‘கோப்ரா’ படத்தில் ஏழு கேரக்டர்களுக்கும் வித்தியாசமாக பின்னணி பேசியிருக்கிறேன்… சீயான் விக்ரம் பெருமிதம்!

118

சென்னை.

‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ‘கோப்ரா’ படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின்பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடைய செய்தனர்.

விழாவில் இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசுகையில்,

” இமைக்கா நொடிகள்’ படம் வெளியாவதற்கு முன் தயாரிப்பாளர் லலித் குமார் என்னை அழைத்து, சீயான் விக்ரம் அவர்களின் கால்ஷீட் இருக்கிறது. அவர்களை வைத்து படமொன்றை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறோம். பணியாற்ற இயலுமா? என கேட்டார். எப்படி என் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கான உயரத்தை.. நான் கடக்க வேண்டிய உயரத்தை.. அவர் நிர்ணயித்தார். அப்போது அவர் ஒரு விசயத்தை சொன்னார். அதனை என்னுடைய பெற்றோர்கள் கூட சொல்லி இருக்க மாட்டார்கள். செய்திருக்க மாட்டார்கள். அதோவது என்னுடைய பெற்றோர்களே படத்தை தயாரித்திருந்தாலும் இந்த அளவிற்கு செலவழித்திருக்க மாட்டார்கள். ஆனால் தயாரிப்பாளர் லலித்குமார் என் மீதும், என்னுடைய குழுவினர் மீதும், அபார நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘கோப்ரா’வை உருவாக்கி இருக்கிறார்.

படத்தின் இசைக்காக ரஹ்மானை கேட்கலாமா? என கேட்டார். அவர் என்னை ஏதோ ‘பிராங்க் பண்ணுகிறார்’ என்று எண்ணி, நானும் சரியென்றேன். சில தினங்கள் கழித்து ரகுமானை அவர்களது வீட்டில் சந்தித்து கதையை சொல்லுங்கள் என சொன்னார். எனக்கோ அவரை சந்தித்து அவருடன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. கதையை விவரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவரை அவரது வீட்டில் சந்தித்த உடன், கதையை சொல்ல தயாரா? என கேட்டார். நான் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். எடுத்துக் கொள்ளலாமா? எனக் கேட்டேன். பிறகு கதையை விவரிக்க தொடங்கினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. இசையமைக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு ஐந்து பாடல்கள் ‘கோப்ரா’விற்காக வழங்கி இருக்கிறார். ஒவ்வொன்றும் அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு தருணங்களும் மறக்க இயலாதவை. அவரின் பேரன்பை கண்டு வியந்திருக்கிறேன். பின்னணி இசையில் நீங்கள் நிகழ்த்தி இருக்கும் மாயஜால தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்.

இர்ஃபான் பதான், அவரை சந்தித்து கதையை சொன்னபோது, என்னால் நடிக்க முடியுமா? எனக் கேட்டார். உங்களால் முடியும் என்று நம்பிக்கை அளித்தேன் அத்துடன் அவருக்காக தமிழ் மொழி பயிற்சியாளர் ஒருவரை நியமித்து, தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்பித்தோம். உடன் நடிப்பு பயிற்சியையும் அளித்தோம். சில தினங்களிலேயே தமிழ் மொழி உச்சரிப்பை தெளிவாக உச்சரித்து நடித்து அசத்தினார்.

‘கே. ஜி. எஃப்’ படத்தின் முதல் பாகம் வெளியாகி இருந்த நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியை சந்தித்தோம். அந்தப் படத்திற்கும், ‘கோப்ரா’ படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அவரின் வேறு காணொளிகளை கண்டு, அவரின் திறமைக்காகவே இதில் நடிக்க ஒப்பந்தம் செய்தோம். யாரை போல் ஆக வேண்டும்? எனக் கேட்டால், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரை போல் தொடர்ந்து வெற்றியை அளித்த இயக்குநர் போல் ஆக வேண்டும் என சொல்வேன். இதன் காரணமாகவே இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவரிடம் நடிக்க கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார். படத்தில் ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ஆனந்தராஜ்.. என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் ஓரிரு காட்சியில் நடித்திருந்தாலும். முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் திரையில் கண்டு உற்சாகப்படுத்துவீர்கள்.

