புதுமுகங்களை வைத்து இயக்குவது வசதியாக இருக்கும் ‘லாக்’ பட இயக்குநர் ரத்தன் லிங்கா பேச்சு!

143

சென்னை.

முழுக்க முழுக்க புதுமுகங்களின் கூட்டணியில் புதிய பார்வையில் புதிய கதை சொல்லும் பாணியில் உருவாகி இருக்கும் படம் ‘லாக்’. இது ஒரு க்ரைம்  சைக்கோ த்ரில்லர் படமாகும். லாக் படத்தின் மேக்கிங் வீடியோ இன்று  வெளியிடப்பட்டது! இப்படத்தை ஏற்கெனவே தனது ‘அட்டு’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற ரத்தன் லிங்கா  இயக்கியுள்ளார். அவர் தனது பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் நிறுவனத்துடன் RPG போனோபென் குழுமம், சக்திவேல் பிக்சர்ஸ் நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

‘லாக்’ படத்தில் மதுஸ்ரீ ,பிரியங்கா, புவனா, ஹரிணி  , மதன், மணி ஸ்ரீனிவாச வரதன் , பாரதி , மற்றும் பலர் நடித்துள்ளனர். அறிமுக ஒளிப்பதிவாளர்  நந்தா ஒளிப்பதிவு செய்துள்ளார்,விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார் .நாதன் லீ சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு , VFX மகேந்திரன்செய்துள்ளார். ‘லாக்’ படத்தின்  மேக்கிங் வீடியோ இன்று ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

படம் பற்றி இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும்போது,

“இது ஒரு ஸ்போர்ட்ஸ் க்ரைம் சைக்கோ த்ரில்லர் என்கிற வகையில் உருவாகியுள்ளது. இது இன்றைய காலத்துப் பெண்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி எடுத்துக் கூறி  விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. படத்தில் நல்ல செய்தி ஒன்றும் சொல்லப்பட்டுள்ளது. ‘இந்த உலகத்தில் உன்னைக் காப்பாற்ற யாராலும் முடியாது. நீயே தான் உன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் ‘ என்கிற கருத்து அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு இருந்து தன்னைக் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று புரிய வைக்கும். இதற்கு எந்தவிதமான நட்சத்திர பலமும் தேவையில்லை என்பதால் புதுமுகங்களை வைத்து  உருவாக்கி இருக்கிறோம்.ஏனென்றால் இந்தக் கதைக்குப் புதுமுகங்கள் நடித்தால்தான் சரியாக இருக்கும். அப்படி முதன் முதலில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் தான் மதுஸ்ரீ அதன் பிறகு பலர் வந்து சேர்ந்தார்கள்.

இந்த படம் ஆரம்பித்த சில நாட்களில் லாக்டவுன் வந்து விட்டது.என்ன செய்வது என்று குழப்பத்திலும் பதற்றத்திலும் இருந்தோம். ஆனால் கதையின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. என் நம்பிக்கையைப் பார்த்து சக்திவேல் என்பவர் வந்து இணைந்து கொண்டு எனது பொருளாதார சுமையைச் சுமந்து கொண்டார்.அதில் ஒரு பெரிய துயரமாக கொரோனா காலத்தில் அவர் காலமாகிவிட்டார். அதன் பிறகு எனது சினிமா ஆர்வத்தையும் உழைப்பையும் பார்த்துவிட்டு, தயாரிப்பாளர் கோகுல் இணைந்துகொண்டார். அவர் மூலம் மார்ட்டின் வந்து இணைந்து கொண்டார் .அதுவரையிலான படப்பிடிப்புக் கதைகள் எல்லாம் கேட்டபிறகு எதுவுமே சொல்லாமல் நாளை முதல் நீங்கள் தொடருங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கை தந்து நண்பர் மார்ட்டின் ஊக்கம் கொடுத்து விட்டு இப்படத்தில் இறங்கினார். இப்படிப் பலரும் கைகொடுக்க இந்தப் படம் எடுக்கப்பட்டு இன்று  முடிந்திருக்கிறது.

படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன .விக்ரம் செல்வா நன்றாக இசையமைத்துள்ளார். இவர் ஏற்கெனவே தமிழ் , கன்னடத்தில் படங்கள்  இசையமைத்துள்ளவர், இப்போதும் அமைக்கிறார். சண்டைக்காட்சிகள் யதார்த்தாக அமைந்துள்ளன.நாதன் லீ  மிகவும் யதார்த்தமாக காட்சிகளை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் நிறைய புதுமுகங்களை நான் பயன்படுத்தி இருக்கிறேன். காரணம், அறிமுக அனுபவமுள்ள நடிகர்கள் கிடைக்காததால் அல்ல. புதுமுகங்களை வைத்து எடுப்பது சிரமப்பட்டாலும் முறையாக ஒத்திகை பார்த்து நாங்கள் எடுத்தோம். புதுமுகங்களை வைத்து எனது வசதிக்காக நன்றாக வேலை வாங்க முடியும். அவர்களிடம் சிறப்பான நடிப்பை  சிரமப்பட்டாவது நான் வெளிக்கொண்டு வந்து விடுவேன் .இந்த நம்பிக்கையில்தான் அனைவரையும்  தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தோம். அவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

எனது ‘அட்டு’ படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆனாலும் இன்னும் அதைப் பற்றி பேசுபவர்கள் பின்பற்றுபவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள் .இது அட்டு வைப்போல் நாலைந் ந்து மடங்கு பெரிய அளவிலான படமாக இருக்கும். பெரிய அளவில் சென்றடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.அட்டு வடசென்னை பின்புலத்தில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்திலும் வடசென்னை பின்பலம் சிறிதளவு வரும். பெரும்பகுதி கிழக்கு கடற்கரை சாலை , கோவளம் என்று எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளி சென்னையில் இருந்து வெளியே செல்லும் பயணம் என்ற வகையில் இந்தக் கதை இருக்கும்.

புதுமுகத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சினிமாவின் முதல் படம் கிடைப்பது பெரிய போராட்டமாக இருக்கிறது. எங்கு சென்றாலும் “இதற்கு முன்பு என்ன செய்திருக்கிறீர்கள்?” என்ற கேள்வியை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். யாருமே வாய்ப்பு தராத போது “இதற்கு முன் “என்று எப்படிச் செய்ய முடியும்? எனவே முதல் வாய்ப்புக்காக பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலைமையைக் கண்டு அதை மாற்ற நாங்கள் இறங்கியிருக் கிறோம். புதுமுக இயக்குநர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் எங்கள் நிறுவனம் மூலம் மினிமம் பட்ஜெட்டில் ஆண்டுக்கு மூன்று படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் படம் சினிமாத்தனம் இல்லாத படம்.சிறிதும் சினிமாட்டிக்டாக இல்லாமல் இயல்பாக இருக்கும் என்கிற உத்திரவாதத்தை என்னால் தரமுடியும்.கதை நிகழும் இடங்களும் மிகவும் யதார்த்தமாக உண்மைக்குப் பக்கத்தில் இருக்கும். இந்தப் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதாக இருக்கிறோம். சின்னஞ் சிறிய பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் என் மீது நம்பிக்கை வைத்து உடன் இணைந்து கொண்ட நண்பர்களின் ஆதரவால் இன்று மிகப்பெரிய அளவிலான படமாக  வளர்ந்திருக்கிறது .அந்த நண்பர்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை “என்று கூறினார்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுல் பேசும்போது,

“நான் இயக்குநர் ரத்தன் லிங்காவுடன் அறிமுகமாகிப் பழக்கம் ஏற்பட்ட பிறகு நிறைய விஷயங்கள் பேசினோம். ஒருகட்டத்தில் அவர் படத்தை எடுத்துக் கொண்டு சிரமப்பட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது .நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்றார். அதன் பிறகு 6 மாதங்கள்  பேசிக்கொண்டிருந்தோம். லாக்டவுன் வந்தது அப்போதும்  சினிமா பற்றி  அவருக்குள் இருந்த பொறி சற்றும் குறையாமல் இருந்ததை நான் பார்த்தேன். அவரது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் குறித்து எனக்கு வியப்பாக இருக்கும்.சினிமா என்கிற போது எதற்கும் சமரசம் ஆகவே மாட்டார்.அதைப் பார்த்து எனக்கு அவர் மீது மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட்டது. எனவே அவரது இந்தப் பண்புக்காகவே  வியாபாரம் லாபம் நஷ்டம் பற்றி எல்லாம் நான் கவலைப் படாமல் அவருடன் இணைந்தேன்.  சொன்னதுபோல் படத்தை எடுத்தார். சொன்னதைவிட 200% பூர்த்தி செய்திருக்கிறார்.இந்தப் படம் நிச்சயம் ஒரு பெஞ்ச் மார்க் படமாக இருக்கும் என்று என்னால் கூற முடியும்” என்றார்.

