சென்னை.
தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் தலைப்பு போஸ்டரை வெளியிட்டனர். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்நிலையில் சாய்பல்லவி ’கார்கி’ படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று பகிர்ந்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். இந்த காத்திருப்புக்கு பதிலளிக்கும் விதமாக பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து கார்கி படத்தை சூர்யா, ஜோதிகா அவர்களின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளனர்
இது குறித்து படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், வாழ்க்கையின் அதிசய நிகழ்வுகள் பல நேரங்களில் நாம் எதிர்பாராத போதே நடந்து விடுகின்றது. அப்படி எங்களுக்கு நடந்த அதிசயம் தான் சூர்யா, ஜோதிகா எங்கள் படத்தில் இணைந்து இருப்பது. சூர்யாவும், ஜோதிகாவும் கார்கியை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதை விட எங்களுக்கு பெருமகிழ்ச்சி ஏதும் இல்லை. இவை அனைத்திற்கும் உறுதுணையாக நின்று செயல்படுத்திய எனது விநியோகஸ்தர் சக்திவேலன் அவர்களுக்கும், ராஜசேகர பாண்டியன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி’ என்று மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்கள்.