படத்தில் நாயகனான சீயான் விக்ரம் அவர்களை சந்தித்து கதையை விவரித்த போது, மௌனமாக கேட்டார். படப்பிடிப்பு தளத்தில் நான் எந்த காட்சியை விவரித்தாலும், என் எதிர்பார்ப்பை கடந்து, அந்த காட்சியை வியக்கும் அளவிற்கு நடிப்பார். அவரின் நடிப்பு திறமையை கண்டு எனக்குள் சிறிய பொறாமையே ஏற்படும். நான் 50 சதவீத அளவிற்கு நேர்த்தியை எதிர்பார்த்தால்… அவர் 100% அளித்து அசத்துவார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கும், அவருக்கும் இடையே சிறிய போட்டியே நடைபெறும். அதில் அவரே வெற்றி பெறுவார். அப்படியொரு ஒரு பர்ஃபெக்ஸனிஸ்ட். படப்பிடிப்பின் போது எனக்கு உதவியாக பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. ஏனெனில் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றபோது அங்கு சீதோஷ்ண நிலை மைனஸ் முப்பது டிகிரி. கடந்த 30 ஆண்டுகளில் மோசமான பருவநிலை என்று அவர்கள் தெரிவித்தார்கள் இந்த சூழலில் நாங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அதிக குளிர் காரணமாக பத்து நிமிடத்திற்கு மேல் பணியாற்றிய இயலாது. அதற்கு மேல் பணியாற்றினால் மூக்கிலிருந்து ரத்தம் வழியும். இத்தகைய கடினமான உழைப்பை வழங்கி, இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதற்காக உதவியாளர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

‘கோப்ரா’  படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

“ இந்த படத்தின் பதினைந்து நிமிட காட்சிகளைப் பார்த்துவிட்டேன். இந்த படம் பெரிய வெற்றியைப் பெறும், விக்ரம் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எப்படி அவரது ரசிகராக இருந்து இயக்கி வெற்றிப் பெற்றாரோ, அதே போல் இந்த கோப்ரா படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து, விக்ரமின் ரசிகராகயிருந்து இயக்கியிருக்கிறார். அதனால் இந்த படமும் விக்ரம் படத்தைப் போல பெரிய வெற்றியைப் பெறும். படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு வாழ்த்துகள். இயக்குநர் அஜய்க்கு நான் முதலில் சம்பளம் வழங்கியதாக கூறினார். அதற்கு பிறகு உங்களது சம்பளம் உயர்ந்துவிட்டது- கோப்ரா படத்திற்கு பிறகு மேலும் உயரும். சம்பளத்தை அதிகமாக உயர்த்திவிடாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகர் சீயான் விக்ரம் பேசுகையில்,

”கடந்த சில தினங்களுக்கு முன் இதயத்தில் சின்னதாக ஒரு அசௌகரியமான உணர்வு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி விட்டேன். அதற்குள் சமூக வலைதள பக்கத்தில் விரும்பத்தகாத விசயங்கள் நடந்தன. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் எனக்கு நெருக்கமானவர்கள் பலர் பதறி அடித்து விசாரித்தார்கள். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். இதற்காகவே இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன்.  என்னுடைய ரசிகர்கள், நண்பர்கள் அவர்களின் ஆதரவும், ஆசியும் இருக்கும் வரை எனக்கு எதுவும் நடைபெறாது. எனக்கு 20 வயதில் விபத்து ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அதன் போது காலை அகற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது, மன உறுதியுடன் போராடி, அதிலிருந்து மீண்டிருக்கிறேன். அதனால் தற்போது நடந்தவை எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. நான் எப்போதும் சினிமாவுக்காக தான் இருக்கிறேன். சினிமா மட்டும் தான் என் உயிர். வேறு எதுவும் எனக்குத் தெரியாது. பல ஆண்டுகளுக்கு முன் ‘சோழா டீ’ என்ற ஒரு விளம்பரத்தில் நடித்தேன். அதில் நான் ஒரு சோழராஜனாக நடித்தேன். அதற்கு திலீப் என்று ஒரு இளைஞன் இசையமைத்தார். ஆனால் இன்று அதே ஆதித்ய கரிகாலனாக, மிகப்பெரும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கிறேன். அப்போது திலீப்பாக இருந்தவர், தற்போது ஏ ஆர் ரகுமானாக மாறி இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று இருக்கிறார்.

