‘நானே வருவேன்’ திரை விமர்சனம்!

121

சென்னை:

வி. கிரியேஷன்ஸ் சார்பில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.  இப்படத்தை தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார். இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தனுஷின் ஒருவர் பெயர் பிரபு. மற்றொருவர் கதிர். சிறுவயதிலேயே கதிர் யாரிடமும் அதிகம் பேசாமல் ஒரு சைக்கோ மாதிரியே இருப்பார்.  இந்த சூழ்நிலையில் தன் தந்தையை கொலை செய்துவிட்டு ஊரை விட்டு ஓடி விடுகிறார் கதிர். பெற்ற தந்தையையே கொல்லும் கதிரை தனியே விட்டுவிட்டு, பிரபுவுடன் வெளியூர் சென்று விடுகிறார் அவர்களுடைய தாய்.

அதன் பிறகு சென்னையில் பிரபுவும்,  வட இந்தியாவில் கதிரும்  என வளரும் அவர்கள் இருவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு  சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சென்னையில் உள்ள பிரபு தன் மனைவி, ஒரே மகள் என மகிழ்ச்சியுடன்  வாழ்ந்து வருகிறார். தன் மகள் மீது அதிகமான பாசம் வைத்து இருக்கும் பிரபுவுக்கு  தன் மகளால் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. தனியாக உறங்கிக் கொண்டிருக்கும் மகள் திடீரென்று இரவு நேரங்களில் அழுவதும், தேவையில்லாத எதையோ பேசியும் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு செல்கிறார். எதனால் இப்படி செய்கிறார் என்பதை சரி செய்வதற்காக, தன் மகளை டாக்டரிடம் அழைத்து செல்கிறார் பிரபு. டாக்டர் அவளை பரிசோதித்து விட்டு, அவளது உடலில் ஆவி புகுந்து இருக்கிறது. அந்த ஆவியை விரட்ட வேண்டுமானால், அவள் என்ன சொல்கிறாளோ..அதன்படி செய்யுங்கள் என்கிறார். இதனைக் கேட்டு அதிச்சியடைந்த  பிரபு, அடுத்து  என்ன செய்தார்? என்பதைப் பதைபதைப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் “நானே வருவேன்”.

நல்லவன் கெட்டவன் என்று இரு வேடங்களில் நடித்திருக்கும் தனுஷ் இரண்டு வேடங்களுக்குமான வித்தியாசத்தை நடிப்பில் மிரட்டலாக வெளிப்படுத்தி யிருக்கிறார். பிரபு என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சாதுவான  நடிப்பை வெளிப்படுத்திருந்தாலும், தன் மகளுக்காக உயிரை கொடுத்து போராடும் வேடத்திலும், மிருகத்தனமான கொடூரம் கொண்ட கதிர் என்ற வேடத்தில் அதிரடியாக நடித்ததிலும் தனுஷ்  இரண்டு வேடங்களையும் அனைவரும் ரசிக்கும்படி செய்திருக்கிறார். தனது நடிப்பாற்றலால் இரண்டு கதாப்பாத்திரங் களையும் நம் மனதில் பதிய வைத்து பிரமிக்க வைத்து விடுகிறார் தனுஷ். கெட்டவனாக நடிக்கும் தனுஷின் தோற்றம், உடல்மொழி, நடிப்பு ஆகியவை சிறப்பாக அமைந்திருக்கின்றன.

இந்துஜா, எல்லி அவரம் என்று இரண்டு கதாநாயகிகளும் பிரபு, கதிர் இருவரின் மனைவிகளாக நடித்திருக்கிறார்கள். இருவரும் தங்களது பணியை தொய்வில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே நடிப்பில் சிறப்பு செய்து இருக்கிறார்கள். தனுஷின் மகளாக நடித்திருக்கும் ஹியா தவேவின் கதாப்பாத்திரமும், அதில் அவர் நடித்த விதமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

காட்டில் வாழும் சைக்கோ மனிதனாக செல்வ ராகவன், துளசி, சரவண சுப்பையா, ஷெல்லி என்.குமார், அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர். தனுஷுடன் இடையில் வரும் யோகிபாபு சிரிக்க வைக்க முயல்கிறார். ஆனால் அவரது காட்சிகள் எடபடவில்லை. டாக்டராக வரும் பிரபு தனக்கு கொடுத்த வேலையை செவ்வனே செய்து இருக்கிறார்.

குறிப்பாக குழந்தை நட்சத்திரங்கள் பிரணவ் – பிரபவ் மற்றும் ஃபிராங்க்கிங்ஸ்டன் – சில்வென்ஸ்டன் என இரட்டை சகோதரர்களாக நடித்திருக்கும் இரட்டையர்களும், அவர்களது நடிப்பும் அனைவரின் மனதையும் கவர்கிறது.

தந்தையையே கொலை செய்யும் மகன், மனைவியைக் கொல்லும் கணவன், மகனையே கொலை செய்யும்  பல காட்சிகள் இந்த சமூகத்தில் எடுபடுமா? என்பது சந்தேகம்தான் என்றாலும், கதைக்கேற்றவாறு ஒரு ஆங்கில படத்திற்கு நிகராக இயக்கி  இருக்கிறார் செல்வராகவன்.

சஸ்பென்ஸ், கிரைம், த்ரில்லர் நிறைந்த இப்படத்தின் காட்சிகளை மிகச்  சிறப்பான முறையில் செய்த ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷை பாராட்டலாம்.

யுவன்சங்கர் ராஜாவின்  இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும்  இரண்டு தனுஷ்களும் சந்திக்கும் இறுதிக்காட்சிகளில் உடுக்கையுடன் கூடிய பின்னணி இசை மெய் சிலிர்க்க வைக்கிறது.

மொத்ததில்நானே வருவேன்’  படம்  தனுஷ் ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.