‘மாமனிதன்’ திரை விமர்சனம்!

118

சென்னை.

மதுரை தேனிக்கு அடுத்த பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனராக விஜய் சேதுபதி வலம் வருகிறார்.  இந்த பண்ணைப்புரம் கிராமத்தில்தான் இசைஞானி இளையராஜா பிறந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் விஜய் சேதுபதி ஒரு முதியவரை தனது ஆட்டோவில் அழைத்து வருகிறார். அந்த ஆட்டோவில் பயணம் செய்த அந்த முதியவர் தனது மகள் திருமணத்திற்காக வாங்கிய நகைகளை தவற விட்டு விடுகிறார். அப்போது அந்த முதியவரின்  மகளுக்கு வாங்கிய நகைகள் திருடு போனதால்,  மகளின் திருமணம் நின்றுவிடுகிறது. விஜய் சேதுபதி அந்த முதியவரை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் ஆட்டோவில் தவற விட்ட நகைகளை ஒப்படைக்கிறார். அவரது மகளின்  திருமணம் நின்று போனதால், விஜய் சேதுபதி அந்த முதியவரின் மகளையே திருமணம் செய்து கொள்கிறார்.  இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆகி,  அவர்களை நன்கு படிக்க வைக்க அரசாங்க பள்ளியிலிருந்து,  ஆங்கில மீடியம் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்காக முயற்சிக்கிறார்.

இதனால் அவர் வீடு மற்றும் நிலம் விற்க வாங்க ரியல் எஸ்டேட்  அதிபரிடம் புரோக்கர் பணி செய்கிறார். அவரது மனைவி புரோக்கர் பணி வேண்டாம் ஆட்டோ ஓட்டினால் போதும். எந்த பள்ளியில் படித்தாலும் நம்ம குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள் என்று விஜய் சேதுபதிக்கு அறிவுரை கூறுகிறார். ஆனால் அதையெல்லாம் கேட்காமல் ரியல் எஸ்டேட்  பணியில் ஈடுபடுகிறார் விஜய் சேதுபதி.  ரியல் எஸ்டேட்  தொழிலில் பல பிரச்னைகள் ஏற்பட்டு, அதனால் பாதிப்படைந்த விஜய் சேதுபதி, தன்  குடும்பத்தை விட்டு பிரிந்து அந்த கிராமத்தை விட்டு ஓடி விடுகிறார். கிராமத்தை விட்டு ஓடிய அவர் மறுபடியும் அந்த கிராமத்திற்கு வந்தாரா? அவரது குடும்பத்தை சந்தித்தாரா? என்பது தான் மீதிக்கதை.

இப்படத்தில் ராதாகிருஷ்ணன் என்ற கேரக்டரில், மிக  அமைதியாகவும் அளவான நடிப்பையும் கொடுத்து கைத்தட்டல் பெறுகிறார் விஜய் சேதுபதி. தன்னை ஏமாற்றிய அந்த ரியல் எஸ்டேட் தாயாரிடம் எந்த கோபத்தையும் காட்டாமல் அமைதியாக பேசும் போது நடிப்பில் அசத்திவிட்டார். அதே சமயத்தில் அந்த தாயுடன் தான் ஏமாந்த விஷயத்தையும் 10 லட்சம் பறிகொடுத்துவிட்டு கூறும்போது, அவரது மனம் வேதனைபடும் காட்சியில், அனைவரது மனதையும் வேதனை அடைய வைத்து விட்டார்.  அவரை ஏமாற்றிய அதே ரியல் எஸ்டேட் அதிபர் காசிக்கு வரும்போது, அங்கு அவரை சந்தித்த விஜய் சேதுபதி பெற்ற தாயை அனாதையாக்கி விட்டு,  ஊரை ஏமாற்றி விட்டுச் சென்று விட்டாயே.. என்று சொல்லும்போது அவரது  நடிப்பு அனைவரும் பாராட்டும் அளவிற்கு இருக்கிறது. தன்னை தற்குறி என்றவரிடம், உணர்ச்சி பொங்க வசனம் பேசுவது என அனைத்து இடங்களிலும் விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது.

அவர் மனைவியாக வரும் காயத்ரி 20 வயது மற்றும் 40 வயது கதாபாத்திர மாகவே மாறி நடித்திருக்கிறார். டீக்கடை நடத்தும் இஸ்லாமிய நண்பர் குரு சோமசுந்தரம் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

இளையராஜா, அவரது மகன் யுவன்சங்கர் ராஜா இசை ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. பின்னணி இசையை சிறந்த முறையில் இளையராஜா அமைத்திருக்கிறார். இவர்களது இசை படத்திற்கு கூடுதல் பலம் என்றாலும் சுமார் ரகம்தான்.

ஒரு குடும்ப கதையை சிறந்த முறையில் கையாண்டு படம் பார்க்கும் அத்தனை பேரையும் கலங்க வைத்திருக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி. இந்து-இஸ்லாமியர் என்று பாராமல்  விஜய் சேதுபதியையும், குரு சோமசுந்தரத்தையும், அவர்களது கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு பலம் சேர்க்கும் வகையில் நடிக்க வைத்திருக்கிறார். இந்தப் படம் ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பு வந்து இருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கும். ஆனாலும் ஒரு தடவை இந்தப் படத்தை அனைவரும் பார்க்கலாம்.

மொத்தத்தில், இந்த ‘மாமனிதன்’ படம் ஓ.கே.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.