‘ஆதார்’ திரை விமர்சனம்!

100

சென்னை:

ஒரு கட்டிடம் கட்டும் இடத்தில் மேஸ்திரியாக இருக்கும் தேனப்பனிடம் கொத்தனாராக பணிபுரிகிறார் கருணாஸ். இந்த சூழ்நிலையில் கருணாஸின் மனைவி ரித்விகாவுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அதனால் அவர் தன் மனையை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு ரித்விகா ஒரு அழகான குழந்தையை பெற்றெடுக்கிறார். குழந்தையை பெற்ற ரித்விகா திடீரென்று மருத்துவமனையில் இருந்து காணாமல் போய்விடுகிறார். அவருக்கு துணையாக இருந்த இனியா மர்மமான முறையில் மருத்துவமனையின் பின்புறத்தில் இறந்து கிடக்கிறார். ரித்விகாவை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் வேதனையடைந்த கருணாஸ் பச்சிளம் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு காவல்துறையை நாடுகிறார். அங்குள்ள உதவி ஆய்வாளரிடம் தன் மனைவி காணாமல் போன விஷயத்தை சொல்லி  புகார் கொடுக்கிறார். காவல்துறை அதிகாரியிடம் தன் மனைவியை கண்டுபிடித்து கொடுக்குமாறு கெஞ்சி அழுகிறார்.

இந்த சூழ்நிலையில் கருணாஸின் புகாரை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி கருணாஸை அழைத்து,  உன் மனைவி அவனது காதலனுடன் குழந்தையை விட்டு விட்டு ஓடிவிட்டாள். அதனால் அவளை நினைத்து வருந்தாதே! உன் குழந்தையை காப்பாற்றுவதற்கு உண்டான வழியை தேடு என்று கூறுகிறார்.  ஆனால் கருணாஸ் அதை நம்ப மறுத்து என் மனைவி அப்படிப்பட்டவள் கிடையாது. அவள் யாரையும் காதலிக்கவில்லை. அவள் என் மீது உயிரையே வைத்திருந்தாள். அப்படிப்பட்டவள் வேறு எவனோடு ஓடுவாளா? ஆகவே தயவு செய்து என் மனைவியை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கதறுகிறார். காவல்துறை அதிகாரிகள் கருணாஸ் மனைவியை கண்டுபிடித்து கொடுத்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘ஆதார்’ படத்தின் மீதி கதை.

காமெடி நடிகனாக இருந்த கருணாஸ் இப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். கட்டிட தொழிலாளியாக தத்ரூபமாக அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து இருக்கிறார். மனைவியை காணவில்லை என்று காவல்துறையினரிடம் அழுது கொண்டே புகார் கொடுப்பது நம் மனதை கலங்க வைக்கிறது. காவல்துறை அதிகாரியிடம் அடி வாங்கும் போது அனைவரையும் அனுதாபப்பட வைக்கிறார். இனி கருணாஸ் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கருணாஸ் மனைவியாக நடிக்கும் ரித்விகா தனது நடிப்பு பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

கருணாஸ் மனைவியாக  நடித்திருக்கும் ரித்விகா குழந்தை பிறக்கும் முன் படும் அவஸ்தையான நடிப்பு அனைவரையும் கவர்கிறது. இன்னொரு நடிகையான இனியா சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

காவல்துறையில் உள்ள சிலர் நல்ல உள்ளம் படைத்தவர்களாக இருப்பார்கள் அல்லவா? அது போல ஏட்டாக நடிக்கும் அருண்பாண்டியன் தான் செய்த தவற்றை உணர்ந்து கடைசியில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மரணம் அடைவது வேதனையாக இருந்தாலும் அவர் சோகமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். உதவி போலீஸ் கமிஷனராக உமர் ரியாஸ் காணும் ஒரு முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக பாகுபலி பிரபாகர் மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், “தேன் மிட்டாய்..மாங்கா துண்டு” பாடல் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதையோடு சிறப்பாக அமைத்து இருக்கிறார்.

இந்த கதைக்கு தகுந்தபடி காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி, கதாப்பாத்திரங்களை இயல்பாக காட்டியிருப்பதோடு, கதைக்களத்தோடு நம்மையும் கவனிக்க  வைக்கிறார்.

காவல்துறையில் உள்ள அதிகாரிகள் செய்யும் அட்டுழியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, இந்த  கதையை அழுத்தமாக சொல்ல முயற்சித்து, அவர்களைப்பற்றி எதுவும் சொல்லாமல் கதையை   முடித்து இருக்கிறார் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார். ஒரு காமெடி நடிகரை குணசித்திர நடிகராக மாற்றியதை இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில், ‘ஆதார்’ படம் சமுதாயத்தில் நடைபெற்ற சம்பவங்களை உணர்வுபூர்வமாக சொல்கிறது.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.