‘‘நாட் ரீச்சபிள்’’ திரை விமர்சனம்!

110

சென்னை:

காவல்துறை கண்ட்ரோல் அறைக்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. ஆனால், எதிர் முனையில் இருந்து எந்த குரலும் கேட்கவில்லை. உடனே அழைப்பு வந்த இடத்துக்கு காவல்துறை டீம் விரைகிறது. இந்த சூழலில் அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு பெண் காணாமல் போகிறார், அவரை தேடி செல்லும்  காவல்துறை துப்பறிந்து இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடிக்கிறார்கள். அந்த கொலைகளின் பின்னணி என்ன? எதற்காக கொலை செய்கிறார்கள்? காணாமல் போன பெண்ணை போலீஸ் கண்டுபிடித்ததா? இல்லையா? என்பதுதான் ‘நாட் ரீச்சபிள்’ படத்தின் கதை.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கதாநாயகன் விஷ்வா, அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவே இருக்கிறார். குறிப்பாக அவர் எந்தவித அலட்டல் இல்லாமல், மிக மென்மையாக நடித்திருக்கிறார்.  அவர் நிதானமாகவும் செயல்படுவது வழக்கு விசாரணையின் தன்மைகளை உணரவைக்கிறது. மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுபா இருவரும் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதை விசாரணை செய்யும் விதம் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. விஷ்வாவுக்கு எதிர்மறையாக எப்போதும் முகத்தில் கோபம் கலந்து பரபரப்பாக, சுறுசுறுப்பாக நடித்து இருக்கும் அவரின் கதாபாத்திரமும்  அனைவரின் கவனத்தையும்  ஈர்க்கிறது.

இவர்களுக்கடுத்து கவனிக்க வைக்கிற கதாபாத்திரம் மனநலம் பாதிக்கப்பட்டவராக வரும் சாய் தன்யா.  இப்படத்தின் தொடக்கத்தில் இருந்தே அவரை அடிக்கடி காட்டி வருகிறார்களே ஏன்  என்கிற ஐயத்துக்குக் கடைசியில் சிறப்பான விடை கிடைக்கிறது. அவரது கதாப்பாத்திரம் பற்றி காணும்போது அதிர்ச்சியடைய வைக்கிறது.

ரியா என்கிற வேடத்தில் நடித்திருக்கிற ஹரிதாஸ்ரீயும் தன் கதாப்பாத்திரத்தை  உணர்ந்து நடித்திருக்கிறார்.

காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லாபோஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்தி உள்ளிட்டோரும் தங்கள் பாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறார்கள். அனைவரும் தங்களது வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

சுகுமாரன்சுந்தரின் ஒளிப்பதிவில் படத்தின் கதைக்கு தகுந்தவாறு காட்சிகளை உணரமுடிகிறது. சரண்குமாரின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை தாழ்த்தாமல் அதிகரித்திருக்கிறது.

கதை எழுதி இயக்கியிருப்பதோடு படத்தொகுப்பும் செய்திருக்கிறார் இயக்குனர் சந்துரு முருகானந்தம். இப்படத்தின் கதையை பொறுத்தவரையில் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைக்களம்,  நம் வீட்டில் ஒரு பெண் இருந்தால் அவளுடன் பழகும் எந்த பையனையும் நம்பக்கூடாது என்கிற சூழ்நிலையில் அங்கு ஒரு பெண் இருந்தாலும் அவளையும் நம்பக்கூடாது என்ற தெளிவு நமக்கு எற்படுகிறது. அதே சமயம் சமூகத்தில் நடக்கும் சில சம்பவக்களால் ஏற்படும் விளைவுகளையும் மிக நேர்த்தியாக இயக்குநர் சந்துரு முருகானந்தம் படமாக்கியிருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘நாட் ரீச்சபிள்’ படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5

 

RADHAPANDIAN.