சென்னை.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் 43 இடத்தில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான “ஜோதி” திரைப்படத்தின் முதல் பாடல் “போவதெங்கே” நேற்று SRM கல்லூரியில் ஆயிரம் மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் “SP ராஜா சேதுபதி”, இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா”, (மண்டேலா) படத்தின் நாயகி “ஷீலா ராஜ்குமார்”, இசையமைப்பாளர் “ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்”, பாடலாசிரியர் “கார்த்திக் நேத்தா”, துணை நடிகர் “ஹரி க்ரிஷ்” ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி அனைத்து மாணவ மருத்துவகள் முன்னிலையில் தயாரிப்பாளர் வீடியோ எடுக்க, “Let’s launch Povathengea from JOTHI” என்று மாணவர்கள் கரகோஷமிட படத்தின் முதல் பாடல் காட்சி திரையிடப்பட்டது.இப்பாடலின் இறுதியில் வரும் கடைசி மூன்று shots ஒரு ஹைக்கூ கவிதை போன்று இருந்ததாகவும், படத்தை பார்க்க மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். அதன்பின் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று படத்தின் முதல் பத்து நிமிட காட்சியை மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. காட்சி முழுவதும் அதிர்ச்சியில் உரைந்திருந்த அரங்கு “ஜோதி ஜூலை வெளியீடு” என்று நிறைவு பெற்றவுடன் விசில் சத்தம் அரங்கு முழுவதும் நிறைந்திருந்தது. இந்த ஆரவாரம் போன்றே மக்கள் மத்தியிலும் நிகழும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இப் படத்தை பற்றி தயாரிப்பாளர் “SP ராஜா சேதுபதி” கூறியதாவது.
சதுரங்க வேட்டை படத்தொகுப்பாளராகிய நான் இந்த படத்தை தயாரித்தற்கு முக்கிய காரணமே சென்னை உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சதுரங்க வேட்டை படத்தை மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டது, அதுபோலவே ஜோதி படத்தின் கரு சாமானிய பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனதை உலுக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டிருந்ததால் சமூக அக்கறை உள்ள நல்ல திரைப்படங்களை மக்கள் எப்போதும் கைவிட்டது இல்லை.இதன் கருவும், நடந்த சம்பவமும், இதன் பின்னணியும் என் தூக்கத்தை தொலைத்தது. இதனால் ஜோதி திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன். என்று கூறினார்.
இப்படத்தை பற்றி இயக்குனர் “AV கிருஷ்ண பரமாத்மா” கூறியதாவது.
சமூக அக்கறைகொண்ட கதை கருவை விறுவிறுப்பான திரைக்கதை யுடனும்,எதார்த்தமான வசனங்களுடனும் எடுக்கப்பட்ட “ஜோதி ” திரைப்படம் எமோஷனல் கலந்த கிரைம் திரில்லராக வந்திருக்கிறது. இப்படத்தின் முதல் பாடலாகிய போவதெங்கே பாடலை மாணவ மருத்துவர்கள் முன்னிலையில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் வந்து திரையில்காணும்படி கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.
இப்படத்தைப் பற்றி பாடலாசிரியர் “கார்த்திக் நேத்தா” கூறியதாவது.
இப்படத்திற்கும் எனக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, எனது சொந்த வாழ்வின் நிகழ்வை இப்படம் பிரதிபலிப்பதால் அனைத்து பாடல் வரிகளும் மிகவும் ஆழமாகவும், அற்தமுள்ளதாகவும் அமைக்க முடிந்தது. படத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் என் வரிகளுக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது.முதல் பத்து நிமிட காட்சியை கண்டு மிரண்டு விட்டேன். இப்படத்தையும்,பாடல்களையும் மக்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன் என கூறினார்.
இப்படத்தைப் பற்றி இசையமைப்பாளர் “ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்” கூறியதாவது.
அர்ஜுன் ரெட்டி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் போலவே இந்த படமும் பெரிய ஹிட்டாகும். இந்த படத்துல நாலு பாடல்கள் இருக்கு, ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு டைப்ல இருக்கும், அதுல முதல் பாடலா இருக்கற போவதெங்கே சாங் “கார்த்திக்” பாடியிருக்கிறாரு. இந்த படத்துக்கு background music அமைக்கும் போது musicians எல்லாருக்கும் அழுதுட்டாங்க. அதன் தாக்கம் ரொம்ப நாள் இருந்திச்சுனு சொன்னாங்க.என கூறினார்.
இப்படத்தை பற்றி துணை நடிகர் “ஹரி க்ரிஷ்” கூறியதாவது.
ஜோதி படத்துல முக்கியமான கேரக்டர் ஒன்னு பண்ணியிருக்கேன். அது ரொம்ப நல்ல கேரக்டர்.படம் ரிலீஸ் க்கு அப்புறம் ரொம்ப பேசப்படும் கேரக்டரா இருக்கும். அது எந்தளவுக்கு நல்ல கேரக்டர்னா நடிச்சிக்கிட்டு இருக்கும்போது என்னோட கால் ஒடைஞ்சிருச்சி, ஒரு மாசம் ரெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் சொல்லிட்டாரு, பட் நா ரெஸ்டே எடுக்காம அடுத்த நாளே சூட்டிங்கு வந்துட்டேன்.அந்த கேரக்டர் உங்க எல்லாருக்கும் பிடிச்ச கேரக்டராவும் இருக்கும் என பேசினார்.
இப்படத்தைப் பற்றி நடிகை “ஷீலா ராஜ்குமார்” கூறியதாவது
முழு ஜோதி படத்தையும் நா பாத்தது இல்ல, இப்பதான் ஃபஸ்ட் டைமா படத்தோட ஃபஸ்ட் பத்து நிமிஷம் பாக்குறேன். ஸ்கிரிப்ட்ல என்ன இருந்ததோ அதைவிட விஷூவலா பாக்கறப்ப ரொம்ப நல்லா வந்திருக்கு, உடனே முழு படமும் பாக்கணும் போல இருக்கு, AV கிருஷ்ண பரமாத்மா ரொம்ப நல்லா இயக்கிய இருக்காரு.ஜோதி படத்துல எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் மிக்க நன்றி என கூறினார்.