சென்னை.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் உலகம் முழுதும் வெளியாகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளங்களில் தொடர் வெற்றிப்படைப்புகளை தந்து முதலிடம் பிடித்துள்ளது. இப்போது இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டான “விக்ரம்” படத்தை தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்காக பரிசளிக்க தயாராக உள்ளது.
திரைத்துறையின் உச்சபட்ச ஆக்ஷன் த்ரில்லர்”, “ஆண்டவரின் வெற்றி மேஜிக்”, “தென்னிந்தியாவின் பவர் ஹவுஸ் திறமைகளின் நடிப்பு கண்காட்சி”, “ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் திரைப்படம்’ இன்னும் இன்னும் பல பாராட்டுக்கள்!!! கமல்ஹாசனின் திரை வாழ்வில் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றிப்படமான ‘விக்ரம்’ படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும் மற்றும் விமர்சகர்களின் பாரட்டுக்களும் நிற்காமல் இன்னும் கனமழை போல, பொழிந்து கொண்டு இருக்கிறது. இந்திய அளவில் அனைத்து திரைச் சாதனைகளையும் உடைத்துள்ள, இந்த திரைப்படம் இந்திய வர்த்தக வட்டாரங்களை மட்டும் ஆச்சரியப்படுத்தவில்லை, சர்வதேச சந்தைகளையும் பிரமிக்க வைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி, கமல்ஹாசன்-விஜய் சேதுபதி-ஃபஹத் பாசில்-சூர்யா நடித்துள்ள “விக்ரம்” திரைப்படம் ஜூன் 3, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படத்தின் பிரமாண்ட விளம்பரங்கள், நட்சத்திர கூட்டம், என ‘விக்ரம்’ படத்தின் ஒவ்வொரு அம்சமும் திரையுலக ரசிகர்களை பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது. முதல் டீசரில் கமல்ஹாசன் உச்சரித்த ‘ஆரம்பிக்கலாமா’ என்ற ஒற்றை வார்த்தையில் இருந்து, டிரெய்லரில் வரும் ‘பாத்துக்கலாம்’ வரை ஒவ்வொரு பஞ்ச் வசனங்களும் ரசிகர்களின் கொண்டாட்ட ஆரவாரமாக அமைந்தது.
விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து 100% நேர்மறையான விமர்சனங்களுடன் இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஓபனிங்கை பெற்றது. வெளியான வேகத்தில் திரையரங்குகள் திருவிழா கோலமாக மாறியது, வெளியான மூன்று-நான்கு வாரங்களுக்குப் பிறகும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இப்படம் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது. ‘விக்ரம்’ இந்திய திரையுலகின் பல பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் சாதனைகளை முறியடித்துள்ளது, மேலும் தமிழ்நாட்டின் டாப் வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது, இது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகளால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் உலகளாவிய ஓடிடி பிரீமியர் மூலம் ஒவ்வொரு வீடும் இத்திரைப்படத்தின் திருவிழாவாக மாறும் நேரம் இது. கமல்ஹாசனின் புத்துணர்ச்சியூட்டும் தோற்றமும், அட்டகாசமான கவர்ச்சியும், ஃபஹத் ஃபாசிலின் அசத்தலான நடிப்பும், விஜய் சேதுபதியின் அதிபயங்கரமான வில்லத்தனமும், சூர்யாவின் வெறித்தன கேமியோவும் ரசிகர்களை உச்சக்கட்ட பரவசத்தில் ஆழ்த்தியது. தவிர, இயக்குநர் தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜின் LCU (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) கட்டமைப்பும், ‘கைதி’ திரைப்படத்தில் இருந்து சில கதாபாத்திரங்களை வரவழைத்து, எதிர்காலத் திரைப்படங்களுக்கு அவற்றை விரிவுபடுத்தியது என இப்படம் பன்மடங்கு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கிரீஷ் கங்காதரனின் கண் கவர் ஒளிப்பதிவு மற்றும் அனிருத் ரவிச்சந்தரின் மனம் மயக்கும் இசையமைப்பும் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது.
விக்ரம் திருவிழாவை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான் முதன்முதலில் தொடங்கி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்ட்-கோர் ஆக்சன் திரைப்பட ஆர்வலர்கள் கார்த்தி நடித்த ‘கைதி’ திரைப்படத்தை புகழ்பெற்ற டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் திரையரங்குகளில் ‘விக்ரம்’ என்ற பிரம்மாண்டமான ஆக்ஷன்-பேக் த்ரில்லரைப் பார்ப்பதற்கு முன்பாக பார்த்தார்கள், இது இரு திரைப்பட உலகங்களுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்து கொள்ள நிறைய பங்களித்தது என்பது குறிப்பிடதக்கது. நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தினை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜூலை 8, 2022 முதல் கண்டுகளிக்கலாம்.