பிரபலமான இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் அடுத்த படமான ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சென்னை:
“ஒரு நாள் கூத்து”, “மான்ஸ்டர்” படங்கள் மூலம் மக்களிடத்தில் பிரபலமான இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், அவரது அடுத்த படமான ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.
அனைவரும் உணரக்கூடிய, புரியக்கூடிய எல்லோருக்கும் புத்துயிர்ப்பை தரக்கூடிய வகையில் இக்கதை அமைந்துள்ளது. சென்னையில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஐஸ்ஹவுஸ்தான் இந்தப் படத்திற்கான பின்புலம். மிகவும் பரபரப்பாக இருக்கின்ற பகுதி. சின்னச்சின்ன சந்துகளுக்கு நடுவில் அவ்வளவு உயிரோட்டமான வாழ்க்கை இருக்கிறது. இங்கேயும், பாரிமுனையிலும் தான் இப்படிப்பட்ட வைப்ரேஷனை அதிகம் உணர முடியும். இங்கு வாழ்கிற மக்களின் வாழ்க்கை நெரிசலில் இருந்தாலும், எவ்வளவு டெக்னாலஜி வந்தாலும், நகரம் பெருசாக விரிந்தாலும் கூட்ட நெரிசலாக வாழ்க்கை அப்படியேதான் இருக்கு. இங்கு தான் கதை நாயகி ஃபர்ஹானா வாழ்கிறார்.
ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். ஒரு புகழ்பெற்ற செருப்பு கடை வைத்திருந்து காலம் மாறியதில் வியாபாரம் குறைஞ்சுகிட்டே வருகிற கடை. அவங்க குடும்பத்தை நிலைநிறுத்த அடுத்த கட்டத்திற்கு வேலைவாய்ப்புக்கு தயாராக வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாமல் நகர்ந்து செல்ல வேண்டிய கட்டம். ஃபர்ஹானாவின் இந்தப் பயணம் தான் இப்படம். நிச்சயம் புதுக்களமும் புதுக் கதையுமாக இருக்கும். மூணு பிள்ளைகளுக்கு தாயாக நடித்திருக்கிற ஐஸ்வர்யா ராஜேஷ் கொந்தளிக்கிற முகபாவமும், தனித்தன்மை வாய்ந்த குரலிலும் நிறைய இடங்களை தன் வயப்படுத்தியிருக்கிறார். இஸ்லாமியர் உலகத்தின் நுணுக்கமான புள்ளிகளை அவரிடம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் டைரக்டர். அவரின் மொத்த நடிப்பிலும் இஸ்லாமிய பெண்களின் முழு வடிவம் கிடைக்கும்.
‘ஜித்தன்’ ரமேஷ் அவரே நம்ப முடியாத கேரக்டரில் வருகிறார். 100 சதவிகிதம் அவர்தான் அந்த கேரக்டருக்கு பொருத்தமானவர். கிட்டிக்கு மிகவும் அருமையான ரோல். அனுமோளுக்கு நல்ல கதாபாத்திரம். சமூகத்தின் பல உண்மைகளை பேசுகிற இடத்தில் அவரும், ஐஸ்வர்யா தத்தாவும் இருக்கிறார். செல்வராகவனின் ஸ்பெஷல் பர்ஃபார்மென்ஸ் இருக்கிறது. சங்கர் தாஸ், ரஞ்சித் ரவீந்திரன் திரைக்கதையில் உதவியுள்ளார்கள். பிரதான வசனத்தை மனுஷ்ய புத்திரன் எழுதியுள்ளார். வார்த்தைகளில் மீது ஏறி நிற்காமல் ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்திருக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏன் பெண்ணை மையமாக வைத்து கதை அமைத்துள்ளீர்கள்? என்ற கேள்விக்கு..டைரக்டர் நெல்சன் வெங்கடேசன் கூறும் போது..
ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து நான் படம் செய்தாலும் அதில் பெண்களுக்கான முக்கியத்துவம் சரிவிகிதத்தில் இருக்கும். சில கதைகளை பெண்களின் பார்வையில் மட்டுமே கூற முடியும். ஆண்களின் பார்வையில் கதைகள் நிறைய வருகிறது. பெண்கள் உள்ளடங்கிய கதைகள் குறைவாகவே இருக்கிறது. இந்த படம் பெண்ணின் மைய உணர்வை வைத்து நகர்கிறது என்று கூறலாம்.. இது நம்மோடு இருக்கிற சமூகத்தின் கதையும் தான். எல்லாவற்றையும் மீறி வாழ்க்கையை உள்ளபடி உறுதியாக கூறியுள்ளேன்..” என்றார்.