‘ராக்கெட்ரி’ திரை விமர்சனம்!

142

சென்னை.

நடிகர் மாதவன் கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ள படம் ‘ராக்கெட்ரி’ இப்படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே நடிகர் சூர்யா அதாவது ராட்கெட் விஞ்ஞானியான நம்பி நாராயணனை பேட்டி எடுப்பது போல கதையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் கதையைப் பொறுத்தவரையில், ஐஎஸ்ஆர்ஓ (ISRO) இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானியான நம்பி நாராயணனை பற்றியும்,  அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றியும் மிகவும் உன்னதமாக யதார்த்தமாக இயக்கி  இருக்கிறார் மாதவன்.  நம்பி நாராயணன் ஒரு இந்திய விஞ்ஞானி. விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் ஒரு உயந்த பதவியில் சிறப்பாக பணியாற்றியவர். 1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று நம்பி நாராயணன் மீது அபாண்டமாக ஒரு பழியை சுமத்தி சிபிஐ போலிசார் அவரை கைது செய்கிறார்கள். இவர் பாகிஸ்தானுக்கு  கிரையோஜெனிக்  என்ஜின் பற்றிய  ரகசியத்தை யாருக்கும் தெரியாமல் விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு அவரை சிறையில் அடைக்கிறார்கள்.  இவரிடம் பழகியதாக மாலத்தீவை சேர்ந்த மரியம் ரசிதா, பௌசியா ஆகிய இருவரும் சேர்ந்து இவரைப் பற்றி தவறான வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

ஆனால் இவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது பின்னர் நீதிமன்றம் மூலம் தெரிய வருகிறது.  1998 ஆம் ஆண்டு அவர் நிரபராதி என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டு விடுதலையாகி விடுவிக்கப்படுகிறார். அதன் பிறகு தன் மீது வீண் பழி சுமத்தி கைது செய்த சிபிஐ போலிசார் மற்றும் காவல்துறை மீது வழக்கு தொடுக்கிறார் இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணன். கேரள மாநில அரசு அந்தக்  காவல்துறையினரைக் காப்பாற்ற வேண்டி நஷ்ட ஈட்டுத் தொகையை ஒரு  கோடியே முப்பது  இலட்சமாக உயர்த்தி,  இந்திய விஞ்ஞானி நாராயணனுக்குக் கொடுத்து அந்த வழக்கினை திரும்பப்பெற வைத்தது. கேரளா மற்றும் இந்தியா முழுதும் உலுக்கிய இந்த வழக்கை மையமாக வைத்து நடிகர் மாதவன், கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ள படம்தான் ‘ராக்கெட்ரி’

நம்பி நாராயணனாக நடித்ததோடு கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியுமிருக்கிறார் மாதவன். விஞ்ஞானி நம்பி நாராயணின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மாதவன், உடல் மொழியிலும், வசன உச்சரிப்பிலும், நரைத்த தலை முடியுடனும் அப்படியே ஒரு முழுமையான இந்திய விஞ்ஞானியாகவே வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய யதார்த்தமான  நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார்…என்று சொல்லும் அளவுக்கு அவருடைய நடிப்பு அமைந்திருக்கிறது. நம்பி நாராயணன் கேரக்டருக்காக, தன்னுடைய ஸ்டைலை மாற்றி மாதவன் மிகவும் மெனக்கெட்டு நடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.. இளமைக்காலம் தொடங்கி முதுமைகாலம் வரை எப்படி  நடிக்க வேண்டும் என்று நம்பிநாராயணனிடம் பழகி, அவரது   கவனம்  முழுவதும் அந்த கேரக்டரிலேயே இன்வால்வ் ஆகி, அப்படியே பிரதியெடுத்திருக்கிறார் மாதவன். இந்த மாதிரி கேரக்டருக்காக காத்திருந்தது போல, தற்போது இருக்கும் சினிமா நிலையைக் கண்டு நம்பி நாராயணனின் உண்மைக் கதையை மக்களுக்கு தெரியபடுத்த மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பது ‘ராக்கெட்ரி’ படத்தை பார்க்கும்போது தெரிகிறது.

நம்பி நாராயணனின் மனைவியாக நடித்திருக்கும் சிம்ரன் வரும் காட்சிகள் அதிகம் இல்லை என்றாலும், சிறையிலிருந்து வீட்டிற்க்கு மாதவன் வரும்போது,  ஒரு ஓரத்தில் மன உளைச்சலுடன் படுத்துக் கொண்டு பைத்தியம் மாதிரி கத்தி அலறும் காட்சியில் சிம்ரனின் நடிப்பு அபாரம். சில காட்சிகளிலேயே விஞ்ஞானி நம்பி நாயாராணனின் குடும்பத்தார் எப்படிப்பட்ட துன்பங்களுக்கு ஆளாகியிருப்பார்கள், என்பதை படம் பார்ப்பவர்கள் உணர்ந்துக் கொள்ளும் வகையில் அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நம்பிநாராயணனைப் பேட்டி எடுப்பவராக சூர்யா வருகிறார். அவரும் கிடைத்த கொஞ்சநேரத்தில் தன் நடிப்புத்திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மாதவனின் மகளாக நடித்திருக்கும் மிஷாகோசல், மகனாக வரும் ஷ்யாம்ரங்கநாதன், அப்துல்கலாமாக நடித்திருக்கும் குல்சன்குரோவர், சிபிஐ அதிகாரியாக வரும் கார்த்திக்குமார் உட்பட அனைவருமே தங்கள் பணியைச் சரியாகச் செய்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளில் சிர்ஷாரேயின் ஒளிப்பதிவில் காட்சிகள் நம் கண்களுக்குள் குளிர்ச்சியை தருகிறது.

சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை, படத்தின்  காட்சிகளை விறுவிறுப்பு குறையாமல், கதைக்கு தேவையானதை மிக சரியான முறையில் வேகத்தைக் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில், இந்திய மக்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு படம் இது. எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியனமான படம்  இந்த ‘ராக்கெட்ரி’

ரேட்டிங் 4/5

RADHAPANDIAN.