சென்னை:
1950 ஆம் ஆண்டிலிருந்து 1954 ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை படமாக்க பல தயாரிப்பாளர்கள் முயற்சிகள் செய்தனர். ஆனால் அந்த சமயத்தில் பலவித புராண படங்களும், சரித்திர படங்களும் நிறைய வந்துக் கொண்டிருந்ததால் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை படமாக எடுப்பதை கைவிட்டு விட்டனர். புரட்சி தலவர் எம்ஜிஆர் அவர்கள் “நாடோடி மன்னன்” “மன்னாதி மன்னன்” “சக்கரவர்த்தி திருமகன்” போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை படமாக்க நினைத்தார். ஆனால் அவராலும் முடியவில்லை. அதன் பிறகு உலக நாயகன் கமலஹாசன் இந்த நாவலை படமாக்க முனைப்புடன் இருந்தார். ஆனால் எவருமே’ பொன்னியின் செல்வன் படத்தை பலவித காரணங்களால் எடுக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு உன்னதமான கதையை இயக்குனர் மணிரத்னம் சிறப்பான திரைக்கதை அமைத்து நம் கண் முன்னே கொண்டு வந்து விட்டார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் கதை பலருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் கதையைப் பற்றி கூற வேண்டுமென்றால் . சோழ நாட்டு பேரரசின் அரசரான சுந்தர சோழனுக்கு ஆதித்ய கரிகாலன், அருண்மொழி வர்மன் என்ற இரண்டு மகன்களும், குந்தவை என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். காதல் தோல்வியால் தஞ்சையில் இருந்து வெளியேறி பல்வேறு தேசங்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கும் ஆதித்ய கரிகாலனுக்கு தன் காதலி நந்தினி செய்த துரோகத்தால் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார். . இதற்கிடையே, தஞ்சை அரியணையை கைப்பற்றுவதற்காக தன் தந்தையின் அரச சபையில் சில பிரச்சனைகள் வரப் போவதை அறிந்துக் கொண்ட ஆதித்த கரிகாலன், அதை உணர்ந்து கொண்டு, தன் தந்தைக்கு எப்படியாவது இந்த செய்தியை தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தனது நண்பன் வந்தியதேவனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.
இந்த சூழலில் சோழ படையில் இருக்கும் பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் மற்றும் சிற்றரசர்கள் தலைமையில் சுந்தர சோழரின் அண்ணன் மகன் மதுராந்தகனை அரசராக்க முயற்சி செய்யும்போது, அவர்களுக்கு பெரிய பழுவேட்டையரின் மனைவி நந்தினி அதாவது (ஆதித்ய கரிகாலனின் முன்னாள் காதலி) உதவி செய்கிறார். சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக உருவெடுத்திருக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்துகொள்ளும் இளவரசி குந்தவை, ஆதித்ய கரிகாலனின் நண்பன் வந்தியதேவன் உதவியோடு, தனது சகோதரர்கள் இருவரையும் தஞ்சைக்கு வரவைத்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க முடிவு செய்கிறார்.அதை அடுத்து நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதே ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மீதிக் கதை.
ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம் முகத்தில் தாடியுடன் தனக்கே உரிய விதத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். அவரது ஆக்ரோஷமான நடிப்பிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி நடிப்பில் அசத்தி இருக்கிறார். வந்தியதேவனாக படத்தில் நடித்து இருக்கும் கார்த்தி, படம் முழுவதும் ஆரம்பம் முதல் கடைசிக்காட்சி வரை, தனது நக்கலான பேச்சாலும், அதிரடி சண்டைக்காட்சிகளிலும் சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். பொன்னியின் செல்வன் அருண்மொழி வர்மனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, நிதானமாக இருந்தாலும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசருக்கு உண்டான தோற்றத்துடன் இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார்.
ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கும் ஜெயராம் தலைமுடி ஸ்டைல், நடை, உடை, பாவனை என மிரட்டலான நடிப்பை நகைச்சுவையாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த முதல் பாகத்தின் வில்லியாக சித்தரிக்கப்படும் நந்தினி கதாபாத்திரத்தில் அழகு தேவதையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பளிச்சிடுகிறார். ஐஸ்வர்யாராயின் அழகு மிகவும் ஆபத்தானது என அனைவரும் நினைத்தாலும் இரண்டாம் பாகத்தில்தான், அவரது முழுமையான நடிப்பு வெளிப்படும் என்பதில் ஐயமில்லை. குந்தவையாக வரும் த்ரிஷா, தன் உடல் அழகிலும் சிறந்த நடிப்பிலும் அனைத்து ரசிகர்களின் பாராட்டைப் பெறுகிறார்.
பெரிய பழுவேட்டையராக நடித்திருக்கும் சரத்குமார், சிறிய பழுவேட்டையர் வேடத்தில் நடித்திருக்கும் பார்த்திபன், சுந்தர சோழராக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் என இப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது பணியை சிறப்பாக திறம்பட செய்திருப்பதோடு, அந்தந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக பொருத்தமாக இருக்கிறார்கள்.
‘பொன்னியின் செல்வன்’ என்ற இந்த பெரிய நாவலை ஒரு திரைப்படமாக, கதையின் அளவை குறைத்து மாற்றி எழுதி, மிக லாவகமாகக் கையாண்டிருக்கும் இயக்குனர் மணிரத்னம், பல தயாரிபாளர்கள் எடுக்க முயன்றும் முடியாமல் போனதால், ஒரு சிலர் மணிரத்னத்தால் இதை தயாரிக்க முடியுமா? என்று கிண்டலடித்தவர்கள் மத்தியில் ஆபத்தான முயற்சியில் இறங்கி, பலரின் சொல்லால் காயம் பட்டாலும் தனது சொல்லைச் செயலாக்கி காட்டியவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் மணிரத்னம் என்று சொன்னால் மிகையாகாது. அவருக்கு பெரிய பாராட்டுக்கள்.
ரவிவர்மனின் ஒளிப்பதிவில் கடலில் நடக்கும் பயங்கர சண்டைக்காட்சிகளும், பிரம்மாண்டமான அரண்மனை காட்சிகளையும் படமாக்கியதில், மிக சிறந்த முறையில் கதையோடு பயணித்து இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. கேட்கலாம். பின்னணி இசையும், கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.
உலகத் தமிழர்கள் கொண்டாடும் விதத்தில் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை திரை காவியமாக உருவானதற்கு, இலங்கை தமிழரான லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரனின் பல கோடிகள் பொருட்செலவு செய்து படத்தை எடுத்ததை முக்கிய காரணம் என்பதை சுட்டிக் காட்டி அவரை பாராட்டலாம்.
தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய வகையில் படம் முழுவதும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதால், தியேட்டரே கைத்தட்டலால் அதிர்கிறது.
மொத்தத்தில், ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்து விட்டது.
ரேட்டிங் 4.5/5.
RADHAPANDIAN.