11 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கும் யுவன் சங்கர் ராஜா!.

96

சென்னை:

யுவன் ஷங்கர் ராஜா மீதும் அவரது இசையின் மீதும் ரசிகர்கள் கொண்டுள்ள அன்பிற்கு எல்லையே இல்லை. மலேசியாவில் நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 45 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்ததே இதற்கு சான்று. மலேசியாவில் இதுபோன்ற ஒரு சாதனை நடப்பது இதுவே முதல் முறை. அது மட்டுமின்றி, மலேசியாவில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இசை நிகழ்ச்சி நடத்திய ஒரே கலைஞர் யுவன் மட்டும் தான். யுவன் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் பேரன்பை இது காட்டுகிறது. இந்த உற்சாகம் மற்றும் வரவேற்பை பார்த்து, உலகம் முழுவதும் குறைந்தது ஏழு இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு லிட்டில் மேஸ்ட்ரோ அணுகப்பட்டுள்ளார்.

திரையுலகில் யுவன் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யுவன்-25 என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்வு கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாட்டா அரங்க வளாகத்தில் நடத்தப்பட்டது. இரண்டு நாள் இசை நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பில் மிகவும் மகிழ்ச்சியடைந்த யுவன் சமூக ஊடகம் வாயிலாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். சென்னையில் விரைவில் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக சமீபத்தில் யுவன் அறிவித்திருந்தார். இந்த கச்சேரிக்கு ‘யு & ஐ’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும், செப்டம்பர் 10-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கு அரைஸ் என்டர்டெயின்மென்ட் ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறினார்.

அறிவிப்பு வெளியானது முதல், இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் களிக்க யுவனின் ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.  கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் யுவன். இந்த இசை மாயாஜாலத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளனர்.