“காந்தாரா” திரை விமர்சனம்!

97

சென்னை:

பல நூறு ஆண்டுகளுக்கு முன் மன்னர்கள்  ஆண்ட காலத்தில் மலை வாழ் கிராம மக்களுக்கு தானமாக வழங்கிய  நிலத்தை, தற்சமயம் உள்ள அந்த  மன்னர்களின் வாரிசுகள் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். அதே நேரத்தில் அந்த இடத்தில் வசிக்கும் மலை வாழ் மக்களிடம் இருந்து நிலத்தை பறிக்க வனத்துறையும் களம் இறங்குகிறது. இரு தரப்பினருக்கும் எதிராக,  தங்களது நிலத்தை பாதுகாக்க மக்கள் போராடுகிறார்கள். இந்த போராட்டத்தில் அவர்களின் தெய்வ நம்பிக்கையும் கலக்க, மலை வாழ்  மக்களின்  நிலங்கள் பறிக்கப்பட்டதா? தெய்வம் அவர்களுக்கு அருள் புரிந்ததா?  என்பது தான் ‘காந்தாரா’-படத்தின் கதை.

இப்படத்தின் தொடக்கத்தில், மதுக்குடித்துக் கொண்டும் எருமைப்போட்டி போன்ற வீர விளையாட்டுகளில் கலந்துகொண்டும் காட்டில் உள்ள  பன்றிகளை வேட்டையாடிக்கொண்டும் தன் நண்பர்களுடன் சுற்றித் திரிகிறார்  கதாநாயகனாக நடித்திருக்கும்  ரிஷப் ஷெட்டி.

தங்களது குடும்பங்கள் வசிக்கும் இடத்திற்கு ஏதாவது பிரச்சனை என்றால்  முதலில் வந்து நிற்கும் ரிஷப் ஷெட்டி, வனத்துறை அதிகாரி கிஷோரிடம் மோதும் காட்சியிலும், காதலியிடம் கோபம் கொள்ளும்போதும், குறிப்பாக சண்டைக் காட்சியிலும் நடிப்பில் அசத்தி இருக்கிறார். கர்னாடக அரசாங்கத்தை எதிர்த்து போராடும் இவர் இறுதியில், சாமி வந்து ஆடும் காட்சியில் படம் பார்ப்பவர்கள் மத்தியில்  உண்மையிலேயே அவர் உடம்பில் சாமி ஏறிவிட்டதா!  என்று பரவசமூட்டுகிற அளவிற்கு மிக தத்ரூபமாக ஒவ்வொரு அசைவுகளிலும் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். அவரது உன்னதமான நடிப்புக்கு கண்டிப்பாக கைத்தட்டல் கொடுக்கலாம்.

கதாநாயகியாக  நடித்திருக்கும் சப்தமி கவுடா, ஒருபக்கம் தன் வீடு உள்ளிட்ட தங்களது  நிலத்தைப் பறிக்கும் வனத்துறை, இன்னொரு பக்கம் நீண்டகாலக் கனவான அதே வனத்துறை வேலை ஆகிய இரண்டுக்குமிடையிலான போராட்டத்தைச் சரியாக வெளிப்படுத்தி நடிப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார். மலைவாழ் மக்களின் ஒருவராக ரசிகர்கள் மனதில் பதியும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

வனத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது.  வனத்துறை அதிகாரியாக தன் சிறந்த நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு கூடுதலாக வலு  சேர்த்திருக்கிறார்.

மன்னரின் வாரிசாக வில்லனாக  நடித்திருக்கும்  அச்யுத்குமார் மிக அமைதியாக நடித்து அசத்தியிருக்கிறார். வேட்டி, சட்டையுடன் பெரிய பணக்கார தோரணையுடன் அவர் ஆக்ரோஷமாக அமைதியும் ஆபத்துதான் என்பதை நடிப்பால் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் அவர்களுடைய கலாச்சாரம், கடவுள் வழிவாடு ஆகியவற்றை கொண்டு, வனத்துறை பாதுகாப்பு என்ற சமூக அக்கறையோடு திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, அதை கமர்ஷியலான ஒரு படமாகவும் மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.

பி.அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை அதிலும் குறிப்பாக தெய்வ வழிபாட்டுக் காட்சிகளில் பின்னணி இசை களத்துக்கேற்ப சிறப்பாக அமைந்திருக்கிறது. அரவிந்த் எஸ்.காஷ்யப் ஒளிப்பதிவில் கர்நாடக எல்லையோர  கிராம அழகுகளை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. தெய்வ வழிபாட்டுக் காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன.

மொத்தத்தில் ‘காந்தாரா’ படம் அனைத்து ரசிகர்களும் நிச்சயம் கவரும் என்பதில் ஐயமில்லை.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.