சென்னை.
தொழில்நுட்பம் வளரவளர இன்னும் பத்திருபது வருடம் கழித்து என்னவெல்லாம் நடக்கும் என அதீத கற்பனை கொண்ட படங்கள் ஒரு பக்கம் வெளியாகி வருகின்றன. ஆனாலும் மண்மணம் மாறாத கிராமத்து எளிய மக்களின் வாழ்வியலையும் அவர்களது கொண்டாட்டங்களையும் வீரத்தையும் சொல்லும்விதமாக படங்களை இயக்குவதற்கும் நடிப்பதற்கும் தமிழ் சினிமாவின் வெகுசிலரே இருக்கின்றனர்.
அந்தவகையில் கிராமத்து மக்களின் பிரதிபலிப்பாக நம் கண்முன்னே பளிச்சிடும் நடிகர்களில் சசிகுமாருக்கு முக்கிய இடம் உண்டு.. ஈரமும் வீரமும் கலந்த கதாபாத்திரங்கள் என்றால் சசிகுமாருக்கு அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி. அந்த வகையில் தற்போது சசிகுமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தான் “காரி”.
“காரி” என்பது ஐயனார் மற்றும் கருப்பசாமியின் பெயரில் ஒன்று. வீரம் தெறிக்கும் காவல் தெய்வத்தின் பெயரில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹேம்ந்த் இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன் குமார் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக பார்வதி அருண் என்பவர் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் செம்பருத்திப்பூ, மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த 21ஆம் நூற்றாண்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். மேலும் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடித்துள்ளார். வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜேடி சக்ரவர்த்தி நடித்திருக்கிறார்.
இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, நாகி நீடு, பிரேம், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, ராம்குமார், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
மிரட்டலான ஆக்ஷனுக்கு நூறு சதவீதம் உத்தரவாதம் தரும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது என்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. அது மட்டுமல்ல வீரமாக மோதி ஜெயிக்கப் போவது ஜல்லிக்கட்டு காளையா?? இல்லை பந்தயக் குதிரையா?? என்பது போல சசிகுமாரையும் வில்லன் ஜேடி சக்கரவர்த்தியையும் இந்த ட்ரெய்லரில் இரு எதிர் துருவங்களாக உருவகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்கும் என எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு செமத்தியான விருந்தாக இருக்கும் என்பதை இந்த டிரைலர் சொல்லாமல் சொல்கிறது. இருபது மணி நேரத்தில் ஒன்றரை மில்லியன் பார்வையாளர்கள் இந்த ட்ரைலரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்*
ஒளிப்பதிவு ; கணேஷ் சந்திரா
இசை: இமான்
எடிட்டிங் ; சிவ நந்தீஸ்வரன்
கலை இயக்கம் ; மிலன்
சண்டைப் பயிற்சி ; அன்பறிவு, ஸ்டண்ட் சில்வா, தினேஷ் சுப்பராயன்
நிர்வாகத் தயாரிப்பு ; கிருபாகரன் ராமசாமி
தயாரிப்பு மேற்பார்வை ; A. பால் பாண்டி
மக்கள் தொடர்பு ; A. ஜான்