சேத்தன் சீனு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘பீஷ்ம பருவம்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

79

சென்னை:

தமிழில் இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கத்தில் வெளியான கருங்காலி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அதை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்து மந்த்ரா-2, ராஜு காரி கதி, பெல்லிக்கி முந்து பிரேமகதா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். தொடர்ந்து தற்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் சரிசமமாக கவனம் செலுத்த துவங்கியுள்ள சேத்தன் சீனு புன்னகை பூவே, கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவேரி கல்யாணி இப்போது இயக்குனராக மாறி தமிழ், தெலுங்கில் இயக்கியுள்ள பான் இந்திய படமாக உருவாகியுள்ள ‘புரொடக்சன் நம்பர் ;1’ என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதுதவிர அறுபடை முருகன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள வள்ளுவன் படமும் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகமாக கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகி வரும் ஜென்டில்மேன்-2 படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார் சேத்தன் சீனு. இந்த படத்திற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இன்னொரு பக்கம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுதந்திரத்திற்காக போராடிய 12 சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை மையப்படுத்தி ஆந்தாலாஜி படமாக உருவாகி வரும் ஆக்டர் படத்திலும் நடித்து வருகிறார் சேத்தன் சீனு. இதில் வேலு நாச்சியார் உட்பட இந்த 12 கதாபாத்திரங்களிலும் சேத்தன் சீனுவே நடிக்கிறார்.  இந்த நிலையில் தற்போது பிஎம்கே இண்டர்நேஷனல் மற்றும் சிசி புரொடக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பீஷ்ம பருவம் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சேத்தன் சீனு. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று (மார்ச் 10) ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. மேலும் இன்றே படப்பிடிப்பும் துவங்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்காக தற்போது 45 அடி உயரமுள்ள மகாகாளி செட் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கே 150 நடன கலைஞர்கள் பங்கு பெறும் நடனக்காட்சி ஒன்றும் அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட நூறு சண்டைக் கலைஞர்கள் பங்கு வரும் ஆக்சன் காட்சியும் படமாக்கப்பட இருக்கிறது. 25 நாட்கள் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் உழைப்பில் இந்த பிரம்மாண்ட மகாகாளி செட் உருவாகி உள்ளது. புராண காலத்து பின்னணியில் ஆக்சன் கலந்த கதை அம்சத்துடன் இந்த படம் உருவாகிறது.

இப்படி இளம் நடிகரான சேத்தன் சீனுவின் திரையுலக பயணத்தில் அடுத்தடுத்து பெரிய படங்களில் அவர் நடித்து வருவதும் விரைவில் அவை ஒவ்வொன்றாக ரிலீஸாக இருப்பதும் இனி தமிழிலும் சேத்தன் சீனுவுக்கு என ஒரு நிலையான இடத்தை பெற்று தரும் என்பதில் சந்தேகம் இல்லை.