சென்னை:
தெரு கூத்து நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சர்தார் ,தன் குடும்பத்தில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாமல் உளவுத் துறையில் பணியாற்றுகிறார். இந்திய ராணுவத்தில் உளவாளியான இவருக்கு ரகசியமாக வந்த உத்தரவின் பேரில் வங்கதேசத்தில் கப்பலில் இந்திய பாதுகாப்பு ஆலோசகரை சர்தார் சுட்டுக்கொல்கிறார். இந்திய உளவுத் துறையின் உயர் அதிகாரியான சங்கி பாண்டேவால், சர்தார் இந்திய நாட்டின் தேசத்துரோகி என பழி சுமத்தப்படுகிறார். இதனால், சர்தாரை இந்திய அரசு தேசத்துரோகியாக அறிவிக்கிறார்கள். சர்தார் இந்தியாவிற்குள் வராமல் தேசத்துரோகியாகவே காணாமல் போகிறார்.
சர்தார் மீது விழுந்த பழியால், அவரது குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள, சர்தாரின் மகன் மட்டும் அனாதையாக நிற்கிறான். அச்சமயத்தில் அவனை முனிஷ்காந்த், தன்னுடன் அழைத்து வந்து வளர்த்து, நன்கு படிக்க வைத்து காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக உருவாக்குகிறார். தேசதுரோகியின் மகன் என்ற அவப்பெயருடன் காவல் துறையில் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்க்கிறார். தன் தந்தையினால் ஏற்பட்ட அவப்பெயரை மறைக்க பல நல்ல காரியங்களை செய்தும், பல சிக்கலான வழக்குகளை முடித்து கொடுத்தும் ஊடகங்களில் தனக்கென்று ஒருநல்ல பெயரை உருவாக்கி விளம்பரப்பிரியராக வாழ்கிறார் மகன் கார்த்தி.
மற்றொரு பக்கம் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை அடைத்து வியாபாரமாக்கியதால் அதனால் ஏற்படும் விளைவினால் உடல் நலப் பாதிப்பில் சிக்கி தவிக்கும் லைலாவின் மகன் ரித்விக்கை போல, மற்ற குழந்தைகளும் உடல் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் நிறுவன முதலாளிகளை எதிர்த்து போராடுகிறார் லைலா. அவருடன் இணைந்து ராஷிக்கண்னாவும் ராஜ் பவனில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இந்த சூழலில் ஒரே நாடு ஒரே குழாயில் தண்ணீர் என்ற குடிநீர் திட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்று சர்வதேச நிறுவனம் செயல்பட முயல்கிறது. இந்த திட்டத்தால் நாட்டிற்கு பெரிய ஆபத்து வரும் என்று போராடும் லைலாவை கொன்று விடுகிறார்கள். இந்த கொலைக்கான காரணத்தை சர்தாரின் மகன் கார்த்தி விசாரிக்கும் போது, இந்திய அரசின் ஆலோசகர் சங்கி பாண்டே உடன் இருப்பது தெரிய வருகிறது. இவர்தான் தன் தந்தை சர்தார் காணாமல் போனதற்கு காரணம் என்பதை அறிந்து கொள்கிறார் மகன் கார்த்தி. கடைசியில் அவர் தனது தந்தையை கண்டுபிடித்தாரா? ஒரே நாடு ஒரே குழாய் தண்ணீர் திட்டத்தை தடுத்து நிறுத்தினாரா? என்பதுதான் இப்படத்தில் மீதி கதை.
தந்தை-மகன் என இராணுவ உளவாளி, காவல்துறை அதிகாரி ஆகிய இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தி, இரண்டு கதாபாத்திரங்களுக்குமான வேறுபாட்டைதனது நடிப்பில் மிக கச்சிதமாக அசத்தியிருக்கிறார். அதிலும் வயதான சர்தார் வேடத்திற்காக தாடியுடன் தனது தோற்றத்தை மாற்றி கூடுதலாக மெனக்கெட்டு நடித்திருக்கிறார். முற்றிலும் மாறுபட்ட சர்தார் வேடத்தில் கை உதறுகின்ற காட்சிகளிலும், வித்தியாசமான சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து கைத்தட்டல் பெறுகிறார். மகன் கதாபாத்திரத்தில் காவல் அதிகாரியாக துறுதுறுவென்று காரியங்களை சாதித்து பேசி நடிக்கும்போது அனைவரின் மனதையும் கவர்கிறார் கார்த்தி.
கதாநாயகியாக ராஷி கண்ணா வழக்கறிஞர் வேடத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் தனது பணியை சிறப்பாகவே செய்து இருக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, முனிஷ்காந்த், லைலா, யூகி சேது, யோக் ஜெப்பி, முகம்மா அலி பைக், இளவரசு, மாஸ்டர் ரித்விக், அசினாஷ், பாலாஜி சக்திவேல், சுவாமிநாதன், ஆதிரா பாண்டிலட்சுமி, டிஎஸ்ஆர் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை குறைவில்லாமல் கச்சிதமாக நடித்து இருக்கிறார்கள்.
ஜார்ஜ்வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் தரமாக இருக்கின்றன. இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் கார்த்திக்கின் உடல் வித்தியாசத்தை மிக நேர்த்தியாக காட்டியிருப்பது பாராட்டுக்குரியது,
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருந்தாலும். பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்றபடி இருப்பதோடு, படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பையும் கொடுத்திருக்கிறது. ‘ஏறுமயிலேறி’ பாடல் அனைவரின் மனதிலும் தாளம் போடவைக்கிறது.
சமூக அக்கறையோடு இந்திய உளவுத்துறையில் பணியாற்றும் உளவாளியின் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும், அவர் சந்திக்கும் துன்பங்களையும் தனது நாட்டிற்காக தன்னையே அர்பணிக்கும் ராணுவ அதிகாரிகளை பற்றியும், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் விற்பனை செய்வதால் எற்படும் ஆபத்துக்கள் பற்றி திரைக்கதை அமைத்ததுடன் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய எச்சரிக்கையுடன் நல்ல கருத்துக்கள் நிறைந்த படமாக சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் மித்ரன்.
மொத்தத்தில்..தீபாவளி திருநாளில் அனைத்து ரசிகர்களும் பார்க்க வேண்டிய படம் ‘சர்தார்’
ரேட்டிங் 4/5
RADHAPANDIAN.