‘வரலாறு முக்கியம்’ திரை விமர்சனம்!

89

சென்னை:

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் ‘வரலாறு முக்கியம்’. இப்படத்தில்  ஜீவா, காஷ்மீரா பர்தேசி, பிரக்யா நாக்ரா, விடிவி கணேஷ், கே. எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன,மலையாள நடிகர் சித்திக், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கோவையில் பள்ளி ஆசிரியரான அப்பா கே.எஸ்.ரவிக்குமார், அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் தங்கையுடன் வசித்து வரும் நாயகன் ஜீவா யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அரசியல் பிரமுகரான வி.டி.வி.கணேசுடன் நட்பில் இருக்கும், அவர் யாரை பற்றியும், கவலைப்படாமல், எதை பற்றியும் யோசிக்காமல் தான் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று ஜாலியாக ஊரை சுற்றிக் கொண்டு இருக்கிறார்.  இளம் வாலிபர் ஜீவா குடியிருக்கும் தெருவில் மலையாள மொழி பேசும் குடும்பம் ஒன்று  அங்கு குடி வருகிறார்கள். அந்த வீட்டிற்கு வந்து இருக்கும் பெண்களில் ஒருவரான பிராக்யா நாக்ரா அந்த தெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இனிப்பு வழங்குகிறார்.  இனிப்பு வழங்கும்போது அங்கு இளம் வாலிபர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கண்டுபிடித்து வருமாறு அவரது தந்தை சொல்கிறார்.  ஜீவா வீட்டிற்கு சென்று இனிப்பு கொடுக்கும்போது அங்கு ஜீவா  இருப்பதை தன் தந்தையிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார்.

பிராக்யா நாக்ராவைப் பார்த்தவுடன் மயங்கிப் போகும் ஜீவா அவரை பின் தொடர்ந்து செல்கிறார். அப்போது பிராக்யாவின் அக்காவான காஷ்மீரா அறிமுகமாக,  அந்த அழகு தேவதையை பார்த்ததும், அவரது அழகில் மயங்கிப் போகிறார் ஜீவா. மணந்தால் காஷ்மீராவைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று  காஷ்மீராவை சுற்றி, சுற்றி வந்து காதல் தொல்லை கொடுக்கிறார்.  முதலில் ஜீவாவை காதலிக்க மறுத்த, காஷ்மீரா பின்பு அவரது காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார். இந்த சூழ்நிலையில் காஷ்மீராவின் தங்கை பிராக்யா நாக்ரா ஜீவாவை காதலிக்கிறார். கடைசியில் இருவரில் யாருடைய காதலை  ஜீவா  ஏற்றுக் கொண்டார்? என்பதை காமெடியாக சொல்லி இருப்பதுதான் , ‘வரலாறு முக்கியம்’ படத்தின் மீதி கதை!

