சென்னை:
நமது நாட்டில் குற்றங்கள் நடந்தால் அதை காவல்துறையை அதிகாரிகள் கண்டுபிடித்து தண்டனை வழங்குவார்கள் ஆனால் காவல்துறையில் உள்ளவர்களே குற்றம் செய்தால் அதை யார் கண்டுபிடிப்பார்கள். அந்த மாதிரியான குற்றவாளிகளை கண்டுபிடித்து உளவு பார்ப்பதற்காக தனியாக ஒரு போலீஸ் படையை அமைக்கிறார்கள். அந்த போலீஸ் படையில் அழகம்பெருமாள் தலைமையில் இயங்குகிறது. இந்தக் குழுவில் அதர்வா, சின்னிஜெயந்த், முனீஷ்காந்த், அறந்தாங்கி நிஷா ஆகியோர் உடன் இருந்து பணியாற்றுகின்றனர்.
அப்போது நேர்மையான ஒரு உண்மையான இளம் போலீஸ் அதிகாரியாக ரகசிய போலீஸ் படையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு குற்றம் செய்தவர்களை கண்டுபிடிக்க அதர்வா முயலும்போது , ஒரு பெரிய கடத்தல் கூட்டம் அனாதை இல்லத்தில் இருந்து குழந்தைகளை கடத்தி கண்டெய்னர் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்துவது தெரிகிறது. இதுகுறித்து அழகம்பெருமானிடம் அதர்வா கூறும் போது அவர் தற்போது எதிலும் ஈடுபடாதே! நான் சொல்லும் போது அவர்களை கைது செய்யலாம் என்கிறார். ஆனால் அதர்வா அழகம்பெருமானின் கட்டளையை மீறி குழந்தைகளை கடத்தும் கடத்தல்காரர்களின் இருப்பிடத்திற்கு சென்று, ஆதாரத்துடன் அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அதர்வா, அந்த குழந்தைகளை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் ‘ட்ரிகர்’ படத்தின் மீதி கதை.
முன்னாள் போலீஸ் அதிகாரியான தனது அப்பா மீது விழுந்த களங்களத்தை போக்க வேண்டும், என்ற எண்ணத்தில், ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் அதர்வா, ஆக்ஷன் காட்சிகளில் காட்டும் அதிரடியால் நேர்மையான போலிஸ் என்பதை தன் நடிப்பால் நிரூபித்து காட்டியிருக்கிறார்.அதே சமயம் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதில் அதர்வா காட்டும் தீவிரமும், அதில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் படம் பார்க்கும் அனைவரையும் சீட் நுனியில் அமர வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் அவருடைய வேகம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. விறுவிறுப்பான வேகத்தோடு விவேகத்தையும் சேர்த்து அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதைக்கு ஏற்றவாறு கதையை உணர்ந்து அதற்கேற்றவாறு உழைத்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரனுக்கு, வேலை குறைவு என்றாலும், அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நிறைவாகவே நடித்திருக்கிறார்.
அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக, அதர்வாவின் தந்தையாக வயதிற்கேற்ற கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை அருண்பாண்டியன் வெளிப்படுத்தி இருப்பதில் கதையில் அவருக்கு நல்ல பங்கு உள்ளது. அவர் ஏன் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டார். எந்த சம்பவத்தால் அப்படி ஆனது என்பதுதான் கதையின் முக்கியமான கரு.
அதர்வாவின் அம்மாவாக நடித்திருக்கும் சீதா, போலீஸ் கமிஷ்னராக நடித்திருக்கும் அழகம்பெருமாள், முனீஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களுடைய பணியை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.
வில்லனாக வரும் ராகுல்தேவ்ஷெட்டி, நடிப்பில் அடக்கி வாசித்தாலும்,.பார்ப்போர் அனைவரின் இதயத்தையும் படபடக்க வைக்கிறார்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும், பின்னணி இசை படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிகம் மெனக்கெட்டிருப்பதோடு, இரண்டு வேங்களுக்கு மத்தியில் அதர்வாவின் கார் மாட்டிக் கொள்ளும் சேஸிங் காட்சியை பிரமிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.
காவல்துறை தொடர்பான கதைகள் உள்ள படங்கள் நிறைய வந்திருந்தாலும், இதுவரை காவல்துறை பற்றி சொல்லப்படாத ஒரு விஷயத்தை முக்கியத்துவமாக வைத்துக்கொண்டு கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சாம் ஆண்டன், படத்தை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நகர்த்தி சென்றிருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘ட்ரிகர்’ படம் அனைவரும் பார்க்க கூடிய வேகம் நிறைந்த ஒரு படம்.
ரேட்டிங் 3/5
RADHAPANDIAN.