சென்னை:
கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். அத்துடன் ‘விருமன்’ படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார்.
‘விருமன்’ படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவிற்கும், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியனுக்கும், படத்தின் நாயகனான கார்த்திக்கும் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வைரக்காப்பினை பரிசாக அளித்தார். இந்த படத்தின் இயக்குநரான முத்தையாவிற்கும் வைர மோதிரத்தை பரிசளித்து உற்சாகப்படுத்தினார்.
நடிகர் சூர்யா ‘விக்ரம்’ படத்தில் நடித்ததற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை பரிசாக பெற்றிருந்தார் என்பதும், தற்போது ‘விருமன்’ படத்திற்காக விநியோகஸ்தர் சக்திவேலனிடமிருந்து வைர காப்பினை பரிசாக பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.