இப்படத்தில் ஜீவாவுக்கு ஏற்ற பொருத்தமான கதாபாத்திரம். எதை பற்றியும் கவலைபடாமல் ஜாலியாக ஊரை சுற்றி கொண்டு இருக்கும் கதாபாத்திரத்தில் காதல், நக்கல் நய்யாண்டி, காமெடி என்று நடிப்பில் அசத்தி இருக்கிறார். காஷ்மீராவின் பின்னால் காதலோடு அலையும்போதும், அவருடன் இணைந்து காதல் காட்சிகளிலும் மிக சிறப்பாக நடித்து  அமர்க்களப்படுத்தி விட்டார் ஜீவா,. தனக்கும் காமெடியாக நடிக்க முடியும்  என்பதை இந்த படத்தில் மூலம் மீண்டும் நிரூபித்து இருக்கிறார். வி.டி.வி.கணேஷ் சொல்லும் ஐடியாவை மனதில் ஏற்றுக் கொண்டு,  காதலியை சந்திக்க செல்லும் காட்சிகளில்  அனைவரையும் கைத்தட்டி சிரிக்க வைக்கிறார் ஜீவா. அவரது தங்கை பிராக்யா நாக்ரா காதலை நைசாக பேசி கழற்றி விடுவது சூப்பர்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் காஷ்மீராவும், பிராக்யாவும் அழகு தேவதைகள். இளம் புதுமுக நடிகைகள் என்பது முகத்திலேயே தெரிகிறது. அக்காவாக வரும் காஷ்மீரா அமைதியான முறையில் அளவான நடிப்பைக் காட்ட.. தங்கையான பிராக்யாவோ ஆர்ப்பாட்டமாக தனது நடிப்பைக் வெளிக்காட்டியிருக்கிறார். அதிலும் அக்காதான் உன்னை வேணாம்ன்னு சொல்லிருச்சே.. அப்போ என்னைக் கட்டிக்கோ என்று சொல்லி ஜீவாவைட்டிக் கொள்ளும் காட்சிகளில் சிறுப்பிள்ளைதனமாக எதற்கும் கூச்சமில்லாமல் நடிப்பில் சிறப்பு செய்து இருக்கிறார் பிராக்யா. இப்படத்தில் இருவரது கதாபாத்திரமும் அனைவரும் ரசிக்கும்படி இருக்கிறது.

அரசியல் பிரமுகராக நடித்திருக்கும் வி.டி.வி.கணேஷ். எதற்கெடுத்தாலும்டெல்லிக்குப் போகணும்..”, “பாராளுமன்றத்துல நுழையணும்என்ற கனவையே சொல்லும் கணேஷ்,  ஜீவாவிடம் சொல்லும் ஐடியாவால்  அவர் படும் அவஸ்தைகள் எல்லாம் கலகலப்பாக சிரிக்க வைக்கிறது.  இப்படத்தில் வி.டி.வி.கணேஷ் அடிக்கடி பாலுணர்வைத் தூண்டும் மாத்திரைகள் பற்றிய வசனங்களை பேசியிருப்பது தியேட்டருக்கு வரும் இளைஞர்களை கெடுக்கும்விதமாக இருக்கிறது.

ஜீவாவின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணன், நாயகிகளின் தந்தையாக நடித்திருக்கும் மலையாள நடிகர் சித்திக், டி.எஸ்.கே, சாரா, மொட்டை ராஜேந்திரன் என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து அனைவரையும்  சிரிக்க வைக்கிறார்கள்.

சக்தி சரவணனின் ஒளிப்பதிவு ஒரு இடத்தில் கூட தொய்வு ஏற்படாமல் கண்களுக்கு குளுமையாக்கியிருக்கிறது. ஷான் ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படியாக இருக்கிறது என்றாலும் சுமார் ரகம்தான். கதைக் களத்திற்கு ஏற்றபடி பின்னணி இசையும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

‘வரலாறு முக்கியம்’ என்ற தலைப்புக்கு ஏற்ப கதையை சரியாக எழுதவில்லை என்றாலும் திரைக்கதை மற்றும் காமெடி காட்சிகள் மூலம் இப்படத்தை ஜாலியாக நகர்த்தி சென்று இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராஜன். படம் முழுவதும் நம்மை சிரிக்க வைத்திருந்தாலும் அத்தனையும் ஆபாசமான வசனங்கள்  என்பதுதான் வேதனையான விஷயம்.  ஒரு காதலை மையமாக வைத்து படம் முழுவதும் கலகலப்பாக அனைவரும் சிரிக்கும் விதத்தில் இளைஞர்களுக்கான படமாக கொடுத்திருக்கிறார். ஜீவாவை எப்படி காட்டினால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை மிக சரியாக செய்திருக்கும் இயக்குநர் சந்தோஷ் ராஜனை பாராட்டலாம்

மொத்தத்தில், ‘வரலாறு முக்கியம்’  காமெடி ஜானர் படம்.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.