‘பிஸ்தா’ திரை விமர்சனம்!

114

சென்னை:

காதல் செய்துவிட்டு பிறகு பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு பெண்ணுக்கு விருப்பம் இல்லாமல் நடக்கும் திருமணங்களை தன் நண்பர்களுடன் இணைந்து தடுத்து நிறுத்துவதையே தொழிலாக செய்யும் நாயகன் சிரிஷ்.  பெற்றோர்களின் கட்டாயத்துக்கு இணங்க மாப்பிள்ளை பிடிக்காமல் வேதனைப்படும் பெண்களை தனது நண்பர்கள் மூலமாக அந்தப் பெண்ணை கடத்தி அவர் காதலிக்கும் காதலனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் சிரிஷ் மீது பலர் கோபத்துடன் இருக்கின்றனர்.  எந்த திருமண வீட்டில் இவர் சென்றாலும் இவரைப் பார்த்து ‘ஐயோ இந்த திருமணம் நடக்குமா? மணப்பெண்ணை கடத்துவார்களே… என்று அந்த திருமணத்திற்கு வந்தவர்கள் அஞ்சுகின்றனர்.   இந்த சூழ்நிலையில்தான் மிருதுளா முரளி மீது சிரிஷுக்கு காதல் வருகிறது.  மிருதுளா முரளியும்  சிரிஷை மனதார காதலிக்கிறார்.  அப்போதுதான் அவரது காதலி மிருதுளா முரளி மணப்பெண்களை கடத்தும்  தொழிலை கைவிட வேண்டும் என்று வாதாடுகிறார்.

தன் காதலி சில நிபந்தனைகளை விதிக்கும் போது முதலில் மறுக்கிறார் சிரிஷ்.  அதன் பிறகு தன் காதலிக்காக நான் இனி எந்த பெண்ணையும் தூக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார்.  இந்த சூழ்நிலையில் மிருதுளா முரளி சொன்ன சத்தியத்தை மீறி ஒரு மணப்பெண்ணை கடத்துகிறார்.  இதை பார்த்து விட்டு மிருதுளா முரளி சிரிஷிடம் ‘இனிமேல் என் முகத்தில் விழிக்காதே. ..எந்த காரணத்தை கொண்டும் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.  இத்துடன் நம் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடு’ என்று கோபத்துடன் சென்று விடுகிறார் ஆனால் சிரிஷிற்கு 6 மாதத்திற்குள் கட்டாயம் திருமணம் நடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.  இதனால், அவரது பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். இந்த சூழ்நிலையில் சிரிஷிற்க்கு யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். ஆனால், சிரிஷின் திருமணத்திற்க்கு பலவித சிக்கல்கள் ஏற்படுகிறது.  கடைசியில் அவர் திருமணம் செய்வதற்கு மணப்பெண் கிடைத்தாளா?, இல்லையா? என்பதுதான்  தான் ‘பிஸ்தா’ படத்தின் மீதிகதை!

சிரிஷ் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு அவ்ர் செய்யும் பெரிய காரியங்களைச் செய்யும்போது நகைச்சுவையாக இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தாலும் நடிப்பில் வேகம் இல்லை. காதலி தவறாகப் புரிந்துகொண்டு கோபிக்கும் போது பதறுமிடத்தில் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.இறுதியில் அவர் எடுக்கும் முடிவு இளையதலைமுறைக்கு முன்னோட்டமாகவும், அறிவுரையாகவும் இருக்கிறது.

கதாநாயகியாக நடித்திருக்கும் மிருதுளா முரளி, கதைக்கேற்றவாறு சில காட்சிகளில் அளவாக  நடித்திருந்தாலும், பாடல் காட்சிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.கதாநாயகியின் தோழியாக அவரது அக்கா என்று நடித்திருக்கும் அருந்ததி நாயர் கடைசி கட்ட காட்சியில் நம்மை அசத்த வைக்கிறார்.

சிரிஷின் நண்பனாக நடித்திருக்கும் சதீஷ் பல இடங்களில் காமெடி வசனம் பேசி நடித்தாலும் படத்தில் அவரது காமெடி எடுபடவில்லை. யாருக்கும்  சிரிப்பே வரவில்லை. மார்க் பாபாவாக  நடித்திருக்கும் யோகி பாபு சில காட்சிகளில் வந்தாலும் கலகலப்பாக நடித்து அனைவரையும் சிரிப்பூட்டுகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு செந்தில் நடித்திருந்தாலும் அவரை இன்னும் அதிக காட்சிகளில் நடிக்க வைத்திருக்கலாம். அவர் வரும் காட்சிகள் சூப்பர்.பேராசிரியர் ஞானசம்பந்தம் சில இடங்களில் குணச்சித்திர நடிகராகவும், சில இடங்களில் காமெடி நடிகராகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளையும், அங்குள்ள இயற்கை எழில் மிகுந்த கோவில்களையும் ரசிக்கும்படி படமாக்கியுள்ள எம்.விஜய்யின் ஒளிப்பதிவு  கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுத்துள்ளது. தரண் குமாரின் இசையில் பாடல்கள் எல்லாமே கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதையோடு ஒன்றி பயணித்துள்ளது.

திருமணத்தை மையமாக வைத்து வழக்கமான திரைக்கதை அமைப்போடு, ஜாலியான ரூட்டில் படத்தை பயணிக்க வைத்திருக்கும் இயக்குனர் ரமேஷ் பாரதி,  இப்படத்தை காமெடியாக இயக்கியிருந்தாலும் இடைவேளை வரை படம் நம்மை போரடிக்க வைக்கிறது.  இடைவேளைக்குப் பிறகு கதை வேகம் எடுத்தாலும் படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் எதிர்பார்க்காத விதத்தில் நமது கவனத்தை ஈர்க்கிறார் இயக்குனர்.  க்ரைம் திரில்லர் பிரம்மாண்டம் போன்று இந்த படம் இல்லை என்றாலும் இடைவேளைக்கு பிறகு கண்டிப்பாக இந்தப் படத்தை ரசிக்கலாம்.

மொத்தத்தில் நகைச்சுவைக்காக பார்க்க வேண்டிய படம் ‘பிஸ்தா’

ரேட்டிங்  3/5

RADHAPANDIAN.