ரொம்ப கஷ்ட்டப்பட்டு வந்திருப்பதாக சொன்னார். நீங்க கஷ்ட்டப்பட்டு வந்தால் தான் இதை அனுபவிக்க முடியும். இதே வடபழனியில் தெரு தெருவாக சோத்துக்கே வழி இல்லாமல் அலைந்தவன் தான் பாரதிராஜா. சினிமா லவ்வபல் வேர்ட், இது யாரையும் கைவிடாது, நீங்க சினிமாவ லவ் பண்ணீங்கனா அது உங்கள் லவ் பண்ணும். ஒரு வேலை செய்யும் போது அதில் ஒரு தாக்கம் வேண்டும், அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இதில் நடித்திருக்கும் பசங்கள பார்க்கும் போதே படம் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.

இதில் தயாரிப்பாளரின் மகன் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல அப்பா கிடைத்திருக்கிறார். நான் எல்லாம் எந்த பின்புலம் இல்லாமல் வந்தேன். பாடல் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் பேசும் போது தன்னடக்கத்தோடு பேசினார். அது தான் அவரை பெரிய இடத்திற்கு அழைத்து செல்லும். ஆனால், பெரிய இடத்துக்கு போன பிறகும் இப்படியே இருக்க வேண்டும். பலர் பாராட்டுவார்கள் ஆனால், அதையெல்லாம் நாம் தலையில் தூக்கி வைத்துக்கொள்ள கூடாது, கக்கத்தில் வைக்க வேண்டும். நான் அப்படி தான் செய்வேன். என்னை இமயம், அப்படி இப்படினு சொல்லுவாங்க, அது அவங்களுக்கு தான், அவங்க சொல்றாங்க நமக்கு என்ன என்று ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் விட்டுவிடுவேன். இங்கு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜான், பல பிரச்சனைகளை கூறினார். இதுவெல்லாம் கடந்து போகும், ஆனால் இதற்காக நாம் சண்டை போட கூடாது. எல்லமே நம்ம சகோதர்கள் தான், எனவே எதையும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்.

நான்கு பசங்கள பார்த்ததும் நம்ம அலைகள் ஓய்வதில்லை போல இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், இது வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது. உள்ளே என்ன வைத்திருக்கிறார்கள், என்று தெரியவில்லை. ஆனால், நான்கு பசங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள், அவர்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தெரிகிறது. நல்ல சிரித்த முகம், நிச்சயம் வெற்றி பெறுவார்கள். இங்கு இவ்வளவு பேர் வந்து வாழ்த்தியதே பெரிய விஷயம்.  நிச்சயம் படமும், ஹீரோவும் பெரிய வெற்றி பெறுவார்கள். இந்த இடத்தில் இவரை ஒரு ஹீரோவாக அப்பாவும், அம்மாவும் நிறுத்தியிருக்கிறார்கள். இது மிகப்பெரிய விஷயம். நிலம் நீர் காற்று இந்த மூன்றும் நம்மை வாழ வைக்கிறது. இவற்றுக்கு பிறகு அப்பா, அம்மா தான் நம்மை வாழ வைக்கிறார்கள். எனவே அவர்களை மறக்க கூடாது. படம் பெயர் கம்பெனி கிழக்கிந்திய கம்பெனி போல மிகப்பெரிய கம்பெனியாக படம் வெற்றி பெறும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் இயக்குநர் பாரதிராஜா இசை குறுந்தகடை வெளியிட, மற்ற விருந்தினர்கள் பெற்றுக்கொண்டார்கள்.