“கனெக்ட்” திரை விமர்சனம்!

78

சென்னை:

இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில்,  நயன்தாரா, வினய், சத்யராஜ்,  ஹனியா நபிஷா நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கனெக்ட்”

இப்படத்தில் நயன்தாரா, வினய் தம்பதியினருக்கு பதினாங்கு வயது பெண் குழந்தையாக ஹனியா நபிஷாவும், நயன்தாராவின் அப்பாவாக சத்யராஜும், வினய் மருத்துவராகவும் நடித்து இருக்கிறார்கள். பணக்கார குடும்பம் இல்லையென்றாலும், நடுத்தர வர்க்கத்து குடும்பமாக அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் நான்கு பேரும் மகாபலிபுரம் கடற்கரையில் உள்ள விடுதியில் அமர்ந்திருக்கும் போது.. வெளிநாடு சென்று லண்டனில் உள்ள டிரினிடி  இசைக் கல்லூரியில் இசைப்படிப்பு படிக்க வேண்டும் என நயன்தாராவின் மகள் தனது விருப்பத்தை  தந்தை வினய்யிடம் வெளிப்படுத்துகிறார். அதற்கு பள்ளிப்படிப்பை முடித்த பிறகு செல்லலாம் என நயன்தாரா மகளை சமாதானப்படுத்துகிறார்.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த சமயத்தில் மருத்துவரான வினய் வீட்டிற்கே வராமல் மருத்துவமனையிலேயே தங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல உயிர்களைக் காப்பாற்றுகிறார். தனது மனைவி, மகளுடன் வீடியோ கால் மூலம் அடிக்கடி பேசி அவர்களை சமாதானம் செய்கிறார். ஆனால் மருத்துவரான வினய்க்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு, அந்த நோயினால் பாதிக்கப்பட்டு அவரும் மரணமடைகிறார்.

இதனால் நயன்தாராவும், அவரது மகள் ஹனியா நபிஷாவும் மனதளவில் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். தன் தந்தையிடம் மிக  செல்லமாக அன்புடனும், பாசத்துடனும் வளர்ந்ததால் தந்தையை நினைத்து  மறக்க முடியாமல், ஹனியா நபிஷா அவரது ஆத்மாவுடன் பேச வேண்டும் என்ற ஆர்வத்தால் ஆன்லைன் மூலம் ஒரு பெண் மந்திரவாதியை நாடுகிறார். அந்த பெண் மந்திரவாதியின் தவறான வழிகாட்டுதலால் கெட்ட ஆவி ஹனியா நபிஷா வின் உடலுக்குள் புகுந்து விடுகிறது. அவளை ஆட்டிப் படைக்கிறது. ஆரம்பத்தில் மன அழுத்தத்தில் மகள் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைக்கும் நயன்தாரா பிறகு அவளது உடலில் ஆவி இருப்பதை அறிந்துக்கொண்டு, கிறிஸ்துவ பாதிரியார் அனுபம் கேர் உதவியுடன் தன் தந்தை சத்யராஜுடன் இணைந்து அந்த கெட்ட ஆவியை விரட்ட முயற்சி செய்கிறார். தன் மகளைக் காப்பாற்ற நயன்தாரா சந்திக்கும் சிரமங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே  கடைசியில் அந்த கெட்ட ஆவியிடமிருந்து தன் மகளைக் காப்பாற்றினாரா? கிறிஸ்துவ பாதிரியார் அனுபம் கேர் அந்த ஆவியை விரட்டினாரா? என்பதுதான் “கனெக்ட்” படத்தின் மீதிக் கதை!

பதினாங்கு வயதுப் பெண்ணுக்கு அம்மா என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். கதைக்காக அம்மாவாக நடித்தாலும் இளமையுடன்தான் காட்சியளிக்கிறார் நயன்தாரா. அவரது  நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.  ஆண்டவர் மீது முழுமையான நம்பிக்கை இல்லாத அவர் ஒரு கட்டத்தில் அவரது மகள் உடலில் ஆவி புகுந்து இருப்பதைக் கண்டு ஆண்டவரை முழுமையாக நம்பவேண்டிய இடத்தில் தடுமாறுகின்ற காட்சியில், அவருடைய நடிப்புத் திறமையைக் கண்டு கைத்தட்டி பாராட்டலாம்.

அப்பாவாக நடிக்கும் சத்யராஜ் மிக எளிதாக அந்த கதாப்பாத்திரத்துக்கு நடிப்பில் வலுச்சேர்க்கிறார். தன் உயிராகக் கருதும் பேத்தியின் உடலுக்குள் ஆவி புகுந்து இருப்பதைக் கண்டு,  பாதிரியார் அனுபம்கேருடன் பேசும்போதும், தன் கண்முன்னே நடக்கும் கொடுமையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் போதும், சரியாக முறையில் மனநிலையை பயன்படுத்தி சிறப்பான  நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நயன்தாராவுக்கு கணவராக நடித்திருக்கும் வினய் ராய், அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் தன் பணியை சிறப்பாக செய்து நம் மனதில் நிற்கிறார்.

இசையமைப்பாளர் பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்திருக்கிறது.. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இசையில் திகில் அனுபவத்தைக் கொடுக்கிறார்,.

இப்படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் சில குறிப்பிட்ட அறைகளில் நடந்தாலும், அந்த உணர்வு ஏற்படாத வகையில் சிறந்த முறையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி. குறிப்பாக இருட்டில் மழை வரும்போது இடி, மின்னல் காட்சிகளில் நம் மனதை  பயத்தில் திக்கு, முக்காட வைக்கிறார்.

பேய் என்றாலே அனைவருக்கும் பயம் வருகின்ற அளவிற்கு படத்தை இயக்க நினைத்திருக்கும் இயக்குநர் அஸ்வின்சரவணன், அதிகமாக ஆங்கில மொழியை பாதிரியார் அனுபம்கேர் பேசுவதை ரசிக்க முடியவில்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த ‘எக்ஸாஸிஸ்ட்” என்ற படத்தை பார்ப்பது போலவே இப்படம் இருக்கிறது. இப்படத்தின் கதையில் இன்னும் பயம் கலந்த காட்சிகளை சேர்த்து படமாக்கி இருக்கலாம். ஆனால் இப்படத்தில் சொல்லப்படும் காரணம் மிக மிக பலவீனமாக இருப்பது பெரிய குறை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் வரும்  ஆங்கிலத்தில் பேசும் ஆவி. ஆங்கிலத்திலேயே வசனம் பேசி அனுப்பி விடுவதை நம் கவனத்தை  ஈர்க்கவில்லை. கதை மற்றும் திரைக்கதையிலும் இன்னும் சிறிது கவனத்தை இயக்குநர் அஸ்வின்சரவணன் செலுத்திந்தால் படம் முழுவதும் நம்மை படபடப்போடு பார்க்க வைத்திருக்கலாம்.

மொத்தத்தில், ‘கனெக்ட்’  படத்தை  பேய் பட ரசிகர்கள் ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.