“கணம்” திரை விமர்சனம்!

100

சென்னை:

இசைத்துறையில் ஆர்வம் உள்ள கலைஞர் ஷர்வானந்த், வீட்டுத்தரகர் பணியில் இருக்கும் ரமேஷ் திலக்,  திருமணம் செய்து கொள்ள நினைக்கும் சதீஷ், இவர்கள் மூவரும் பள்ளியில் படிக்கும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்களாக வலம் வருகிறார்கள். இவர்கள் மூவருக்கும், தனித்தனியே பல தேவைகளும் ஆசைகளும் மனதில் இருந்தாலும்,  அவற்றை அடைய முடியாத சூழ்நிலையில் வாழ்க்கை இருக்கிறது. . இந்தச் சூழலில் காலம் கடக்கும் எந்திரத்துடன், அதாவது  டைம் மெஷினுடன், வரும் நாசர் அவர்களிடம் நீங்கள் கடந்த காலத்துக்குச் சென்று உங்கள் தேவைகளையும், ஆசைகளையும்  நிறைவேற்ற நான் உதவி செய்கிறேன் என்கிறார். அதை ஏற்றுக்கொண்டு,தன் சிறுவயதில் நடந்த தன் அம்மாவின் மரணத்தைத் தடுக்க முனைகிறார் ஷர்வானந்த். அது நடந்ததா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும் உன்னதமான படம்தான் “கணம்”

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்க வந்திருக்கும் ஷர்வானந்த் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு வலுச்சேர்க்க முயன்றிருக்கிறார். பள்ளிப்பருவத்தில் இழந்த தன் அம்மாவை டைம் மெஷின் மூலம் மீண்டும் பார்க்கும் காட்சிகளிலும் சரி, அம்மா மீது பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் சரி அவரது  நடிப்பு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. .அம்மாவை மீண்டும் இழந்து விடுவோமோ என்று தவிக்கும் காட்சிகளில் நடிப்பால் நம்மை கலங்க வைத்து விடுகிறார் ஷர்வானந்த்.

நாயகனின் நண்பர்களாக வரும் சதீஷ், ரமேஷ்திலக் ஆகியோர் கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருப்பதோடு அங்கங்கே சிரிக்க வைத்து படத்திற்கு சிறப்பு செய்து உதவியிருக்கிறார்கள்.  விஞ்ஞானியாக நடித்திருக்கும் நாசர், அமலாவின் கணவராக நடித்திருக்கும் ரவிராகவேந்தர் ஆகியோர் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.கதாநாயகி ரீத்துவர்மாவுக்கு அதிகமாக  வேலையில்லை என்றாலும் அவர் வருகிற காட்சிகளில்  நிறைவாகவே செய்திருக்கிறார்,

முப்பது ஆண்டுகளுக்குப்  பிறகு நடிக்க வந்திருக்கும் அமலா, ஓர் உண்மையான அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது உருவத்தில் சில மாற்றங்கள் இருந்தாலும் அவருடைய அடையாளமான புன்னகை மாறவேயில்லை. மென்மையான ஒரு உன்னதமான அம்மா கதாபாத்திரத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறந்த அம்மா நடிகை கிடைத்து விட்டார்.

ஜேக்ஸ் பிஜோயின் இசையில்,’ஒருமுறை என்ன பாரம்மா’ என்ற பாடல் நம் மனதை கவருகிறது. அம்மா மகன் பாசத்தைக் காட்டும்போது பின்னணி இசை அந்த உணர்வுகளுக்குப் பலம் சேர்க்கிறது.

சுஷித் சாரங்கின் ஒளிப்பதிவு கடந்த காலம் மற்றும் நிகழ் காலத்தை குழப்பம் இல்லாமல் காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஒவ்வொரு காலக்கட்டத்தையும் வேறுபடுத்திக் குழப்பமில்லாமல் காட்டியிருப்பது சூப்பர்.

அம்மா-மகன் பாசம் உள்ள படங்கள் நிறைய வந்திருந்தாலும், அது மாதிரி இல்லாமல், அதை மாறுபட்ட முறையில்  திரைக்கதை அமைத்து  இயக்கியிருக்கும் இயக்குநர் ஸ்ரீகார்த்திக், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார். அனைவருக்கும் பொதுவான அம்மா பாசம் உள்ள  கதையை கையிலெடுத்து இயக்குநர் ஸ்ரீகார்த்திக் வெற்றி பெற்றிருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘கணம்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 3.5/5

RADHAPANDIAN.