சென்னை:
கதாநாயகன் வினோத் லோகிதாஸ், சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் ஆகிய ஐந்து பேர் நெருங்கிய நண்பர்கள். வினோத் லோகிதாஸ் ஸ்னூக்கர் விளையாட்டில் சிறந்து விளங்குகிறார். இந்த சூழ் நிலையில் ஒரு கிளப்பில் ஸ்நூக்கர் விளையாட்டு போட்டி நடக்கிறது. அந்த போட்டியில் முதலில் தோல்வியுற்ற வினோத் லோகிதாஸ், பிறகு வெற்றி பெறுகிறார். அவரது வெற்றியை கொண்டாடுவதற்காக ஐந்து நண்பர்களும் ஏற்காடு சுற்றுலா செல்வதற்காக ஒரு காரில் பயனம் செய்கிறார்கள். மகிழ்ச்சியாக காரை ஓட்டிக் கொண்டிருந்த நேரத்தில், போகும் வழியில் இரவில் இன்னொரு கார் அவர்களின் காரை முந்திச் சென்றதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அப்போது அந்த பிரச்சனையால் என்ன நடக்கிறது என்பதே ‘சஞ்ஜீவன்’ படத்தின் மீதிக்கதை!
இந்தப் படத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் தனக்கான பணிகளை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கதாநாயகன் வினோத் லோகிதாஸ் மிகவும் பொறுப்பான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்னூக்கர் விளையாடுவது, காதலியிடம் கண்ணியமாக, மிக அமைதியாக பேசுவது, நண்பர்கள் தவறு செய்தால் அவர்களை திருத்த முயற்சி செய்வது போன்ற பல காட்சிகளில் தனது துருதுருப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஐந்து நடிகர்களும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களாக நடித்து உண்மையான நண்பர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஷிவ் நிஷாந்த், சத்யா என்.ஜே, யாசீன் ஆகியோர் காமெடியின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். இதில் சத்யா சிரித்து கொண்டே காமெடி செய்யும் காட்சிகளில் அனைவரையும் கவர்கிறார். இந்தப் படத்தின் மூலம் இன்னொரு காமெடி நடிகர் கிடைத்து விட்டார் என்றே சொல்லாம்.
கதாநாயகி திவ்யா துரைசாமி அமைதியான அழகுடன் காதல் காட்சிகளில் ரசிகர்களை கவர்கிறார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் இந்தப் படத்தில் தனக்கான இடத்தை தக்கவைத்து நடிப்பில் அசத்தியுள்ளார்.
கார்த்திக் ஸ்வர்ணகுமார் (நடிகர் பிரசன்னாவின் தம்பி) ஒளிப்பதிவில் ஸ்னூக்கர் விளையாட்டு விளக்கமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்திற்கு உயிரோட்டத்தை கொடுத்திருக்கிறது.
கதை எழுதி திரைக்கதை அமைத்திருக்கும் மணிசேகர் மிக சிறந்த முறையில் படத்தை இயக்கியிருக்கிறார். முதல்பாதியில் ஸ்னூக்கர் விளையாட்டைப் படபடப்புடன் பார்க்க வைக்கும் அவர் இரண்டாவது பாதியில் ஸ்னூக்கர் விளையாட்டைப் பற்றி ரசிகர்களுக்கும் புரிய வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அனைவர் மனதையும் கண் கலங்க வைத்து விடுகிறார். புதுமுக இயக்குனர் என்று தெரியாமல் மிக நேர்த்தியாக படத்தை இயக்கி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘சஞ்ஜீவன்’ படம் கண்டிப்பாக ரசிகர்களை ரசிக்க வைக்கும்.
ரேட்டிங் 3/5