சமூகத்திற்கான சிந்தனையில் அவர் என்னோடு நிற்கிறார் என்பதில் மகிழ்ச்சி.. “தமிழ்க்குடிமகன்” இயக்குனருக்கு சேரன் பாராட்டு!

79

சென்னை:

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பெட்டிக்கடை, பகிரி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக ‘மிக மிக அவசரம்’ புகழ் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நடிகர்கள் லால், எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார். ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், 27 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து பல்வேறு தரப்பினர் இடமிருந்து மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் பற்றி இயக்குனர் இசக்கி கார்வண்ணன் கூறும்போது,

“இந்த சமூகத்தில் சாதிய கட்டமைப்பை உடைப்பதற்காக தனி மனிதனாக போராடும் ஒருவனை பற்றிய கதைதான் இது. குலத்தொழில் முறையை இன்று ஒழித்து விட்டோம். ஆனால் அதை மையப்படுத்தி உருவான சாதியை இதுவரை ஏன் ஒழிக்கமுடியவில்லை..ஒவ்வொருவரும் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையிலேயே தான் சாதி உருவானது. தொழில் ‘சார்ந்து’ உருவானதால் தான் அதற்கு சாதி என்ற பெயரே வந்தது. அதுகுறித்த புரிதல் இங்கே பலருக்கும் இல்லை. இப்போது பலரும் தாங்கள் செய்து வந்த தொழிலில் இருந்து வேறுவேறு தொழிலுக்கு மாறி விட்டனர். அதனால் அவர்களை இதற்குமுன் அவர்கள் செய்து வந்த தொழில் சார்ந்த சாதியை வைத்து அழைக்க வேண்டிய தேவை இல்லை.

அதற்கு பதிலாக சாதி என்கிற இடத்தில் தமிழ்க்குடிமகன் என குறிப்பிட வேண்டும். இப்படி செய்யும்போது குறிப்பிடத்தக்க இடைவெளியில் சாதியை முழுமையாக அழித்து விடலாம். சாதி என்கிற வார்த்தை என்னை அழுத்துகிறது, அதனால் சமூகத்துடன் ஒன்றி வாழ முடியவில்லை என்று பலரும் குமுறுகிறார்கள். அதற்கு ஒரு விடிவு தரும் விதமாக இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. குறிப்பாக உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தின் கதையாலும் பாடல்களாலும் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது வி ஹெச் மியூசிக் சார்பாக இந்த படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்த இயக்குநர் சேரனின் ஒத்துழைப்பு மிக அபரிமிதமானது. இந்த படத்தில் நடிக்கும்போது அவர் என்னிடம் இந்த சாதிய அமைப்பை உடைக்க முடியவில்லை. ஆனால் இந்தப்படம் அதை உடைக்கும் விதமாக இருக்கிறது என்று நெகிழ்ந்து போய் பாராட்டினார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரியில் படத்தை வெளியிடும் திட்டம் இருக்கிறது” என்கிறார் இசக்கி கார்வண்ணன்.

*நடிகர்கள்* ; சேரன், ஸ்ரீபிரியங்கா, லால், எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர்.

*தொழில்நுட்ப கலைஞர்கள்*

எழுத்து-இயக்கம்: இசக்கி கார்வண்ண

இசை: சாம் சி.எஸ்

ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்

படத்தொகுப்பு: கார்த்திக்

கலை: வீரசமர்

நடனம்: தினேஷ்

சண்டை பயிற்சி: சக்தி சரவணன்

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்