சென்னை:
கோயம்புத்தூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஜமீன்தாரான குரு சோமசுந்தரத்திற்கும், இந்துமதிக்கும் பிறந்தவர்தான் சந்தானம். ஆனால் குடும்பச் சூழல் காரணமாக இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்து கொள்ளாமல் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார். இந்துமதியை ஜமீன்தார் திருமணம் செய்துகொள்ளாத காரணத்தினால், சிறு வயதில் இருந்தே சந்தானமும், அவரது தாயும் பல அவமானங்களை சந்தித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அந்நகரில் நடக்கும் சிறு சிறு தவறுகளை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ்வாக இருக்கும் சந்தானம், பெரிய டிடெக்டிவாக மாற வேண்டும் என்ற ஆசைப்படுகிறார். பின்பு ஒரு துப்பறியும் ஏஜென்ஸியைத் துவக்கி நடத்தி வருகிறார். இவர் தங்கி இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தின் ஓரமாக அனாதை பிணங்கள் கிடக்கின்றன. அந்த உடல்களை யாரும் உரிமை கோராததால் அனாதை பிணங்களாக கருதி புதைக்கும் காவல்துறை அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விசாரிக்காமல் விட்டுவிடுகிறது.
ஆனால் சந்தானம் துப்பறிவாளன் என்பதால், இந்த பிணங்களுக்கு பின்னால் ஏதோ ஒரு குற்றம் நடப்பதை உணருகிறார். தனது துப்பறியும் பணியை தொடங்குகிறார் சந்தானம், . இந்நிலையில் கதாநாயகி ரியா சுமன் ஆவணப் படம் எடுக்க சந்தானத்தின் கிராமத்திற்கு வருகிறார், அப்போது சந்தானத்துடன் நட்பு ஏற்பட, அனாதை பிணங்களின் பின்னணியை கண்டறிய சந்தானத்திற்கு உதவியாக இருக்கிறார்ரியா சுமன். ரயில் தண்டவாளத்தின் ஓரமாக அனாதை பிணங்களை யார் போடுகிறார்கள்? நடப்பவையெல்லாம், கொலைகளா அல்லது தற்கொலைகளா..? இதன் பின்னணியில் என்ன நடக்கிறது? என்பதை கண்டுபிடிக்க முயல்கிறார் சந்தானம். இறுதியில் அனாதை பிணங்களின் பின்னணியில் இருக்கும் குற்றங்களை சந்தானம் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் மீதிக்கதை!
ஏஜெண்ட் கண்ணாயிரமாக வரும் சந்தானம் , மற்ற படங்களில் நடிப்பது போல இல்லாமல், இன்னொரு பரிணாமத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு சந்தானம்தான் சிறந்த தேர்வு என்று சொல்லாம் . அவரின் நகைச்சுவையான நடிப்பும் இயல்பான வசனங்களும் கதைக்கு கூடுதல் பலமாக இருந்தாலும், அவரின் சிறந்த நடிப்பின் மூலம் இப்படத்தை தாங்கி பிடிக்கிறார். வழக்கமான சந்தானத்தை பார்க்க விரும்புகிறவர்களுக்கு அவருடைய நடிப்பு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றாலும், அவரை புதிய கோணத்தில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நடித்திருக்கிறார். காமெடியே இல்லாமல் சீரியஸான வேடத்தில் நடித்தாலும், சில இடங்களில் தனது வழக்கமான நக்கல் நையாண்டி காமெடி வசனங்கள் மூலம் நம்மை சிரிக்கவும் வைக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரியா சுமன், தொலைக்காட்சி நிருபர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். ஆனால் அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்காமல், ஏனோ தானோவென்று இவரை நடிக்க வைத்திருக்கிறார்கள்.சந்தானத்தின் பெற்றோர்களாக வரும் இந்துமதி மற்றும் குரு சோமசுந்தரம் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளனர். முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராமதாஸ், புகழ், ஆதிரா ஆகியோர் தங்களது பணியை செவ்வனே செய்து இருக்கிறார்கள்.
துப்பறியும் படங்களுக்கு உண்டான விறுவிறுப்பும், சுவாரசியமும் துளி கூட இப்படத்தில் இல்லை..சந்தானம் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இதில் அதுவே இல்லை என்பதால் அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் கொடுத்துள்ளது. படத்தின் முதல் பாதியின் வேகம் குறைவு என்றாலும் ரசிகர்களின் பொறுமையை சோதித்துவிட்டது. இடைவேளைக்குப் பிறகு வேகம் பிடித்தாலும் கதையில் கண்டின்யுடி இல்லாமல் இருப்பது, தெளிவில்லாமல் குழப்பமாய் முடித்திருப்பது இயக்குனர் மீதுதான் குறை சொல்ல வேண்டும்.
மொத்தத்தில், ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படம் சுமார்தான்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.