‘சினம்’ திரை விமர்சனம்!

98

சென்னை:

ஒரு நேர்மையான காவல்துறை உதவி ஆய்வாளர் அருண்விஜய், அவர் பாலக் லால்வாணியை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். காதல் திருமணம் செய்து கொண்ட  அவர்,  ஒரு குழந்தைக்கு தந்தையாக அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில்  அவருக்குத் திடீரென ஒருநாள் கடும்சோதனை ஏற்படுகிறது. தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற பாலக் லால்வாணி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அருண் விஜய் தன் மனைவியை தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்யும்போது, பாலக் லால்வாணி கொலை செய்யப்பட்ட தகவல் அவருக்கு கிடைக்கிறது. உடனே அங்கு செல்லும்  அருண்விஜய்,  தன் மனைவியின்  உடல் அருகில்  மற்றொரு ஆணும் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிச்சியடைகிறார். நெஞ்சு நடுங்கும் இந்த கொலைகளை கண்ட அவர், அக்கொலைகளை செய்த மர்ம நபர்களை கண்டுபிடித்தாரா? தன் மனைவி கொலை செய்யப்பட்டதன் காரணம் என்ன? என்பதை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சொல்லியிருப்பதுதான் ‘சினம்’ படத்தின் கதை!

மீசை இல்லாத நிலையிலும் காவல்துறை உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்திற்குரிய மிடுக்குடன் இருக்கிறார் அருண்விஜய். அவருடைய நடை உடை பாவனைகளில் கம்பீரமான நடிப்போடு, உணர்வுப்பூர்வமான நடிப்பாலும் கவர்கிறார். அதிரடி , ஆக்ரோஷமான  காவல்துறை அதிகாரியாக எவ்விதத் தொய்வுமில்லாமல், அவரது நடிப்பில் மிகச் சிறப்பாக கதாபாத்திரம் அமைந்து இருக்கிறது. காதல் காட்சிகளில் அனைவரையும் ரசிக்கவைக்கிறார். கதறி அழும் காட்சியில் நம் மனதை கலங்கவைக்கிறார். கோபத்தில் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும்போதும், தாயை இழந்து தவிக்கும் குழந்தையை சமாதனாப்படுத்த முயலும்போதும் வேதனை அதிகரிக்கிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் பாலக் லால்வாணி அறிமுகமாகும் காட்சிகளில் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார். இப்படத்தின் பாதி காட்சியிலேயே அவரது மரணம் அனைவரது மனதிலும் வேதனையை ஏற்படுத்துகிறது.

அருண் விஜய்க்கு தொல்லை கொடுக்கும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் சித்து சங்கரின் கதாபாத்திரமும் நடிப்பும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. உண்மையான காவல்துறை அதிகாரிதானா? என்று கேட்கும் விதத்தில் தோற்றத்திலும், நடிப்பிலும் இயல்பாகவே நடித்திருக்கிறார்.

தலைமைக்காவலராக நடித்திருக்கும் காளிவெங்கட் கவனிக்க வைக்கிறார். ஆணையராக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் கதாபாத்திரம் அளவாக அமைந்திருக்கிறது. ரேகா சுரேஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.கோபிநாத் கதையோடு பயணித்தது மட்டும் இன்றி, காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் அனைத்து காட்சிகளையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார். ஷபீரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருந்தாலும், பின்னணி இசையை கதைக்கு  ஏற்றவாறு பயணித்திருப்பதை பாராட்டலாம்.

ஆர்.சரவணனின் கதைக்கு, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஜி.என்.ஆர்.குமரவேலன் நேர்த்தியான படைப்பைக் கொடுத்திருக்கிறார். நேர்மையான அதிகாரியான  அருண் விஜய்யின் மனைவியை கொலை செய்தது யார்? என்ற கேள்விக்கு எந்தவித துப்பும் கிடைக்காமல் அருண் விஜய் திணறுகின்ற  காட்சிகளில், யாருக்கும் யோசிக்க  முடியாதபடி சிறப்பாக காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் குமரவேலன், படத்தின் இறுதிக்காட்சி வரை அந்த விறுவிறுப்பு குறையாமல் படத்தை நகர்த்தி செல்வது படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில், ‘சினம்’ அனைத்து ரசிகர்களின் மனதை கவர கூடிய ஒரு உன்னதமான திரைப்படம்.

ரேட்டிங் 3.5/5

RADHAPANDIAN.