’கோப்ரா’ திரை விமர்சனம்!

135

சென்னை:

‘கோப்ரா’ படம் ஆரம்பிக்கும் காட்சியில் ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரஷிய அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகளை உலகமே அதிரக்கூடிய வகையில் பல வித வித்தியாசமான கெட்டப்புகளில் அவதரித்து, அவர்களை  கொலை செய்கிறார் விக்ரம். தொடர்ந்து இது மாதிரி கொலைகள் நடப்பதால் அதை விசாரிக்கும் இண்டர்போல் அதிகாரியாக வரும் இர்பான் பதான், மற்றும் தமிழக காவல்துறை முதல் சிபிஐ  வரை அவரைத் தேடுகிறது. இந்த சூழலில் விக்ரம் பற்றிய தகவல்களை யாரோ ஒரு மர்மமனிதர் இண்டர்போலிடம் அடிக்கடி தகவல் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார். கொலையாளி ஒரு கணித மேதாவி என்பதை ஒரு பெண்ணின் மூலம் கண்டுபிடிப்பதோடு, அதை வைத்தே குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் இர்பான் பதான். இப்படி பல கொலைகளை செய்யும் விக்ரம் பிடிபட்டாரா? அவர் ஏன் அந்தக் கொலைகளைச் செய்கிறார்? விக்ரம் குறித்துத் தகவல் தரும் அந்த மர்மமனிதர் யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு  ‘கோப்ரா’ படத்தின் மீதிக்கதை பதில் சொல்லும்.

விக்ரமை பொறுத்தவரையில் நடிப்பு என்று வந்து விட்டால் அவருக்கு நிகர் அவர்தான். இப்படத்தில் விக்ரம் பலவித வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கும்போது, அவருடைய கடினமான உழைப்பும், சிறந்த நடிப்பும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலத்தை  சேர்த்துள்ளது. ஒவ்வொரு கெட்டப் போடும்போது, அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக,  தன்னை வறுத்திக்கொள்வார்.  இந்த படத்தில் அவர் போட்டிருக்கும் ஏழு கெட்டப்புகளும் உண்மையிலேயே நம்மை ஆச்சரியபட வைக்கிறது. வித்தியாசமான பல கெட்டப்புகளுக்காக அவர் தன் உடலை வறுத்திக் கொண்டு,  நடிப்பை வெளிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. நடிப்போடு ஆக்‌ஷன் மற்றும் சண்டை காட்சிகளில் அசத்தியிருக்கிறார். படம் முழுக்க விக்ரமின் நடிப்பு ஆதிக்கம்தான். ஒன்றுக்கு இரண்டு வேடங்கள், பலவித தோற்றங்கள் என ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். கமலஹாசனுக்குப் பிறகு நடிப்புக்காக தன்னை அர்பணித்து கொண்ட ஒரே நடிகர் விக்ரம் என்று சொல்லலாம்.

விக்ரமை காதலிக்கும் கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் கேஜிஎஃப் ஸ்ரீநிதிஷெட்டி,  தனக்கு கொடுத்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். விக்ரம் அவரைப் புறக்கணிக்கும் இடங்களில் அவர் தவித்து நிற்கும்போது நமக்கே ஸ்ரீநிதிஷெட்டி  மீது அனுதாபம் ஏற்படுகிறது.. தமிழுக்கு புதுமுகமாக அறிமுகமாகியிருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு தொடர்ந்து தமிழில்  நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.  மீனாட்சி மற்றும் மிர்ணாளினி இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

சர்வதேசக் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான்பதான் நடிப்பில் அசத்திருக்கிறார்.  அவர் பல படங்களில் நடித்தவர் போன்று தன் முகபாவங்களை மாற்றி  நேர்த்தியாக மிகவும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ரோஷன்மேத்யூ, மற்றும் பத்திரிகையாளராக வரும் கே.எஸ்.ரவிக்குமார்,  இளவயது விக்ரமாக வரும் சர்ஜானோ காலித், ரோபோசங்கர், ஆனந்தராஜ், ஜான்விஜய் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பணியை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

ஒரு உன்னதமான தாயின் இரு மகன்களுக்கிடையே நடக்கும் பாசப்போராட்டத்தை மையமாகக் கொண்டு,  உலகத்தில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும்  தவறான செயல்பாடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அஜய்ஞானமுத்து. கதைக்காக பல ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் இயக்குநர் அஜய் ஞானமுத்து அதை காட்சிகளிலும் படமாக்க  அதிகம் மெனக்கெட்டிருப்பது படம் முழுவதும் தெரிகிறது.எல்லாச் செயல்களுக்கும் கணிதமே அடிப்படை எனும் கருத்தை வைத்து அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை காட்சிகளுக்குப் பலம் சேர்த்திருக்கிறது. ஆனால் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதை சற்று குறைத்து இருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் புவன் ஸ்ரீனிவாசன் ஒவ்வொரு காட்சிகளையும் பிரம்மாண்டமாக படமாகியிருக்கிறார். விக்ரமின் வித்தியாசமான மற்றும் பலவித தோற்றங்களும், அதை காட்டிய விதமும் சிறப்பாக உள்ளது. வெளிநாடுகளின் பிரம்மாண்டங்கள் ஆச்சரியபட வைக்கின்றன..

ஏ,ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைத்திருக்கின்றன. பின்னணி இசையிலும் பொறுப்புடன் மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

மொத்தத்தில் ‘கோப்ரா’ படம் மீண்டும் விக்ரம் நடிப்புக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

ரேட்டிங் 3.5/5

RADHAPANDIAN.