“டைரி” திரை விமர்சனம்!

115

சென்னை:

காவல்துறையில் உதவி ஆய்வாளர் பயிற்சியை முடிக்கும் முன்பு அருள்நிதியிடம், முடிக்க முடியாத வழக்கு ஒன்றை பயிற்சியாக எடுத்து யார் வேண்டுமானாலும் அந்த வழக்கை முடிக்கலாம் என்று காவல்துறை உயர் அதிகாரி கூறுகிறார். இந்த சூழலில் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்படாமல் மூடிவைக்கப்பட்ட,   ஒரு வழக்கை அருள்நிதி தேர்வு செய்கிறார்., அது ஊட்டியில் 16 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு  என்று தெரிந்தும்,  அதை அவர் தேர்வு செய்கிறார். அது குறித்த விசாரணையை தொடங்கும் முன்பு அருள்நிதியை சுற்றி பல்வேறு மர்ம முடிச்சுகள் கொண்டதாக அந்த வழக்கு இருக்கிறது.  இருந்தாலும் தைரியமாக அந்த வழக்கை கையில் எடுக்கிறார். அந்த வழக்கை நோக்கி பயணிக்கும்  அருள்நிதி மர்மம் நிறைந்த வழக்கை முடித்தாரா? இல்லையா? இறுதியில் என்ன நடந்தது? என்பதைத் திகில் கலந்த முறையில்  சொல்லியிருக்கும் படம்தான் “டைரி”

காவல்துறை கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அருள்நிதி.  தனது அழுத்தமான பார்வையாலும், நிதானமான  நடிப்பாலும் அனைவரையும் கவர்கிறார். காதல் செய்யும் நேரத்திலும் குழப்பமான மனநிலையுடன் நடிப்பது பாராட்டுக்குறியது.  இப்படத்தில் தனது முகபாவனைகளை மாற்றி மிகச் சிறப்பாக  நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அருள்நிதி, தனது நடிப்பால் படத்திற்கு வேகத்தை சேர்த்திருக்கிறார். ஆக்‌ஷன், சண்டை காட்சிகளில் அதிரடியாக அமர்க்களப்படுத்தி இருக்கும் அருள்நிதி, காவல்துறை சம்பந்தப்பட்ட படங்களில் நடிப்பதை தவித்து சமுதாயத்திற்க்கு ஏற்ற அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்கின்ற மாதிரி  உள்ள கதைகளை தேர்வு செய்து  நடித்தால் கண்டிப்பாக முன்னணி நடிகர்கள் வரிசையில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து சஸ்பென்ஸ், மர்மம்,  த்ரில்லர் படங்களில் நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும்.  இருந்தாலும் காவல்துறை சம்பந்தப்பட்ட  கதைகளுக்கு முக்கித்துவம் கொடுத்து, அதற்கேற்ற கதாப்பாத்திரங்களில் நடிப்பதை பாராட்டலாம்.

கதாநாயகியாக நடித்திருக்கும் காவல்துறை உதவிஆய்வாளராக வரும் பவித்ராமாரிமுத்து தமிழ் திரையுலகிற்கு நல்வரவு என்றே சொல்லலாம்.  காவலர் வேடத்தில் அதிரடி காட்டுகிறார். காதல் காட்சிகளில் அளவாக நடித்திருப்பவர் தனக்கு  கொடுத்த பணியை செவ்வனே செய்து இருக்கிறார்.  நடிப்பிலும் அவர் குறை வைக்காமல் சிறப்பாக  நடித்திருக்கிறார்.

காவலராக நடித்திருக்கும் சாம்ஸ், பேருந்துப்பயணியாக வருகிற ஷாரா ஆகிய இருவருக்கும் மக்களைச் சிரிக்கவைக்கும் பொறுப்பு. அதை உணர்ந்து இருவருமே சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.கிஷோர், ஜெயப்பிரகாஷ், நக்கலைட்ஸ் தனம், தணிகை, சதிஷ் என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களுக்கு கொடுத்த வேலைக்கு தகுந்தவாறு நடித்திருக்கிறார்கள்.

கதை எழுதி இயக்கியிருக்கும் இன்னாசி பாண்டியன், சிக்கலான கதையை வித்தியாசமான திரைக்கதையுடன்  பயணித்தாலும், சில காட்சிகளில் தடுமாற்றம் ஏற்பட்டிருப்பது ஏன் என்பது புரியவில்லை.  இருந்தாலும் ரசிகர்களை குழப்பாமல்,  படத்தை சுவாரஸ்யமாக இயக்கி இருப்பது பாராட்டுக்குரிய விஷயமதான்.

இப்படத்தின் பெரும்பாலான இரவுக்காட்சிகளையும், , பேருந்துக்குள் சண்டைக்காட்சிகளையும்  அழகாக ஒளிப்பதிவு செய்து, படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் அரவிந்த்சிங்.

ரான் ஈதன் யோகனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் படத்தின் கதைக்களத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார். . மெலோடி பாடலும், அம்மா செண்டிமெண்ட் பாடலும் கேட்கும்படியாக இருக்கிறது.

மொத்தத்தில், ‘டைரி’ படம் ரசிகர்களைக் கவரும் விதத்தில் அருள்நிதி, இன்னாசிபாண்டியன் இருவரும்  வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு சொல்லாம்.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.

 

 

.