சென்னை.
வெங்கட் பிரபுவின் ’மன்மதலீலை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் 18 நாட்களில் முடித்து கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், தனது அடுத்த படமான ’O2’ மூலம் கோலிவுட் மட்டும் இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நயன்தாரா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள ’O2’ திரைப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதோடு, ஊடகங்களின் பாராட்டையும் பெற்றுள்ளது.
மண்சரிவில் சிக்கிக்கொள்ளும் பேருந்து ஒன்று முழுமையாக மண்ணுக்குள் புதைந்துவிட, அதனுள் இருக்கும் பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டார்களா இல்லையா, என்பது தான் ’O2’ படத்தின் கதை. மிக வித்தியாசமான அதே சமயம் சவாலான இந்த கதைக்களத்திற்கு மிக நேர்த்தியாக திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் அமைத்திருந்தாலும், அவற்றை திரையில் மிக தத்ரூபமாக கொண்டு வந்து படம் பார்ப்பவர்களையும் பதற வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன். படத்தை பார்த்த பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஆச்சரியத்தோடு பார்ப்பதோடு, படத்தில் நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு நடப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது, என்று சொல்வதோடு ஒளிப்பதிவாளரின் உழைப்பும், அவரது திறமையும் தான் அத்தகைய உணர்வுக்கு மிக முக்கிய காரணம் என்றும் பாராட்டி வருகிறார்கள்.
’O2’ படத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஒளிப்பதிவாளர் தமிழ் அகழனிடம் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி கேட்ட போது, ”இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் என் நண்பர். அவர் இந்த கதையை என்னிடம் 2019 ஆம் ஆண்டு சொன்ன போதே நான் கதையோடு பயணிக்க தொடங்கி விட்டேன். ரசிகர்கள் நம்பும் வகையில் காட்சிகள் இருக்க வேண்டும், அப்போது தான் படம் ரசிகர்களிடம் சென்றடையும் என்பதை முன்பே முடிவு செய்ததோடு, அதை எப்படி சாத்தியமாக்குவது என்பதை சிந்திக்க தொடங்கிவிட்டேன். பிறகு படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதை அறிந்தவுடன், எனது பணியை தீவிரப்படுத்த தொடங்கினேன்.
பேருந்து மற்றும் மண் சரிவு காட்சிகள் செட் அமைக்கப்பட்டு அதன் மூலம் படமாக்கப்பட்டாலும், படம் பார்ப்பவர்களுக்கு செட் என்பது தெரிய கூடாது மற்றும் பேருந்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களின் பதற்றம் ரசிகர்களும் வர வேண்டும், இந்த இரண்டையும் சரியாக செய்துவிட்டால் படம் நிச்சயம் ரசிகர்கள் மனதில் நின்றுவிடும் என்பதால், அதற்கான பணியில் தீவிரம் காட்டினேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக சுமார் 2 வருடங்கள் இப்படத்திற்காக நான் பணியாற்ற தொடங்கி விட்டேன். ஒவ்வொரு காட்சிகளையும் இப்படி தான் படமாக்க வேண்டும் என்று முடிவு செய்து அதை சரியான முறையில் திட்டமிட்டதும் சிறப்பான ஒளிப்பதிவுக்கு ஒரு காரணம்.
நயன்தாரா மேடம் போன்ற ஒரு பெரிய நடிகையை வைத்துக்கொண்டு பணியாற்றும் போது தேவையில்லாமல் அவர்களுடைய நேரத்தை வீணடிக்க கூடாது. அதே சமயம், தயாரிப்பாளர் திட்டமிட்ட நாட்களுக்குள் படத்தை முடிக்க வேண்டும், அதே சமயம் படமும் தரமாக இருக்க வேண்டும், என்ற பல சவால்கள் இருந்தது. அவற்றை சரியான முறையில் சமாளிக்க படப்பிடிப்புக்கு முன்பு 2 வருடங்களாக நான் மேற்கொண்ட பணிகள் அவற்றை சரியாக செய்ய எனக்கு பெரிதும் கைகொடுத்தது.
படம் முழுவதும் கேமராவை தோளில் வைத்து தான் காட்சிகளை படமாக்கினேன். இது ரொம்ப சிரமமான விஷயம் என்றாலும் படத்திற்கு அது தான் மிக முக்கியம். உயிருக்காக போராடும் ஒரு கதாப்பாத்திரத்தின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்த வேண்டும், அதேபோல் ஒரு பயணியின் பதற்றமான சூழ்நிலை மற்றும் பயம் போன்ற உணர்வுகளை மிக சரியாக ரசிகர்களிடம் கடத்த வேண்டும் என்பதால், நானும் பேருந்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு கதாப்பாத்திரமாகவே பணியாற்றினேன்.
படத்தை பார்த்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சார், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் இந்த படம் எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும், என்று சொன்னது தான் எனக்கு கிடைத்த முதல் பாராட்டு. அதிலும் குறிப்பாக நயன்தாரா மேடம் படப்பிடிப்பின் போது இந்த கதைக்களத்தையும் அதை படமாக்குவதில் இருக்கும் சிக்கல்களையும் மிக சரியாக புரிந்துக்கொண்டு ஒத்துழைப்பது கொடுத்ததும், ஒவ்வொரு காட்சி நடித்து முடித்ததும் என்னிடம் ”ஒகேவா தமிழ்..” என்று கேட்டது என்னால் மறக்க முடியாது. எனது இந்த சிறப்பான பணிக்கு அவர்களுடைய ஒத்துழைப்பும் ஒரு காரணம்.” என்றார்.
மண்ணுக்குள் புதைந்த ஒரு பேருந்துக்குள் எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழும் என்பதை லைட்டிங் மூலமாகவே வெளிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் தமிழ் அகழன், பேருந்துக்குள் சிக்கிக்கொள்ளும் கதாப்பாத்திரங்கள் நேரம் நேரம் ஆக ஆக, அவர்களுடைய முக தோற்றம், உடல் மொழி போன்றவற்றையும் மிக கச்சிதமாக படமாக்கியிருப்பதால் தான் ’O2’ திரைப்படம் ரசிகர்களை எளிதில் சென்றடைந்திருக்கிறது.
அதுமட்டும் இன்றில், ஒரு பேருந்தில் நடக்கும் கதையை ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் ஒவ்வொரு காட்சிகளின் கோணத்தையும் வித்தியாசமான முறையில் காட்டியிருப்பதும் இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.18 நாட்களில் ’மன்மதலீலை’ படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்து பாராட்டு பெற்ற ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன், ’O2’ படத்தின் மூலம் ஒளிப்பதிவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கிறார் என்றால் அது மிகை இல்லை. நிச்சயம் இந்த படத்தின் மூலம் பல அங்கீகாரங்களை மட்டும் இன்றி பல விருதுகளையும் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் பெறப்போவது உறுதி என்று ஊகடங்கள் பாராட்டி வருவதால், அவர் சந்தோஷமடைந்துள்ளார்.