இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”
சென்னை:
Rockfort Entertainment தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வினில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது..,
எனது உதவியாளனாக இருந்த ஸ்ரீகணேஷ் அறத்துடன் வாழும் நபர். அவனுடைய முதல் படம் மிகச்சிறப்பான ஒன்றாக அமைந்தது. படத்தின் திரைக்கதையில் எப்பொழுதும் ஒரு உணர்வு இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் படம் ரசிகர்களுடன் இணைந்து பயணிக்காது. ஶ்ரீகணேஷ் உணர்வுபூர்வமான மனிதர், அவருடைய அந்த எண்ணங்கள் தான் இந்த திரைக்கதையை அமைக்க உதவியுள்ளது. எனது உதவியாளர்கள் எப்பொழுதும் சிறந்த படம் தான் எடுப்பார்கள். இந்த படத்தில் அதர்வா பல பரிணாமங்களை காட்டியுள்ளார். பல தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தில் அறிமுகமாகிறார்கள். அனைவரும் இந்த படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும். நன்றி.
இயக்குனர் ஸ்ரீகணேஷ் கூறியதாவது..,
இந்த படத்தின் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய பயணம் கிடைத்தது. தயாரிப்பாளர் என்னுடன் ஆரம்பம் முதல் முடிவு வரை உறுதுணையாக இருந்தார். எனது முதல் படம் முடித்தவுடன் அதர்வா என்னை நம்பி என்னுடன் படம் பண்ண ஒத்துகொண்டார். இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய உதவியாய் இருந்தவர் அதர்வா. என் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குருதி ஆட்டம் காப்பாற்றும். இந்த திரைப்படம் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அறிமுக திரைப்படம், அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தின் நடிகர்கள் பலருக்கு இந்த படத்தின் மூலம் பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுபூர்வமான கதையாக இருக்கும். இந்த படம் ஆகஸ்டு 5 வெளிவருகிறது, படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
நடிகர் அதர்வா கூறியதாவது..,
இந்த படம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களால் தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பல இளம் நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஶ்ரீகணேஷ் இந்த கதையை சொல்லும் போது, கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அனைத்து கதாபாத்திரத்தையும் கோர்த்து, ஶ்ரீகணேஷ் நேர்த்தியான திரைப்படமாக மாற்றியுள்ளார். இந்த கதையை சிறப்பான ஒன்றாக மாற்றியது இசையமைப்பாளர் யுவன். இயக்குநர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். இந்த படம் ஆகஸ்டு 5 வெளியாகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
இப்படம் உலகமெங்கும் ஆகஸ்ட் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.