அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துறை வாரியாக ஆய்வு!
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் துறை வாரியான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை நம்பர்-1 முதன்மை மாநிலமாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் பல்வேறு புதிய திட்டங்களையும் தீட்டி வருகிறார்.
இதன் காரணமாக தமிழகத்தில் முக்கிய துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தொலைநோக்கு சிந்தனையுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களால் தமிழகத்தில் தொழில் மற்றும் வேளாண் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன.
தமிழ்நாட்டை மிகச்சிறந்த தொழில் வளர்ச்சி மிக்க மாநிலமாக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். தற்போது ஜெர்மனி நாட்டில் நடந்து வரும் தொழில் மாநாடு மூலமாகவும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க தனி அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.2021-2022-ம் நிதியாண்டில் தமிழகத்துக்கு முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகமாக வெளிநாட்டு முதலீடு கிடைத்து உள்ளது.
இதே போல் அனைத்து துறைகளிலும் பணிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் பணிகளும் நடைபெறுவதால் முன்னேற்ற பாதையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளன என்பதை கண்டறிய தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் அறையில் டேஷ்போர்டும் வைக்கப்பட்டு உள்ளது. அனைத்து துறைகளின் பணிகளும் ‘அப்டேட்’ செய்யப்பட்டு வருகின்றன. இதை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவ்வப்போது கண்காணிப்பது வழக்கம்.இந்த நிலையில் சிறப்பு திட்ட துறை மூலம் 2 நாட்கள் ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகளையும் முழுமையாக ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருந்தார்.
அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் துறை வாரியான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், துறைகளின் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர்.நகராட்சி நிர்வாகம், குடிநீர் வினியோகம், பொதுப்பணித்துறை, எரிசக்தி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகம், வீட்டு வசதி மேம்பாட்டு வாரியம், தொழில், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில், தகவல் தொழில்நுட்பம், தமிழ் வளர்ச்சித் துறை, சுற்றுலாத்துறை, மனிதவள மேம்பாடு, கைத்தறி, வணிக வரித்துறை, பேரிடர் நிர்வாகத்துறை, சிறப்பு திட்டங்கள் துறை, மது விலக்கு ஆயத்தீர்வை, போக்குவரத்து, நிதித்துறை ஆகிய 19 துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எந்த அளவுக்கு பணிகள் நடைபெற்றுள்ளது என்ற விவரத்தை அறிந்து கொண்டார். ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு பணிகள் இன்னும் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற விவரத்தையும் அறிந்து கொண்டு அதை விரைந்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இதே போல் நாளை (2-ந்தேதி) ஆதிதிராவிடர் நலத்துறை, வேளாண், கால்நடை, பால்வளம், மீன் வளம், பிற்பட்டோர், இதர பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழிலாளர் நலம், ஊரக மேம்பாடு, சுகாதாரம், சமூக நலம், முதல்வரின் முகவரி, மாற்றுத் திறனாளிகள் துறை, சுற்றுச்சூழல், சட்டம், இளைஞர்கள் நலம், திட்டம் மற்றும் நிதித்துறைகள் செயல்பாடுகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.