சென்னை”
தமிழ் திரை உலகில் பேயை வைத்து ‘ யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர்.
இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்,.
” திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ கிரீன் எனும் பிரபலமான பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது அனைத்து நடிகைகளின் விருப்பமாக இருந்தது. பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்க பயமே’ படத்தை திரையரங்குகளில் பார்த்து, விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அவரது இயக்கத்தில், அதிலும் பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். பேயை வைத்து பயமுறுத்தாமல் சிரிக்க வைத்தவர் இயக்குநர் டீகே. அதனால் அவரது இயக்கத்தில் ‘காட்டேரி’ படத்தில் நடித்ததை சந்தோசமாக நினைக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது என்னை பற்றி இயக்குநர் பெருமிதமாக பேட்டி அளித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். சினிமா மீது இயக்குநர் டீகேக்கு இருக்கும் காதல் அலாதியானது. இலங்கையில் படப்பிடிப்பு நடந்தபோது ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறாது. ஏனெனில் பருவநிலை அப்படி. அதனால் அங்கு நடைபெற்ற படப்பிடிப்பு அனுபவம் மறக்க இயலாது” என்றார்.
இயக்குநர் டீகே பேசுகையில்,
” இந்த படத்தின் தொடக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு திரையுலக பிரபலங்களுக்கு திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர்களுக்கு விவாகரத்தும் பெற்றுவிட்டார்கள். அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்ற மேலும் ஒரு திரையுலக பிரபலத்திற்கு திருமணமாகி, குழந்தை பிறந்து, அந்த குழந்தை கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டது. அந்த குழந்தை, ‘மாமா.! காட்டேரி எப்போது வெளியாகும்?’ என என்னிடம் கேட்டிருக்கிறார்.
படத்தை தொடங்கும் முன் தயாரிப்பாளர் நான் கேட்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆனால் அவர் ஒரு பட்ஜெட்டையும் நிர்ணயித்தார். படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் அனைவரும் எனக்கு புதிது. நடிகை ஆத்மிகா, நடிகர் வைபவ். ஆனால் நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் என்னுடைய எதிர்பார்ப்பிற்கு மேலாக தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி படப்பிடிப்பை நிறைவு செய்தனர். நான் பலமுறை தயாரிப்பாளர் நான் ஞானவேல் ராஜாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சூழலை பக்குவமாக எடுத்துக் கூறி, என்னை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியுடன் காத்திருக்க வைத்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ‘காட்டேரி’ வெளியாகி, ரசிகர்களை சந்தித்து, வெற்றி பெறும்.” என்றார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில்,
” சின்ன வயதில் நடித்த படம். இயக்குநர் டீகே இயக்கத்தில் வெளியான ‘யாமிருக்கே பயமே’ படத்தை பார்த்து, சிரித்து சிரித்து ரசித்திருக்கிறேன் அவரின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், முழு கதையையும் கேட்டேன், பிடித்திருந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது, ஒரே வாகனத்தில் நானும், ஆத்மிகாவும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது அந்த ஆசை ‘காட்டேரி’ படத்தில் நிறைவேறி இருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் டீகே பேயாக உழைத்தார். படப்பிடிப்பு நடைபெற்ற சில இடங்களில் அங்கு நிலவும் பருவநிலை எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்தில் என்னுடைய சகோதரியாக மான்சி என்றொரு நடிகை நடித்திருந்தார். அவரும் நேர்த்தியாக ஒத்துழைப்பு வழங்கினார்.” என்றார்.
நடிகர் வைபவ் பேசுகையில்,
” தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னிடம் பெரிய படம் செய்கிறோம் என்றார். ஆனால் இத்தனை நீண்ட காலம் ஆகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அது இந்த படத்தில் இயக்குநர் டீகே மூலம் நிறைவேறியது. .நடிகை வரலட்சுமி தற்போது மெலிந்து விட்டார். அவருடைய பேச்சும் தற்போது நிதானமாக இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு தொடக்கத்தில் அவர் வேகமாக பேசுவார். எனக்குப் புரியாது. அதனால் தற்போது பல விசயங்கள் மாற்றம் அடைந்திருக்கிறது. இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் இருள் சூழ்ந்த நேரத்தில் வரலட்சுமி ஒரு அடர் மஞ்சள் நிற சேலை உடுத்தி வந்தவுடன் பயந்துவிட்டேன். ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் ‘காட்டேரி’ படம் வெளியாகிறது. அனைவரும் கண்டு களித்து ஆதரவு தர வேண்டும்.” என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில்,
”காட்டேரி” படத்துடன் நான்காண்டு கால அனுபவம் எனக்கிருக்கிறது. என்னுடைய மனைவிக்கு பிறகு நீண்ட செய்தியை அனுப்புவது இயக்குநர் டீகே தான். அதில் ‘உங்களுக்கு நல்ல நேரமே என்னுடைய படத்தின் மூலமாகத்தான் கிடைக்கும்’ என்பது கூட இருக்கும். ஆனால் அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நல்ல நேரம் தொடங்கிய பிறகுதான் இந்த ‘காட்டேரி’ வெளியாகிறது. இந்தப் படம் இயக்குநர் டீகே மற்றும் அவரது குழுவினரின் கடுமையான உழைப்புக்கு கிடைக்கும் பெரிய வெற்றி படமாக அமையும். டிஜிட்டல் தளங்கள் அறிமுகமாகி, பிரபலமான பிறகு ரசிகர்கள் நாங்கள் ஏன் திரையரங்கிற்கு சென்று படத்தை ரசிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். ‘கே. ஜி. எஃப்’, ‘விக்ரம்’ போன்ற பிரம்மாண்டமான தயாரிப்புகள், பிரம்மாண்டமான படைப்புகள் மூலம் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்து, ரசிக்க வைத்தனர். அது போன்றதொரு சூழலை குறைவான பட்ஜெட்டில் தயாரான ‘காட்டேரி’யும் உருவாக்கி இருக்கிறது. இயக்குநர் டீகே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வரவழைத்து ரசிக்கும் வகையிலான ஹாரர் காமெடி ஜானரில் ‘காட்டேரி’யை உருவாக்கி இருக்கிறார்.
அண்மைக்காலமாக பல பேய் படங்கள் வெளியாகி, சில வெற்றியையும், சில எதிர்பாராத தோல்வியையும் அளித்தது. ஆனால் இயக்குநர் டீகே அவர்களுடைய பிரத்யேக முத்திரையுடன் தயாராகி இருக்கும் ‘காட்டேரி’ ரசிகர்களை படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை உற்சாகமாக காண வைக்கும். ‘காட்டேரி’ படத்தில் பணியாற்றிய இயக்குநர் டீகேவுக்கு பிறகு பொறுமையுடன் காத்திருந்த நடிகர் நடிகைகளுக்கு இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு பல தடைகளைக் கடந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் வெளியாகும் ‘காட்டேரி’ படத்தில் நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மனாலீ, பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.