‘படவெட்டு’ மலையாளப் படத்தின் திரை விமர்சனம்!

107

சென்னை:

ஒரு மலை கிராமத்தில் விவசாயத்தை நம்பியிருக்கும், அந்த கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை கிராம சபை நிர்வாகிகள் செய்து கொடுக்கிறார்கள்.  இந்நிலையில் கிராம சபை நிர்வாகிகளை நம்பி இருக்கும் மலை வாழ் மக்கள் மத்தியில்  ஒரு கட்சியின் தலைவர் நேரடியாக வந்து,  இங்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கிறேன். எங்கள் கட்சிக்கு ஆதரவு கொடுத்தால் பல இலவச திட்டங்களை பூர்த்தி செய்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இந்த சூழ்நிலையில் மக்களுக்கு இலவச திட்டங்கள் சிலவற்றை   அறிவித்து விட்டு அந்த மலை கிராமத்தில் காலூன்றும் அரசியல் கட்சியின் தலைவர், அந்த கிராமத்தில் உள்ள  விவசாய நிலங்களை அபகரிக்க திட்டம் போடுகிறார். அந்த அரசியல்வாதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அந்த கிராமத்து மக்களுக்காக ஆதரவு தெரிவித்த கதாநாயகன் நிவின் பாலி, ஒரு கட்டத்தில் அந்த அரசியல் கட்சியின் தலைவர் மலை வாழ் மக்களின் நிலங்களை அபகரிக்க முயற்சி செய்யும்போது .எங்கள் மண் எங்களுக்கே  சொந்தம் எனும் மண்ணுரிமைப் போராட்டத்தை தன் கிராம மக்களுடன் இணைந்து போராடுகிறார். அந்த போராட்டத்தில் நிவின் பாலி வெற்றி பெற்றாரா?  அந்த அரசியல்வாதி கிராம மக்களை ஏமாற்றி நிலங்களை பறித்தாரா? என்பதுதான் ‘படவெட்டு’ மலையாளப் படத்தின் கதை..

ஓட்டப்பந்தயம், துள்ளுந்துப் பந்தயம் ஆகியனவற்றில் வெற்றி பெற்று பல பரிசுகளை வாங்கிய நிவின் பாலி துள்ளுந்துப் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து அவரை வீட்டிலேயே முடக்கிப்போடுகிறது. விபத்தினால் வாழ்க்கையை தொலைத்த அவர்  மன உளைச்சளோடு அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் நிவின் பாலி. அரசியல்வாதிக்கு எதிராக  ஆக்ரோஷமான சண்டைக் காட்சியில் வெளுத்து வாங்கி இருக்கிறார். ஒரு விபத்தினால் ஒருவனது, வாழ்க்கையும், அவனது காதலும் சீரழிந்து விட்டது  என  நினைத்து விரக்தியில் இருந்த நிவின் பாலி முக்கால்வாசிப்படம் முழுவதும் . அமைதியான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில் இறுதியில் அவர் எடுக்கும் விஸ்வரூப காட்சிகள்  எல்லாவற்றையும் நேர்மறையாக்கி நம்மை பிரமிக்க வைத்து விடுகிறது. அவருடைய அமைதியாக அதேசமயம் ஆழமான நடிப்பு படத்துக்குப் பெரும்பலத்தை சேர்த்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

கதாநாயகியாக  நடித்திருக்கும் அதிதி பாலன்,  தனது பார்வையிலேயே  காதலையும் வெளிப்படுத்தி,  சோர்ந்திருக்கும் நிவின்பாலியை  ஊக்கப்படுத்தி தன் மனதில் உள்ள உணர்வுகளை சொல்லும்போதும் , அவருக்கு அட்வைஸ் செய்யும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

குய்யாலி என்ற அரசியல் கட்சித் தலைவர் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருக்கும் ஷம்மி திலகன், அவருடைய அப்பா திலகனுக்கு இணையாக இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

தீபக்மேனனின் ஒளிப்பதிவில் இயற்கை எழில் நிறைந்த கண்ணூரின் அழகும், அரசியல்வாதி பேசிக் கொண்டிருக்கும்போது கொட்டும்மழையில் எடுத்த  காட்சிகளும் பாராட்டுக்குரியது.

கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும் பின்னணி இசை இப்படத்தின் மதிப்பை கூட்டுகிறது.

இப்படத்தை இயக்கி இருக்கும் லிஜு கிருஷ்ணா,இலவச திட்டங்கள் மூலம் காலூன்ற நினைக்கும் அரசியல் கட்சியை பற்றியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் சிந்தனையுடைய பொதுவுடைமைக் கட்சிக்கு மாற்றாக வேறு ஒரு கட்சியை வளர்த்து அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் அங்குள்ள அரசியல்கட்சி செய்யும் தில்லுமுல்லுகளையும் , அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளையும், அப்படியே இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜகவை நினைவுபடுத்துகின்றன என்றாலும் மிக அழுத்தமாகவே அனைத்தையும்  பதிவு செய்திருக்கிறார். இப்படி நேரடியாகக் குற்றம் சாட்டி படத்தை இயக்கி இருக்கும்  லிஜு கிருஷ்ணாவின் மன தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும். படவெட்டு என்றால் போர் என்று அர்த்தம் என்பதால்  தற்போதுள்ள  அரசியல் சூழ்நிலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில், ‘படவெட்டு’ என்ற இந்த மலையாள படத்தை அனைத்து ரசிகர்களும் பார்த்து ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.