நானும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறேன். சில தருணங்களில் நானும் ஆஸ்கார் விருதைப் பெறவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்  இதற்கு காரணம் ஏ . ஆர். ரஹ்மான் சார் தான்.  இங்கிருந்து பணியாற்றினாலும் ஆஸ்காரை வெல்லலாம் என நிரூபித்தவர். இதன் மூலம் நமக்குள் ஒரு கனவு இருந்தால்… ஒரு லட்சியம் இருந்தால்… அதற்காக கடினமாக உழைத்தால்… யாராக இருந்தாலும் மிகப் பெரிய உயரத்தை எட்ட முடியும். நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவிற்கான எல்லையைத் தொட முடியும். இதற்கு ஏ ஆர் ரகுமான் சிறந்த உதாரணம். இவர் இந்திய நாட்டின் பெருமை. வாழும் சகாப்தம். லிவிங் லெஜன்ட். அவருடைய இசைக்கு அனைவரையும் போல் நானும் ஒரு ரசிகன். அவர் ‘கோப்ரா’ படத்தில் தன்னுடைய பங்களிப்பை வழங்கியதற்காக, அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் சிக்கலான காட்சி அமைப்புகள், நுட்பமான கதாபாத்திர உணர்வுகள், இதனை ஏ ஆர் ரகுமான் அவர்களை தவிர வேறு யாராலும் இசையால் நிறைவடைய செய்ய இயலாது என இயக்குநர் அஜய் ஒவ்வொரு முறையும் என்னிடம் ரகுமானை பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்.

தயாரிப்பாளர் லலித் குமார், எனக்கு அற்புதமான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். எல்லா நடிகருக்கும் நல்லதொரு கதை அமைய வேண்டும். அதனை இயக்குவதற்கு நல்லதொரு இயக்குநர் மற்றும் குழு வேண்டும். இதனை உருவாக்கி கொடுத்த தயாரிப்பாளர் லலித் குமார் அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘கோப்ரா’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வெளியிடுகிறது என்றவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வெற்றி உறுதி என்பதால் சந்தோஷமாக இருக்கிறேன். இதற்காக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இர்ஃபான் பதான் எப்போதும் எனக்கு ஹீரோ தான். அவர் பெஸ்ட் ஆல்ரவுண்டர். இந்தப் படத்திலும் ஏராளமான சிக்ஸர்களை அடித்திருக்கிறார். மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ இந்த படத்தில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனந்த்ராஜ், கே எஸ் ரவிக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோபோ சங்கர் என ஏராளமான நட்சத்திரங்களுடன் பணியாற்றியது மறக்க இயலாத மகிழ்வான அனுபவம்.

நான் முதன்முதலாக ஏற்றிருக்கும் சிக்கலான கதாபாத்திரம் இது. படத்தில் ஏழு கேரக்டர்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் பின்னணி பேசுவதில் வித்தியாசம் காட்ட வேண்டும் என இயக்குநரின் வேண்டுகோளை ஏற்று, நிறைய மெனக்கடல் இருந்தது. இது கதாபாத்திரங்களைப் பற்றிய கதை கிடையாது. முழுக்க முழுக்க எமோஷனலை அடிப்படையாகக் கொண்டு உருவான கதை. ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நுட்பமாக செதுக்கியிருக்கிறார். இதற்காகவே மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். ரசிகர்களின் அன்பும், ஆதரவும் இருக்கும் வரை எனக்கு எல்லாமே வெற்றியாகத்தான் அமையும். ரசிகர்கள் காட்டும் பேரன்பிற்கு பதிலளிக்க என்னிடம் வார்த்தை இல்லை. ”நீங்கள் இல்லையென்றால் நான் இல்லை”. என்றார்.