நடிகை மதுஸ்ரீ பேசும்போது,

“ஒரு குறும்படத்தின் மூலம் இயக்குநர் அறிமுகம் கிடைத்தது. ‘அட்டு ‘படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பு தவறிப் போய் விட்டது .இந்தப் படம்  வழக்கமான படங்கள் போல் இருக்காது .எல்லாவற்றையும்  விட எனக்கு வேறு விதமான பாத்திரமாக நடை உடை பாவனை அனைத்திலும் புதிதாக இருக்கும். நடிக்க நான் தேர்வான போது என் உடல் எடை 65 கிலோ இருந்தது. படத்தில் நான் ஒரு ஸ்விம்மர் .அதற்கேற்ற மாதிரி இல்லாமல் என் உடல் எடை அதிகமாக இருந்தது. எனவே இந்தப் படத்துக்காக முதலில் என்னை எடைக் குறைப்பு செய்யச் சொன்னார்கள். 65 கிலோ எடை இருந்த நான் சுமார் ஒரு மாதத்திற்குள் 15 கிலோ எடைக் குறைப்பு செய்து கொண்டேன். அதன் பிறகுதான் அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. படத்தின் காட்சிகள் நான் எதிர்பார்த்ததைவிட நன்றாக வந்துள்ளன. லாக் படத்தில் பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப்பட்டுள்ளது” என்றார்.

நடிகை புவனா பேசும்போது,

“நான் நான் இதற்கு முன் ‘அசுரன்’ படத்தில் பணியாற்றி . அதில் கிராமத்து பெண்ணாக வருவேன்.இதில் முற்றிலும் மாறுபட்ட வேடம். இந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்ற தயக்கமும் பயமும் இருந்தது.இந்தப் பாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்று நான் பயந்தேன். ஆனால் இயக்குநர்  என் மீது நம்பிக்கை வைத்து தன் உற்சாகம் கொடுத்து ஊக்கப்படுத்தினார் .படம் முடிந்த நான் தோன்றும்  காட்சிகளைப் பார்க்கும்போது நானா அது? என்று என்னால் நம்பமுடியவில்லை. அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரம் அமைந்துள்ளது. படம் வந்தால் என்னை எல்லாரும் திட்டுவார்கள்.என்னை அடிக்க வருவார்கள். அந்தளவுக்கு வந்துள்ளது” என்றார்.

நடிகை பிரியங்கா பேசும்போது,

“இந்த சைக்கோ திரில்லர் படத்தில் ஸ்பெஷல் போலீஸ் டீம்தான் எனக்குச் சரியாக வரும் என்று தேர்ந்தெடுத்தார்கள்.படப்பிடிப்பு செல்வதற்குமுன் அவர்கள் ஒர்க்ஷாப் வைத்துப் பயிற்சி எல்லாம் கொடுத்தார்கள்.அப்படித்தான்  நான் நடித்திருக்கிறேன். இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநருக்கு நன்றி” என்றார்.

நடிகை ஹரிணி பேசும்போது,

”எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு முதலில் நன்றி. என்னைப்போல் டஸ்கி ஸ்கின் உள்ள , அதாவது சுமாரான நிறம் உள்ள நடிகைகளுக்கு யாரும் வாய்ப்பு தருவதில்லை. சுமாரான நிறம் என்றால் அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. நான் ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன் சுமாரான நிறம் கொண்ட நடிகைகளுக்கும் வாய்ப்புகள் தாருங்கள். இந்தப் படத்தில் இயக்குநர் தைரியமாக எனக்கு வாய்ப்பு கொடுத்து ஊக்கப்படுத்தினார்.படப்பிடிப்பின் போதெல்லாம்  வெறும் நடிப்பு மட்டும் சொல்லிக் கொடுக்கவில்லை ஒட்டுமொத்தமாக சினிமா பற்றி எங்களுக்குப் புரிய வைத்தார்.சினிமா பற்றி பல்வேறு விஷயங்களைச் சொல்லித் தந்தார். அனைவரும் நல்ல முறையில் படத்தில் உழைத்தார்கள், பக்கபலமாக இருந்தார்கள், வெற்றிகரமாக முடித்தார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம் ” என்றார்.