சென்னை:
‘ஆஹா’ தமிழ் ஓடிடியில் கே.வி. துரை தயாரிப்பில் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் ‘ஆஹா’ தமிழ் ஓடிடியில் வெளியாகி இருக்கும் படம்தான் “உடன்பால்”. இப்படத்தில் லிங்கா, அபர்ணா, விவேக் பிரசன்னா, காயத்ரி ஷங்கர், சார்லி, மயில்சாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதைப்படி… லிங்கா தனது தாயின் நினைவு நாளுக்காக தங்கை காயத்திரியை தன் வீட்டிற்கு வரவழைக்கிறான். பின்னர் தாயின் படத்தின் முன் படையலிட்டு சாமி கும்பிட்டபின் தந்தை சார்லியிடம், தான் செய்யும் தொழில் சரியாக போகாததால் அதிகமான கடன் பிரச்சனையில் இருப்பதால் வேறு தொழில் தொடங்குவதற்காக இந்த வீட்டை விற்று பணம் கொடுக்குமாறு தனது தங்கையை வைத்து கேட்க வைக்கிறான். அதற்கு சார்லி, இப்போது இருக்கும் சூழ்நிலையில், நாம் வாழும் வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் எப்படி இருக்க முடியும். என்னால் இந்த வீட்டை விற்க முடியாது எனக்கூறி மறுப்பு தெரிவித்து விட்டு அவர் பணிபுரியும் அருகிலுள்ள காம்ப்ளெக்ஸிற்கு சென்றுவிடுகிறார்.
வீட்டை விற்பனை செய்து தங்கைக்கு கொடுத்தது போக, எல்லா கடனையும் அடைத்துவிட்டு புதிதாக தொழில் செய்து நிம்மதியாக வாழலாம் என நினைத்த லிங்கா ஒன்றும் புரியாமல் தவிக்கிறான். அப்போது கடன் கொடுத்தவர்களின் தொல்லை தாங்க முடியாத நிலையில் என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கையில், திடீரென்று அந்த காம்ப்ளெக்ஸ் இடிந்து தரை மட்டமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வெளியாவதோடு, அதில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தருவதாக அரசு அறிவிக்கிறது. அந்த இடிபாடுகளில் சிக்கி தனது தந்தையும் இறந்து விட்டார் என லிங்காவும், தங்கை காயத்திரியும் அழுகின்றனர். அதன்பிறகு தங்கையின் கணவரை அழைத்துக் கொண்டு மருத்துவ மனையில் உள்ள பிணவறையில் சென்று பார்த்து வருவதாக சொல்லிவிட்டு கதவைத் திறந்து வெளியே வரும்போது எதிரே அவரது தந்தை சார்லி நிற்பதைக் கண்டு இருவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
சார்லி தனது வீட்டிற்குள் நுழைந்து மருமகள் அபர்ணதியிடம் மிகவும் அசதியாக இருக்கிறது காபி போட்டு கொடும்மா…என்று கேட்கிறார். அபர்ணதி காபியை கொண்டு வந்து சார்லியிடம் கொடுக்க அவர் நாற்காலியில் அமர்ந்தபடியே இறந்துவிட குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். இறந்து போன சார்லியை அடக்கம் செய்தார்களா? இல்லையா? என்பதுதான் “உடன்பால்” படத்தின் மீதிக்கதை!
சிடியில் படங்களை விற்கும் தொழிலை சரிவர கவனிக்காமல், அதனால் கடன் வாங்கி கஷ்டப்படும் லிங்கா, தனது தங்கை காயத்திரி மூலம் அடிக்கடி தந்தையிடம் வீட்டை விற்கச் சொல்லும் காட்சிகளில் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக கச்சிதமாகவும், சிறப்பாகவும் நடித்திருக்கிறார். வீட்டை விற்பனை செய்து கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யும் அவர், அது நடக்காது என்று தெரிந்தவுடன் தந்தையிடம் கோபப்படும்போது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
லிங்காவின் மனைவியாக வரும் அபர்ணதியின் நடிப்பும் சிறப்பு. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து செவ்வனே செய்து இருக்கிறார்.
தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி, தனது அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். அவரது நடிப்பில் யாரும் குறை சொல்லாத அளவிற்கு எதார்த்தம் கலந்து இருக்கிறது.
சார்லியின் மகளாக வரும் காயத்திரியும் தன் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்து இருந்தாலும், சில காட்சிகளில் செயற்கையாக தெரிகிறது.
மருமகனாக நடிக்கும் விவேக் பிரசன்னாபடம் முழுவதும் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். இளைய மகனாக நடித்திருக்கும் தீனா, மயில்சாமி, சிறுவன் தர்ஷித் சந்தோஷ், சிறுமி மன்யாஸ்ரீ என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு ஓகே! சக்தி பாலாஜியின் பின்னணி இசை படத்தின் கதைக்களத்திற்கு ஏற்றவாறு பலமாக அமைந்து இருக்கிறது.
ஏ.ஆர்.ராகவேந்திரனுடன் இணைந்து கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் ஸ்ரீனிவாசன், மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் பணத்திற்கு சில மனிதர்கள் செய்யும் பாவச் செயலையும் இன்றைய சூழ்நிலையில் உறவுகளை விட வாழ்க்கையை நகர்த்துவதற்கு பணம் எவ்வளவு முக்கியம் என்பதையும் படம் முழுவதும் காமெடியாக சொன்னாலும், தப்பான கதையை சொல்லி, அனைவரையும் சிரிக்க வைக்க படமெடுத்து கடைசியில் சார்லியின் பேரனை வைத்து நெத்தியடியாக ஒரு கருத்தைச் சொல்லி, கதையில் சமரசம் செய்து இருக்கிறார்.
மொத்தத்தில், ‘உடன்பால்’ படம் ‘ஆஹா’ தமிழ் ஓடிடியில் வெளி வந்தாலும் அனைவரும் ரசிக்க கூடிய படம்தான்!
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.