சோனி லிவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 18ம் தேதி வெளியாகும் திரைப்படம் ‘அனல் மேலே பனித்துளி’

124

சென்னை:

சோனி லிவ் ஓடிடி தளம் வட்டார ரீதியிலான படங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் தற்போது ‘அனல் மேலே பனித்துளி’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்தக் கதை எதிர்பாராத விதமான கதைக்களத்துடனும் திருப்பங்களுடனும் பாலியல் வன்புணர்வில் இருந்து மீண்ட ஒருவர் எவ்வாறு தன் வாழ்வை கடந்து வருகிறார் என்பதை இந்தக் கதை சொல்கிறது.  வெற்றிமாறன் தயாரித்திருக்கக்கூடிய இந்தத் திரைப்படம் இந்த மாதம் நவம்பர் மாதம் 18ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

சென்னையைப் பின்னணியாகக் கொண்ட இந்தக் கதை, நீதிக்கான போராட்டத்தின் வழியில் தன்னை மாற்றிக் கொள்ளாத மதியின் (ஆண்ட்ரியா ஜெரிமையா) கடினமான கதையைக் கூறுவதாக அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாது, இந்த வழக்கை மதி கைவிட்டு தன் வழக்கமான வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று விரும்புவர்களையும் காட்சிப்படுத்துகிறது. இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி தன்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை மதி இந்த வழக்கிற்காக போராடுவாளா அல்லது பாதியிலேயே கைவிடுவாளா என்பதைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் மதியின் பயணத்தைப் பாருங்கள்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ஆர். கெய்சர் ஆனந்த் கூறுகையில், ”சோனி லிவ் ஓடிடி தளம் நம்முடைய வட்டாரக் கதைகளைக் கொண்டு வருவதில் மிகவும் வலுவானது. அந்த வகையில் திறமையான கதைகள், நடிகர்கள் மற்றும் இயக்குநர்களைத் தனக்கு கீழ் கொண்டு வருகிறது. ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எங்கள் கதையில் நம்பிக்கைக் கொண்டு இதைத் தயாரிக்க முன் வந்த வெற்றிமாறன் சாருக்கு நன்றி. மதி தனக்கான நீதியைப் பெறுவதற்கான பயணத்தை இந்தக் கதையில் தெரியப்படுத்துகிறாள்.

இது போன்ற ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வை மதி தன் வாழ்வில் எதிர்கொள்ளும் போது அவள் எப்படி அதில் இருந்து மீண்டு வருகிறாள் அதை எப்படி அவள் எதிர்கொள்கிறாள் என்பதும் இந்தக் கதையில் காண்பிக்கப்படுகிறது. இது போன்ற ஒரு வலுவானக் கதையில் ஆண்ட்ரியாவை கதாநாயகியாக கொண்டிருப்பது எங்களது அதிர்ஷ்டம். மதி எனும் கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய முழு மனதையும் கொடுத்து நடித்திருக்கிறார். ஆண்ட்ரியாவின் நடிப்பு மற்றும் கதையைப் பார்த்து விட்டு பார்வையாளர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆர். கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படத்தில் ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், இளவரசு, அனுபமா குமார் மற்றும் லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ’அனல் மேலே பனித்துளி’ திரைப்பம் இந்த நவம்பர் மாதம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் 18ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.