சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

85

சென்னை:

இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படத்திற்கு, ‘நந்தன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகரும், தமிழ் திரையுலகின் முன்னணி விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘கத்துக்குட்டி’ , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘நந்தன்’. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவரை செய்திராத கெட்டப் சேஞ்சில் சசிகுமாரின் தோற்றம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.