“கேப்டன்” திரை விமர்சனம்!

102

சென்னை:

வடகிழக்கு மாநிலங்களில் எல்லையில் பல ஆண்டுகளாக  மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வனப்பகுதிக்குள் மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் முடிவு செய்கிறது. அந்த இடத்தை ஆராய்ந்து தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு ராணுவத்திடம் அரசாங்கம் கேட்கிறது.  இந்த சூழலில் தடையில்லா சான்றிதழ் கேட்கும் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ள செல்லும் ராணுவ குழுவில் உள்ள அனைவரும் மர்மமான  முறையில் மரணமடைகிறார்கள்.  ராணுவ கேப்டனாக இருக்கும் ஆர்யா தனது தலைமையிலான ராணுவ குழுவை,  ராணுவ வீரர்கள்   எதற்காக கொல்லப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க அந்த வனப்பகுதிக்குள் அழைத்து  செல்கிறார். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிச்சி அடைய வைக்கிறது. அங்கு நடந்த மர்ம மரணங்களுக்கான காரணம் யார்? அதன் பின்னணி என்ன?என்பதை சொல்வதுதான் ‘கேப்டன்’ படத்தின் மீதிக்கதை.

ராணுவ கேப்டன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் ஆர்யா, நடிப்பில் கம்பீரத்தை காட்டுவதற்கு பதிலாக எப்போதும் விறைப்புடனே இருக்கிறார். ஏன் விறைப்பு என்று புரியவில்லை. இந்த படத்தில் ஆர்யாவின் நடிப்பில் சொல்கின்ற மாதிரி எதுவும் இல்லை.ஆர்யாவின் குழுவில் இருக்கும் ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் மற்றும் காவ்யா ஆகியோர் கொடுத்த பணியை சிறப்பாக  செய்திருக்கிறார்கள்.

ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு  அதிகமான வேலை இல்லை. சில காட்சிகளில் மட்டுமே வந்துபோகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன், இளமையாக இருப்பதோடு, நடிப்பிலும் அனைவரையம் கவனிக்க வைக்கிறார்.

எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு படத்தில் வரும்  ஆக்‌ஷன் காட்சிகளில் ஒரு உணர்வை கொடுத்திருப்பது மிகப்பெரிய பலம். டி.இமானின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை…சுமார் ரகம்தான். பின்னணி இசை கொஞ்சம்தான் கவனிக்க வைக்கிறது.

விநோதமான கொடூரமான விலங்கு போன்ற உயிரினம் என்று சொல்லிவிட்டு காட்சிக்குக் காட்சி வெவ்வேறு விதமான உயிரினத்தைக் காட்டுகிறார்கள். அவற்றின் இராணி என்று ஆக்டோபஸ் போல் ஒன்றைக் காட்டுகிறார்கள்.  கடைசியில் தொழிற்சாலைகளின் கழிவுகளால் உயிரினங்கள் பாதிக்கப்படுவது மற்றும் கனிம வளங்களுக்காக வனப்பகுதிகள் அழிக்கப்படுவது என கதை வேறு களத்திற்கு செல்கிறது. வனப்பகுதி என்றாலே ஏதாவது சில  உயிரினங்கள் அல்லது கனிமவளங்கள் ஆகியன கதையில்  வந்துவிடும். இயக்குனர் சக்தி செளந்தர்ராஜனின் இந்தக் கதையில் இவை இரண்டும் கலந்து வருகின்றன. புதுமையான கதை என்று நினைத்தால் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன், கதையையும் பல குழப்பங்களோடு என்ன சொல்வதென்றே புரியாமல்  முடித்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘கேப்டன்’ படம் ரசிகர்களை ஏமாற்றி விட்டது.

ரேட்டிங்  2.5/5

RADHAPANDIAN.