டேனி விமர்சனம்

211

மோசமான திரைக்கதைக்கு சிறந்த உதராணமாக டேனி படம் உள்ளது. இயக்குநர் விரும்புவதால் படத்தில் விஷயங்கள் நடக்கிறது. காட்சிகளின் கோர்வை சரியில்லை. பதவி உயர்வு கிடைத்த குந்தவைக்கு(வரலட்சுமி சரத்குமார்) தன் இளம் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபரின் அம்மா நன்றி சொல்கிறார். இந்த காட்சி குந்தவையின் வீட்டில் பகல் நேரத்தில் நடக்கிறது.

வீட்டிற்குள் இருக்கும் குந்தவையின் சகோதரி மதி பெருமையுடன் சிரிப்பதை காட்டுகிறார்கள். அடுத்த நொடியே குந்தவையும், மதியும் இரவில் எங்கோ இருக்க, பைக்கில் வந்த இரண்டு பேர் அவர்களை தாக்குகிறார்கள்.

கதையின் ஓட்டம் என்பது டேனி படத்தில் மிஸ் ஆகிறது. கதையை சொல்வதற்கு பதில் பிளாட் பாயிண்ட்டுகளை சொல்லியிருக்கிறார்கள். காட்சி ஒன்று- நாய் அறிமுகம். காட்சி இரண்டு- நாயை கையாளும் நபரின் அறிமுகம். காட்சி மூன்று- கிரைம். காட்சி நான்கு- நாயை கையாள்பவரை கொல். காட்சி 5- ஹீரோயின் அறிமுகம். காட்சி 6- ஹீரோயினை கொலை குறித்து விசாரணை செய்ய வைக்க வேண்டும். காட்சி 7- க்ளூ 1 என்று படம் செல்கிறது.

கதாபாத்திரங்களும் இப்படித் தான் செல்கிறது. விசாரணை பர்சனலாக மாற போலீஸ் அதிகாரியின் அப்பாவி சகோதரி சாக வேண்டும். முக்கியமான கதாபாத்திரமாக ஒரு நாய், போதைப் பொருளுக்கு அடிமையான வில்லன், அவ்வப்போது வந்து நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்யும் நகைச்சுவை நடிகர்கள். இந்த கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை.

கதையை வரலட்சுமி தன் தோளில் தாங்க வேண்டும் என்று அவர் பொறுப்பில் விட்டுவிட்டார் இயக்குநர். கதாபாத்திரமாகவே மாறியுள்ள வரலட்சுமியால் கூட படத்தை காப்பாற்ற முடியவில்லை. காரணம் அவர் கதாபாத்திரமே வலுவாக அமைக்கப்படவில்லை. இயக்கம் சுமார் ரகம் தான். படம் துவங்கிய 15வது நிமிடத்திலேயே கொலை எப்படி நடந்தது என்பதை பார்வையாளர்கள் கண்டுபிடிக்கத் துவங்கிவிடுகிறார்கள். பார்வையாளர்களுக்கு உதவி செய்ய நாய் கூட இல்லை. ஆக டேனி, ரொம்ப டல்.