‘வேழம்’ திரை விமர்சனம்!

125

சென்னை.

காதலர்களான அசோக் செல்வனும், ஐஸ்வர்யா மேனனும் ஊட்டியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது, ஒரு குறுகலான இடத்தில் குவாலிஸ் கார் வழி மறித்து நிற்கிறது. அசோக் செல்வன் கீழே இறங்கி அந்த காரை நகர்த்துகிறார். அந்த சமயத்தில் சில கொலைகாரர்கள்  ஐஸ்வர்யா மேனனைக் கடத்திச் சென்று கொலை செய்துவிடுகின்றனர். அசோக் செல்வனையும்  கொலைகாரர்கள் அடித்து துவம்சம் செய்து விடுகிறனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அசோக் செல்வனை காவல்துறையினர் மீட்டு,  மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். மருத்துவர்கள் அவரை  உயிர் பிழைக்க வைக்கின்றனர். தன் காதலி ஐஸ்வர்யா மேனனின் பிரிவால் வாடும் அசோக் செல்வன் எப்படியாவது கொலைகாரர்களை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என ஐந்து வருட காலமாக தேடி அலைகிறார். கடைசியில் அவர் அந்த கொலைகாரர்களை கண்டுபிடித்தாரா? எதற்காக ஐஸ்வர்யா மேனனை கொலை செய்தார்கள் என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததா? என்பதுதான்  ‘வேழம்’ படத்தின் மீதிக்கதை.

இப்படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக தொடங்கினாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை வேகத்தை குறைக்கிறது.  அசோக் செல்வன் தன் காதலி ஐஸ்வர்யா மேனனை கொலை  செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்தாலும், ஏன் அவரைகொன்றார்கள் என்பது தெளிவாக சொல்லவில்லை.  சந்தீப் ஷியாம் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பெரும்பாலும் மனிதர்கள் சொத்திற்காகவும், தன் சுயநலத்திற்காகவும்,  மற்றவர்களை அழிக்க நினைப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். சைக்கோ கொலைகளுடன் தொடங்கும் படம் அடுத்தடுத்த காட்சிகளில் பலவித திருப்புமுனைகளோடு  சுவாரஸ்யமாக செல்கிறது.

தற்போது வெளியாகும் பல படங்கள் த்ரில்லர் பாணியில் கொலைகள் செய்வதையே கதைகளாக எழுதி பயணித்து இருக்கிறார்கள். இதுபோல எத்தனை படங்கள் வந்தாலும்,  த்ரில்லர் படங்களின் மீதான கதையில் பல இயக்குநர்களின் ஆர்வம்  இருக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் அழகாக காட்சியளிக்கும் அசோக் செல்வன் அதன் பிறகு தாடியின் மூலம், சில வித்தியாசங்களை காட்டியிருக்கிறார். காதலியின் இழப்பினால் எப்போதும் ஒரு வித சோகத்துடனும், பெரிய  வலியுடனும்  காட்சியளிக்கும் அவர் மன நிம்மதி இல்லாத ஒரு உன்னதமான நடிப்பை வெளிப்படுத்தியிருகிறார்.

ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி இருவருமே தங்களது நடிப்பு சிறப்பாக அமைய அதிக கவனம் செலுத்தவில்லை என்றாலும், அவர்களுக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்து இருக்கின்றனர்.. ஆனால் இருவருக்கும் நடிப்புக்கான பெரிய தேவை எழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு  ஏற்றவாறு கதைக்கு  தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும்  ஷ்யாம் சுந்தர் வில்லனாக அசத்தி இருக்கிறார்.

தேனப்பன், கிட்டி, சங்கிலிமுருகன், திலீபன், ராதிகா, சாதிகா,அபிஷேக் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறனர்.

ஊட்டியின் இயற்கை எழில் மிகுந்த  சீதோஷ்ணநிலையை கொண்டு வந்து கண்களுக்கு குளிர்ச்சியூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த். ஜானு சாந்தர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓரளவுதான் ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘வேழம்’ திரைப்படம் பார்க்க கூடிய படம்.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.