‘பட்டத்து அரசன்’ திரை விமர்சனம்!

94

சென்னை:

ஒரு கிராமத்தில் பெரிய குடும்பமாக நாற்பதாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறார் ராஜ் கிரண் என்கிற பொத்தாரி. அவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு பிறந்த பேரனாக சின்னதுரை என்கிற அதர்வாவாக  வருகிறார்.  ஊருக்காக பெரிய கபடி விளையாட்டு வீரான ராஜ் கிரணுக்கு அந்த ஊர் கிராமம் சிலை வைத்து வழிபாடு செய்யும் அளவிற்கு மரியாதைக்குரிய  மனிதராக  வலம் வருகிறார்.  இவர் தனது மகன்கள், மகள், பேரன்கள், பேத்திகள் என்று கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.  அவருடைய மற்றொரு மனைவியின் பேரனான அதர்வாவும், அவரது அம்மா ராதிகாவும் சில பிரச்சனைகளால் ராஜ் கிரணிடமிருந்து பிரிந்து,  தனியாக வசித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் எப்படியாவது தனது இரண்டு குடும்பத்தையும்  ஒன்றிணைக்க அதர்வா போராடி வருகிறார்.

ராஜ் கிரண் மீது அளவுக்கு அதிக அன்பை வைத்திருக்கும் கிராமம், ஒரு சில பிரச்சனைகளால் அவர் பெயரில் இருக்கும் கபடி குழுவை கலைத்துவிட முடிவெடுக்கிறார்கள். இதனால் அந்த ஊர்க்காரர்கள் அவரது சிலையை உடைத்தெறியவும் செய்கிறார்கள். இதனை நிரூபிப்பதற்காக அதர்வா போராடியும் முடியாமல், தாத்தா குடும்பம் மீது விழுந்த பழியை போக்க களம் இறங்குகிறார்.  ஊருக்கு எதிராக அவர் சவால் விடுகிறார்.  தன் குடும்பத்தில் உள்ளவர்களை  வைத்து ஒரு கபடி குழுவை ஒன்றிணைக்கிறார். கடைசியில் தன் குடும்ப குழுவை வைத்து கபடி போட்டியில் அதர்வா வென்றாரா? தங்கள் குடும்பம் மீது ஏற்பட்ட பழியை போக்கினாரா? என்பதுதான்  ‘பட்டத்து அரசன்’ படத்தின் மீதிக்கதை.

கபடி வீரராக நடித்திருக்கும் அதர்வா விளையாட்டு வீரருக்கான கதாபாத்திரத்தில் மிக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். பாசமிக்க பேரனாக அதர்வா நடித்திருக்கிறார். தாத்தா, பெரியப்பா,மாமா ஆகியோர் ஒதுக்கினாலும் திரும்பத் திரும்ப அவர்களோடு சேர நினைக்கிறார். கபடி களத்தில் காலில் உள்ள நகம் பெயர்ந்து விழுந்தாலும் அதை பொருட்படுத்தாமல் எதிராளிகளை பாய்ந்து விரட்டும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.  சண்டைக்காட்சிகளில் ஒற்றை ஆளாக  நின்று அடித்தாலும் ஆக்ஷனில்  அதிரடி காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் அளவாக நடித்திருப்பவர் செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து  அனைவரின் மனதையும்  கலங்க வைத்து விட்டார் அதர்வா. அவருக்கு கொடுக்கப்பட்ட  பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

கபடி வீரர், குடும்பத் தலைவர் என பல பரிணாமங்களில் ராஜ் கிரண் தன் நடிப்பில் கலக்கி இருக்கிறார். கபடி விளையாடும் இடங்களில் மிக சிறப்பாக தன் பணியை செய்து இருக்கிறார். அவரது கன்னத்தில் உதைத்த கபடி வீரரை வளைத்துப் பிடிக்கும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஆஷிகா ரங்கநாத் குடும்ப பாங்கான முகம் என்றாலும் கபடி வீராங்கனையாக விளையாடும்போது எதிர் ஆட்டக்காரர்கள், அவரை தூக்கி வீசும்போது பரிதாபமாக இருந்தது.   காதல் காட்சிகளிலும், கபடி போட்டியிலும் அளவான நடிப்பின் மூலம் மிளிர்கிறார்.

ஜெயப்பிரகாஷ், துரைசுதாகர், சிங்கம்புலி,செந்தி, ராஜ் அய்யப்பா, பாலசரவணன், ராதிகா, ஆர்.கே.சுரேஷ், ரவிகாளே உட்பட படத்தில் ஏராளமான நடிகர்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாகவே செய்து இருக்கிறார்கள்.ராஜ்கிரணின் மற்றொரு பேரனாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் நடிப்பிலும், கபடி விளையாட்டிலும் அனைவரும்  பாராட்டும்படி நடித்திருக்கிறார்.

கபடி சம்பந்தப்பட்ட பல பட ங்கள் வந்தாலும் ஒரு கிராமத்து வாழ்வியலை மையமாக வைத்து , குடும்பப் பாசம், அவர்களது  வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கும் கபடி விளையாட்டு ஆகியனவற்றை மையமாக வைத்து ஒரு நல்ல குடும்பக்கதையைப் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.

லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் அழகும். இயற்கை எழில் மிகுந்த காட்சிகளும் கண்ணுக்கு குளுமையாக படமாக்கி இருப்பது பாராட்டுக்குரியது.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும் . பின்னணி இசையை  அளவாக  விறுவிறுப்பாக அமைந்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘பட்டத்து அரசன்’ படத்தை அனைவரும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.