’டிரைவர் ஜமுனா’ திரை விமர்சனம்!

97

சென்னை:

‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும்  திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமடியன்’ அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன், ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். சாலை பயணத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்திற்கு ஒலியின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், படத்தின் ஒலி வடிவமைப்பை, முன்னணி ஒலி வடிவமைப்பு நிறுவனமான ஸிங்க் சினிமா ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் 18 ரீல்ஸ் சார்பில், பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி திரைப்பட தயாரிப்பாளருமான எஸ். பி. சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

‘டிரைவர் ஜமுனா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தை பாண்டியன் கால் டாக்ஸி  ஓட்டுபவராக பணிபுரிகிறார். தன்னுடைய மகள் மகன் மனைவியுடன் மகிழ்ச்சியுடன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கும் பாண்டியனுக்கு கவுன்சிலர் ஆக வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது. ஆனால் அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி, இருக்கிற தொழிலை செய்தாலே போதும். அரசியலில் ஈடுபட வேண்டாம்..என்று தன் கணவனுக்கு அறிவுரை கூறுகிறார். தன் மனைவியை சமாதானம் செய்து விட்டு, அரசியல்வாதியான ஆடுகளம் நரேனிடம் சென்று கவுன்சிலர் தேர்தலில் நிற்க போகிறேன் என்கிறார். ஆனால் நரேன், நீ கவுன்சிலராக நிற்கக் கூடாது.. நான் சொல்வதைக் கேளு…என் மகன் கவுன்சிலராக நிற்கிறான்… என்று பாண்டியனுக்கு அறிவுரை சொல்கிறார்.ஆனால் அவரிடம் வாக்குவாதம் செய்து விட்டு, பாண்டியன் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட முயல்கிறார். இந்த சூழ்நிலையில் அவரை கூலிப்படையினர் கொன்று விடுகின்றனர்.  இந்தப் படுகொலையை கண்ட அவரது மனைவி ஸ்ரீ ரஞ்சனிக்கு பக்கவாதம் ஏற்பட்டு பேச முடியாமல் படுத்த படுக்கையாகி விடுகிறார்.  இதனால்  ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி தன் குடும்பத்தை விட்டு பிரிகிறார்.  இந்த சூழ்நிலையில் தந்தை பாண்டியனை கொன்ற கூலிப்பட்டினரையும், ஆடுகளம் நரேனையும் பழிக்கு பழி வாங்க  ஐஸ்வர்யா ராஜேஷ் முடிவு செய்கிறார். அவரது தந்தையை கொன்றவர்களை ஐஸ்வர்யா ராஜேஷ் பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் மீதி கதை.

ஜமுனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கார் ஓட்டுநர் வேடத்தில்  மிக கச்சிதமாக, சிறப்பாக  நடித்திருக்கிறார். கூலிப்படையிடம் சிக்கிக்கொண்ட பிறகு அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடும் காட்சிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ், கடுமையாக உழைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். உடல்நிலை சரியில்லாத, தன் அம்மாவை பராமரிக்கும்போதும், தன்னுடைய திருமணத்துக்கு வற்புறுத்தும் அத்தையிடம் தவித்து நிற்கும்போதும், கால் டாக்ஸி ஓட்டி குடும்பத்தை காப்பாற்ற முயலும்போதும்  தன்  அறிமுகக்காட்சிகளிலேயே நடிப்பில் தனி முத்திரையைப் பதித்து விடுகிறார் ஐஸ்வர்யாராஜேஷ். ஓடுகிற காருக்குள் நடக்கிற மிகப்பதட்டமான சூழ்நிலையில் அவர் எதிர்கொள்கிற காட்சிகளில் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுகிறார். படம் முழுவதும் கார் ஓட்டினாலும், காரை கவிழ்த்து கூலிப் படையினரை கொல்லும் கடைசி கட்ட  காட்சிகளில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அபாரம்!

அரசியல்வாதியாக ஆரம்பத்தில் அமைதியான ஒரு தலைவராக வலம் வரும்  ஆடுகளம் நரேன், தனது அனுபவமான நடிப்பினால் அந்த  கதாபாத்திரத்திற் கேற்றவாறு, சிறப்பாக நடித்து கதைக்கு வலு  சேர்த்திருக்கிறார்.

மணிகண்டன், ராஜேஷ், கவிதாபாரதி, இசையமைப்பாளராக நடிக்கும் அபிஷேக்,ஐஸ்வர்யாராஜேஷின் அம்மாவாக வரும் ஸ்ரீரஞ்சனி, அப்பாவாக வரும் பாண்டியன் ஆகியோர் இயல்பாக நடித்து  தங்களது வேலையை செய்து படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்கள்.

கோகுல்பினாயின் ஒளிப்பதிவில் வேகமாக ஓடும் காரில், பயண காட்சிகளையும், அதில் பயணிக்கும் கதாபாத்திரங்களையும்,  மிக இயல்பாக படமாக்கி யிருக்கிறார். பதட்டமான காட்சிகளில் அவருடைய காமிரா கோணங்கள்  நமக்கு  பதட்டத்தை ஏற்படுத்துகின்றன. கோகுல்பினாயின் ஒளிப்பதிவு மிக சிறப்பு!

ஜிப்ரானின் பின்னணி இசை கதையோடு சேர்ந்து பயணிக்கிறது. நெடுஞ்சாலை துரத்தல் காட்சிகளில் அளவான பின்னணி இசையைக் கொடுத்து படத்தை அசர வைத்திருக்கிறார்.

இப்படத்தில் முழுக்க கார் பயணத்தை மையப்படுத்தி கதை எழுதியிருக்கும் இயக்குநர் கிங்ஸ்லின், ஒரு பெண் மிக தைரியமாக தன் மனவுறுதியை மட்டுமே துணையாகக் கொண்டு, கொலைகார கயவர்களை சட்டத்தால்  ஒன்றும் செய்ய முடியாத அளவிற்கு வலிமையான பரபரப்பான,  திரைக்கதையாக்கி, அடுத்து என்ன நடக்கும்,,என்பதை மிக வேகமாக நேர்த்தியாக நகர்த்தி செல்வதோடு படம் பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்  இயக்குநர் பா.கின்ஸ்லின். அவருக்கு ஒரு கைத்தட்டல் கொடுக்கலாம்.

மொத்தத்தில், ‘டிரைவர் ஜமுனா’ படத்தை அனைவரும் ரசிக்கலாம்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.