வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகிவரும் ‘பேட்ட காளி’ என்கிற வெப் சீரிஸில் நடிக்கும் ஷீலா ராஜ்குமார்!

179

சென்னை.

சின்னத்திரை டூ வெள்ளித்திரை என்கிற பயணத்தில் தங்களை அழகாக இணைத்துக்கொண்டு வெற்றிபெறும் நடிகைகள் வெகு சிலரே.. அந்தவகையில் அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார் பக்கத்து வீட்டு பெண் போன்ற அழகும் நடிப்பு திறமையும் அவரது கதாபாத்திரங்களில் பிரதிபலிக்க, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நாயகியாக மாறியுள்ளார் ஷீலா ராஜ்குமார்.

பல சர்வேதேச விருதுகளை பெற்ற ‘டூ லெட்’, விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற ‘மண்டேலா’ என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் என்றால் ஷீலா ராஜ்குமாரை கூப்பிடுங்கள் என சொல்லும் அளவுக்கு யதார்த்த நடிப்பால் ரசிகர்களை மட்டுமல்ல, இயல்பான படைப்புகளை தர விரும்பும் படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளார் ஷீலா ராஜ்குமார். அதற்கேற்ற மாதிரி திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் தனது முத்திரையை பதிக்க துவங்கியுள்ளார் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷீலா ராஜ்குமார்.

“வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகிவரும் ‘பேட்ட காளி’ என்கிற வெப் சீரிஸில் நடிக்கிறேன்.. அண்ணனுக்கு ஜே படத்தை இயக்கிய ராஜ்குமார் இந்த வெப்சீரிஸை இயக்குகிறார். மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தயாராகும் இந்த வெப்சீரிஸ், வேல்ராஜ், ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் இசை என திரைப்படத்திற்கு இணையாக இந்த வெப் சீரிஸ் உருவாகி உள்ளது பேட்ட காளி என்கிற ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்

கோலிசோடா உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்த எடிட்டர் ராஜா சேதுபதியின் முதல் தயாரிப்பான ஜோதி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன் 8 தோட்டாக்கள் ஹீரோ வெற்றி இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் க்ரிஷா குரூப், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா அண்ணாமலை இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

இதுதவிர தமிழில் இன்னும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.. அவற்றை பற்றிய தகவல்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் மலையாளத்தில் ஏற்கனவே கும்பலாங்கி நைட்ஸ் என்கிற படத்தில் நடித்ததற்காக நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. தற்போது மீண்டும் மலையாளத்தில் பெர்முடா என்கிற படத்தில் நடித்து வருகிறேன்.. ராஜீவ்குமார் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்…

‘மண்டேலா’ படத்தை தொடர்ந்து நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் தேடி வருகின்றன. அந்தவகையில் ஒரு நல்ல படத்தில் நானும் முக்கிய பங்களிப்பை கொடுத்திருந்தது என் திரையுலக பயணத்தில் வெளிச்ச புள்ளியாக மாறியுள்ளது. பார்ப்பவர்கள் அனைவருமே மண்டேலாவுக்கு பிறகு உங்களது படங்களை பார்க்க ஆவலாக காத்திருக்கிறோம் என்று கூறுவதை கேட்பதற்கே பெருமையாக உள்ளது. அவர்களை போல நானும் ஆவலாகத்தான் இருக்கிறேன். கொரோனா இரண்டாவது அலை சமயத்தில் தயாரான படங்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன” என்கிறார் ஷீலா ராஜ்குமார்..