சென்னை:
எஸ். குஷ்மாவதி தயாரிப்பில், அபிநயஸ்ரீ, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி, டிஎஸ்ஆர்.தர்மராஜ், லல்லின், காயத்ரி, தாரா, மேலோடி, பிரகதீஷ்வரன், ஜென்சன்,சிறப்பு தோற்றத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஸ்மிருதி வெங்கட், செந்தில்வேல், பகவதிபெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். ‘அயலி’ படத்தின் திரைக்கதை, வசனத்தை வீணை மைந்தன், சச்சின் ஆகியோருடன் சேர்ந்து முத்துக்குமார் ஏழுதி இயக்க, 8 எபிசோடுகள் அடங்கிய அயலி ஜீ 5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.இசை-ரேவா, எடிட்டிங்-கணேஷ் சிவா, ஒளிப்பதிவு-ராம்ஜி, பிஆர்ஒ எய்ம் சதீஷ்.
1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள வீரபண்ணை கிராமத்தில் அயலி என்ற தெய்வ வழிபாடு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது என்னவென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் செய்துவைக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு டாக்டருக்கு படிக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகமாக இருக்கிறது. ஆனால் அந்த ஊர் கட்டுப்பாட்டினால் குறிப்பிட்ட வயசுக்கு மேல் வந்து விட்டால் படிக்கக்கூடாது.. கோயிலுக்குள்ள போகக்கூடாது..வெளியூருக்கு போகக்கூடாது. என்று கட்டுப்பாடுகள் அந்த கிராமத்தில் இருக்கிறது. ஊர் கட்டுப்பாட்டுகளை மீறி டாக்டராக வேண்டும் என்ற ஆவல் அதிகமா இருபதால், அதை நிறைவேற்ற முயலும் போது கட்டுப்பாடுகள் காரணம் காட்டி தமிழ்செல்வியின் தாயும், தந்தையும் அதை கண்டிக்கிறார்கள். அதனால் தமிழ் செல்வி தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைத்துவிட்டு படிப்பில் அதிக நாட்டம் செலுத்துகிறார், இதனால் அவளுக்கு பல பிரச்சனைகள் வருகிறது. ஆனால் ஒரு காலகட்டத்தில் தாயே மகளுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவள் படிப்பதற்கு கூடவே இருந்து உதவி செய்கிறாள். இதற்கு பிறகு அந்தப் பெண் மேற்கொண்டு படிப்பை தொடர்ந்தாளா… அந்த கிராமத்தைச் சேர்ந்த தன்னைப்போல் உள்ள பெண்கள் எல்லோரும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, ஒரு வழிகாட்டியாக இருந்து ஒளி வீசச்செய்ய வேண்டும் என்பதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் ‘அயலி’படத்தின் மீதிக்கதை.
தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபிநயஸ்ரீ தனது லட்சியத்தை நோக்கி தைரியமாக பயணிக்கும்போது சிறந்த நடிப்பால் படத்தின் சுவாரஸ்யத்தை குறைய விடாமல் பார்த்துக் கொள்கிறார். துடுக்கான கேள்விகள், போராட்ட குணம் கொண்ட இளம் மாணவியாக படிக்க துடிக்கும் ஆசையை நிறைவேற்ற எந்ந முடிவையும் எடுக்க துணியும் கதாபாத்திரம் மறக்க முடியாத அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். மாத விடாய் ரத்தத்தை மறைப்பதற்காக சட்டையில் இருக்கும் சிவப்பு வண்ணத்தை பார்த்து அதிர்ச்சியடைபவர்களுக்கு “இங்க்” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்து போவதும், “இங்க்” என்று சொன்னால் நம்புறானுங்க, முட்டாளுங்க” என்று வசனம் பேசும் இடங்களில் தைரியம் நிறைந்த பெண்ணாக அசத்தியுள்ளார்.
வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் லிங்கா, அதில் கச்சிதமாக பொருந்தி அசத்தி இருக்கிறார்.அம்மா குருவம்மாளாக அனுமோல், அப்பா தவசியாக அருவி மதன், சத்திவேலாக லிங்கா, திருப்பதியாக சிங்கம்புலி, கணக்கு வாத்தியார் மூர்த்தியாக டிஎஸ்ஆர்.தர்மராஜ், தோழி மைதிலியாக லல்லின், ஈஸ்வரியாக காயத்ரி, கயல்விழியாக தாரா, செல்வியாக மேலோடி, முருகனாக பிரகதீஷ்வரன், சேகராக ஜென்சன் ஆகியோர் கிராமத்து மண் வாசனை மாறாத கதாபாத்திரங்களாக தங்களது பணியை சிறப்பாக செய்து சிறந்த நடிப்பால் தொடர் வேகமாகச் செல்ல உதவுகிறார்கள்.
சிறப்பு தோற்றத்தில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் லஷ்மி பிரியா சந்திரமெளலி மற்றும் பக்ஸ் பகவதி வரும் காட்சிகள் கூட கவனம் பெறும் வகையில் நடித்து இருப்பது இத்தொடருக்கு கூடுதல் பலத்தை சேர்த்து இருக்கிறது..
ரேவாவின் இசையில் பாடல்கள் கதைக்களத்தோடு ஒன்றியிருக்கின்றன. பின்னணி இசை தொடரின் கருத்துகளை பதிவு செய்திருப்பதோடு காட்சிகளுக்கு பெரிய பலத்தை கொடுத்து இருப்பது சிறப்பு.
ராம்ஜியின் ஒளிப்பதிவில் கிராம மக்களின் பழக்க வழக்கங்களை மிக இயல்பாக படமாக்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி கொடுத்து, அச்சு அசலாகப் பதிவாகியிருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.
இன்றைய காலகட்டத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இன்னும் பல கிராமங்களில் சில மூடநம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெண் கல்வியை மையப்படுத்திய ஒரு கதையை 8 பாகங்களாக மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருப்பதோடு, அதை சுவாரஸ்யமாக மக்கள் ரசிக்கும் விதத்தில் நகர்த்தி, அதிலும், வசனங்கள் அனைத்தும் பகுத்தறிவு சிந்தனையோடு சமுதாயத்துக்குத் தேவையான கருத்தை சொல்லி, முக்கியமாக பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்தி இயக்கி இருக்கும் இயக்குனர் முத்துக்குமாருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில், ‘அயலி’ இணையத் தொடரை அனைவரும் பார்த்து ரசிக்கலாம்
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.