“பொய்க்கால் குதிரை” – திரை விமர்சனம்!

143

சென்னை:

விபத்து ஒன்றில் பிரபுதேவா மனைவியையும், ஒரு காலையும் இழந்து, எல்லா வேதனைகளையும் மறந்து விட்டு தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.  ஒரு காலை இழந்துவிட்ட அவருக்கு ஆறுதலாக இருக்கும்  தன்னுடைய மகளை நன்றாக  படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என நினைக்கிறார். இந்த சூழ்நிலையில் தன் மகளுக்கு ஒரு வித்தியாசமான நோய் ஏற்படுகிறது. அந்த  நோயை குணப்படுத்த  லட்சக் கணக்கில் பெரிய தொகை தேவைப்படுகிறது.

அந்த பணத்திற்காக தவறான பாதையில் சென்று பணம்  கொள்ளையடிக்க பிரபு தேவா முடிவு செய்கிறார். அவர் செல்லும் பாதையில் பல இன்னல்கள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அதைப்பற்றி  அவர் கவலைபடாமல் பெரிய ஆபத்தான வேலையைச் செய்து பணம் கொள்ளையடித்தாரா? அந்த பணத்தைக் கொண்டு தன் மகளைக் காப்பாற்றினாரா? என்பதுதான்  ‘பொய்க்கால் குதிரை’ படத்தின் மீதி கதை.

நடன புயலாக புகழ் பெற்று இருக்கும் பிரபு தேவா,  இந்த படத்தில் சிறந்த முறையில் தன் நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார். நடனப்புயல் எனப் பெயர் பெற்றவருக்கு ஒரு கால் இல்லை என்று கதை எழுதி, சிறப்பாக நடிக்க வைத்திருப்பது அனைவரையும்  ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார் இயக்குனர். ஒரு காலில் நடனம் ஆடுவது, சண்டைப்போடுவது, நடப்பது என்று அனைத்து இடங்களிலும் கவனமாக செயல்பட்டிருக்கும் பிரபு தேவா, தனது கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி  படத்திற்க்கு பலம் சேர்த்திருக்கிறார். அந்த ஒரு காலிலும் சிங்கிள் என்கிற பாடலுக்கு அவர் ஆடியிருக்கும் நடனம்  மிகவும் சிறப்பு!

வரலட்சுமி சரத்குமாரின் கம்பீரமான நடிப்பு, மற்றும் அவரது ஆளுமை படத்துக்குப் பலம் சேர்க்கிறது. இவர் ஏற்கனவே நடித்த படங்களைக் காட்டிலும், இப்படத்தில் நிதானமாக பேசி, சிறப்பாக நடித்து தன்  பணியை செவ்வனே செய்து இருக்கிறார்.

ரைசா வில்சனுக்கு நடிப்பில் பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த பணியை நிறைவாக செய்திருக்கிறார். அவரின் கதாபாத்திரமும் அவர் நடிப்பும் ஓகேதான்.

வரலட்சுமியின் கணவராக வரும் ஜான்கொக்கேன் கதாப்பாத்திரம் யூகிக்கும்படி இருந்தாலும், எதிர்பார்க்கக் கூடியதுதான் என்றாலும் அதை தன் நடிப்பில் , கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்து நிறைவு செய்திருக்கிறார்

காமெடி நடிகராக வலம் வந்த ஜெகனுக்கு இந்த படத்தில், நாயகனின் நண்பராக கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  அவரும் நடிப்பில் தன் பொறுப்பை உணர்ந்து நடித்து இருக்கிறார். ஒரு  சில காட்சிகளில் மட்டும் வரும் ஷாம், படத்தின் இரண்டாம் பாதிக்கு வித்திட்டு செல்கிறார்.

பிரபு தேவாவின் நடனத் திறமையை பின்னுக்கு தள்ளிவிட்டு, அவரிடம்  உள்ள நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கும் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமாரை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும். அவரை ஒற்றைக்காலுடன் நடிக்க வைத்து கதையில் வரும் திருப்புமுனைகள் படத்தின்  இறுதி காட்சிகள்வரை விறுவிறுப்பாக நகர்த்தி சென்று பிரபுதேவா நடந்தவற்றை விவரிக்கும் காட்சி அனைவரையும் கைத்தட்ட வைக்கிறது.

இமானின் இசையில் பாடல்கள் ரசிக்க  வைக்கின்றன, பின்னணி இசையிலும் படத்திற்க்கு பலம் சேர்த்து இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பள்ளு, நாயகனின் பாத்திரத்திற்கேற்ப ஒளியமைப்புச் செய்து காட்சிகளைப் படமாக்கியிருக்கியிருப்பது சிறப்பு. ஒற்றை காலுடன் இருக்கும் பிரபு தேவாவை காட்டிய விதம் ஆச்சரியம் அளிக்கிறது.

மொத்தத்தில், ‘பொய்க்கால் குதிரை’  படம் அனைவரையும்  கவரும் என்பது உறுதி.

ரேட்டிங் 4/5