‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ வெப் சீரிஸ் விமர்சனம்!

156

சென்னை.

நம் இந்திய நாட்டையே உலுக்கிய கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ கதை நடக்கிறது. தன் சகோதரி ரெஜினா கசண்ட்ரா, அம்மா என்று ஒற்றுமையுடன் வாழும் நிவேதிதா, தனது குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சண்டை போட்டுக்கொண்டு தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்கிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிவேதிதா தங்கி இருக்கும் வீட்டை தவிர மற்ற வீடுகளில் ஆட்கள் யாரும் இல்லை. தனியாக இருக்கும் நிவேதிதா, இன்ஸ்டாகிராமில் ஆன்யா’ஸ் டுடோரியல் என்ற பக்கத்தை தொடங்கி, சமூக வலைதளங்களில் பரபரப்பாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதில் சில வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார். அப்போது தனது வீட்டில் பேய் இருப்பது போல பொய்யான விஷயத்தை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அதற்கு அதிக லைக்குகள் கிடைத்ததோடு, அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஒரு நாள் மேக்கப் பற்றி லைவ்வாக பேசும்போது, அவளுக்குப் பின்னால் பேய் இருப்பதைப் பின்தொடர்பவர்கள் கவனிக்கிறார்கள்.  இதனால் ஆன்யாஸ் டுடோரியல் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் அதிகரிக்கிறார்கள்.

அமானுஷ்ய சக்திகளின் நடவடிக்கைகளை நிவேதிதா அனுபவிக்கத் தொடங்கும் போதுதான் இந்த  கதையில் திருப்பம் எழுகிறது. அதாவது… நிவேதிதாவின் சகோதரி ரெஜினா கசண்ட்ரா, தன் தங்கை செய்வதெல்லாம்  வெத்து வேட்டுதான்..அவள் எல்லோரையும் பேய், பிசாசு  இருக்கிறது என்று சொல்லி ஏமாற்றுகிறாள்.  சிறுவயதில் இருந்தே அவளிடம் பேய், பிசாசு என்பதெல்லாம் சுத்த பொய். அதையெல்லாம் நம்பாதே.. என்று அறிவுரை கூறி இருக்கிறேன்.   பேய், பிசாசு கிடையாது என்பது தன் தங்கை நிவேதிதாவுக்கும், தனக்கும் தெரியும் என்கிறாள். ஆனால் நிவேதிதா அமானுஷ்ய சக்தியான பேய் இருக்கிறது…என்கிறாள்.  தன் சகோதரி செய்யும் இந்த ஒரு காரியத்தால் நிவேதிதாவின் ‘ஆன்யாஸ் டுடோரியல்’ பக்கம் சமூக வலைதளங்களில்  பின்தொடர்பவர்களை இழக்க நேரிடுகிறது. தன் சகோதரி ரெஜினா கசண்ட்ராவுடன் சண்டை போட்டுக்கொண்டு தனியாக குடியிருக்கும் நிவேதிதா உண்மையிலேயே அமானுஷ்ய சக்தியான பேயை கண்டாரா?  நிவேதிதாவுக்கும் அந்த பேய்க்கும் என்ன தொடர்பு? அதனிடம் இருந்து நிவேதிதா தப்பித்தாரா? என்ற கதையை திகில், மர்மம் கலந்த  கலவையில்  வழக்கமான கதை மாதிரி இல்லாமல்,  பல திடுக்கிடும் காட்சிகளுடன், ஆன்யாஸ் டுடோரியல் வெப் சீரிஸ் திரைக்கதையை அமைத்து இருக்கிறார்கள்.

அர்கா மீடியா சார்பில் ஷோபு யர்லகட்டா, பிரசாத் டெவினெனி தயாரித்து பல்லவி கங்கிரெட்டி இயக்கிய இத்தொடரில் ரெஜினா கசாண்ட்ரா, நிவேதிதா சதீஷ், பிரமோதினி பம்மி, தர்ஷ், சமீர் மல்லா, சாய் காமாட்சி பாஸ்கரலா ஆகியோர் நடித்துள்ளனர்.

ரெஜினா மற்றும் நிவேதிதா  இந்த தொடரில் சகோதரிகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ரெஜினா கசண்ட்ரா மற்றும் நிவேதிதா  இருவரும் சகோதரிகள் கதாப்பாத்திரத்திற்கு  பொருத்தமாக மிக கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நிவேதிதாவுக்கு  முக்கிய கதாபாத்திரம் என்பதால், இயக்குனர் பல்லவி கங்கிரெட்டி, அப்பாவித்தனமான முகபாவங்களுடன், அவரை நடிக்க வைப்பதற்காக  நிறைய வேலை வாங்கி இருக்கிறார் என்பது தெரிகிறது… அவரும் எந்தவித குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார். அவரின் சகோதரியாக நடித்திருக்கும் ரெஜினா கசண்ட்ரா, தனது தங்கையின் நிலை பற்றி கவலைப்படுவதும், அவரிடம் சண்டை போடுவதும் என நடிப்பில் அசத்தியிருக்கிறார். ரெஜினா கசாண்ட்ராவுக்கு  அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் தனித்து நின்று, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து  சிறப்பாக நடித்துள்ளார்.

ரெஜினா மற்றும் நிவேதிதா இருவரும் மிக சிறப்பாக நடிப்பில் அசத்தியிருந்தாலும், அதிகமாக ஆங்கிலத்தில் பேசுவதும் குறிப்பிட்ட ஆங்கில ஆபாச வார்த்தைகளை அடிக்கடி உச்சரிப்பதும் தேவை இல்லாத ஒன்று. வெப் சீரிஸ் என்றால் எப்படி வேண்டுமானாலும் அசிங்கமாக பேசலாம் என்பதை அதை இயக்கும் இயக்குனர்கள் தவிர்க்க வேண்டும்.

அரோல் கொரெல்லியின் இசையும், விஜய் கே சக்கரவர்த்தியின்  ஒளிப்பதிவும்,  ரவிதேஜா கிரிஜாலாவின் படத்தொகுப்பும் ஆகிய அனைத்து தொழில்நுட்பங்களும் இந்த வெப் சீரிஸ்ஸீக்கு பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறது.

திரைக்கதை மற்றும் கதையில் வரும் பல காட்சிகளில் எப்படி  தொடர்வது என்பதில் இயக்குநர் பல்லவி கங்கிரெட்டிக்கு சற்று தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இருந்தாலும் ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ வெப் சீரிஸ்ஸை அனைவரும் ரசிக்கும் விதமாக இயக்கி இருக்கிறார்.

மொத்தத்தில், ‘‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ வெப் சீரிஸ்ஸை ரசிகர்கள் அனைவரையும் அச்சப்பட வைக்கும் என்பதில் ஐயமில்லை.

 

.