அதர்வா கதாநாயகனாக நடிக்கும் பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் படம் ‘டிரிக்கர்’

106

சென்னை:

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் படம் ‘டிரிக்கர்’. இதன் நாயகன் அதர்வா. நாயகி தான்யா ரவிச்சந்திரன். இசை ஜிப்ரான். இயக்கம் சாம் ஆன்டன். செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ஸ்ருதி கூறியதாவது:

“பிரபு தேவா நடித்த ‘லஷ்மி’, மாதவன் நடித்த ‘மாறா’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு நாங்கள் தயாரிக்கும் படம் ‘டிரிக்கர்’. எங்களுடைய முந்தையப் படங்களை மென்மையான கதைக் களத்தோடு தயாரித்தோம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தனிப்பட்ட விதத்தில் எனக்கு சண்டை படங்கள் அதிகம் பிடிக்கும். எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்புக்காக கதைகளை கேட்டபோது இயக்குநர் சாம் ஆன்டன் சொல்லிய கதை
பிடித்திருந்ததால் உடனே தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தோம். அதிக பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்துள்ளோம். இந்தப் படம் அதர்வா சினிமா பயணத்தில் முக்கியமான படமாக அமையும். அதர்வா கடினமான உழைப்பைக் கொடுத்தார். சண்டைக் காட்சிகள் அதர்வாவுக்கு பொருந்திப் போகும் அளவுக்கு கச்சிதமாக இருக்கும்.‘டிரிக்கர்’ படம், சண்டை படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும்” என்றார்.

இயக்குநர் சாம் ஆன்டன்  கூறியதாவது:

“தயாரிப்பாளர் ஸ்ருதி மேடம் அவர்களை முதன் முறையாக சந்திக்கும் போது அவருடைய அணுகுமுறை மிகவும் மென்மையாக இருந்தது. அவரிடம் எப்படி சண்டை படத்தின் கதையை சொல்வது என்று யோசித்தேன். அதே வேளையில் அவர்கள் நிறுவனம் இந்தியில் வெளியான ‘கமாண்டோ சீரிஸ்’ தயாரிப்புகளில் பங்கு வகித்ததை அறிந்தேன். சில நாட்களுக்குப் பிறகு நாம் இந்தப் படத்தை தயாரிக்கலாம் என்றார்.

தயாரிப்பாளர்  ஸ்ருதி மேடத்திடமிருந்து மிகச்சிறந்த ஒத்துழைப்பு கிடைத்தது. நான் பணியாற்றிய படங்களில் மிகச் சிறந்த தயாரிப்பாளர் ஸ்ருதி மேடம். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் இந்தப் படத்துக்கு என்று ஒரு பட்ஜெட் இருந்தது. ஆனால் படம் எடுக்கும்போது கூடுதல் பட்ஜெட் தேவைப்படும் என்று தெரிந்தது. தயாரிப்பாளர் படம் சிறப்பாக வர வேண்டும் என்பதால் முழு சுதந்திரம் கொடுத்து அதிக முதலீடு செய்தார். அந்த வகையில் ஸ்ருதி மேடம், படக்குழுவைச் சேர்ந்த கோகுல் ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தயாரிப்பு நிறுவனம்
என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்தார்கள், அதற்கு நியாயம் செய்திருப்பதாக நினைக்கிறேன்.

இது சண்டை படமாக இருந்தாலும் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் இருக்கும். குழந்தை கடத்தல் கதை தமிழ் சினிமாவுக்கு புதியது அல்ல. ஆனால் யதார்த்த வாழ்க்கையில் எந்த அளவுக்கு இந்த மாதிரியான சம்பவங்கள்  தொடர்பு உடையதாக இருக்கிறது என்பதை உண்மைத் தன்மையோடு சொல்லி இருக்கிறோம். கதைக்காக பல ஆய்வுகளை செய்தோம். கடத்தப்படும் குழந்தைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை உளவியல் பார்வையில் சொல்லி உள்ளோம்.

போலீஸ் துறையில் அன்டர் கவர் ஆபீஸராக வருகிறார் அதர்வா. அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். அப்பா மகன் கதையான இதில்அருண்பாண்டியன் சார் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதர்வா சண்டைக் காட்சிக்காக அதிக மெனக்கடல் எடுத்தார். ஐந்து சண்டைக் காட்சிகள்…ஒவ்வொன்றறையும் வித்தியாசமான கோணத்தில் சண்டை இயக்குநர் திலீப் சுப்பராயன் கம்போஸ் பண்ணிக் கொடுத்தார்.

ஜிப்ரான் இசை படத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக இருக்கும். கிருஷ்ணன் வசந்த் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் உச்சகட்ட காட்சிகள் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும்” என்றார்.