சென்னை:
நடிகர் உதயநிதி இதுவரையில் நடித்திராத கதைக் களம் இது. க்ரைம், சஸ்பென்ஸ், திரில்லர் நிறைந்த ‘கண்ணை நம்பாதே’ என்ற ஒரு அருமையான படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை லிபிஷினி கிரியேஷன்ஸ் சார்பில் வி என் ரஞ்சித் குமார் தயாரிப்பில் மு.மாறன் கதை எழுதி ‘கண்ணை நம்பாதே’ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், உதயநிதியின் காதலி ஆத்மிகாவின் காதலுக்காக, அவரது தந்தையிடம் பொய் சொல்லி வாடகைக்கு அந்த வீட்டில் குடியேறுகிறார் உதயநிதி. ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விஷயம் ஆத்மிகாவின் தந்தை ஞானசம்பந்தத்திற்கு தெரிய வருகிறது. இதை அறிந்த ஆத்மிகாவின் தந்தை உதயநிதியை உடனே வீட்டை விட்டு வெளியேறுமாறு சண்டை போடுகிறார். இதனால் வேறு வழியின்றி உதயநிதி வாடகைக்கு வீடு தேடும்போது பிரசன்னாவின் வீட்டில் தங்க நேரிடுகிறது. இந்த சூழ்நிலையில் தனது நண்பர் சதீஷ் ,உதயநிதி, பிரசன்னா மூவரும் டாஸ்மார்க் ஒயின் ஷாப்பிற்கு சென்று மது அருந்த செல்கின்றனர். ஆனால் உதயநிதி மது அருந்தாமல் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு கார் விபத்து நடக்கிறது.
உடனே உதயநிதி ஓடிப் போய் பார்க்க்கிறார். அங்கு பூமிகா காரை ஓட்டிக்கொண்டு வரும்போது விபத்து ஏற்படுகிறது. அப்போது பூமிகா மீது பரிதாபப்பட்டு உதயநிதி அந்த காரை ஓட்டிக்கொண்டு பூமிகாவின் வீட்டில் இறக்கி விடுகிறார். இந்நிலையில் பூமிகா, உதயநிதியிடம் தனது காரை எடுத்து சென்று நாளை காலை வந்து விட்டு விடுங்கள்..என்கிறார். இந்த விஷயத்தை உதயநிதி, பிரசன்னாவிடம் சொல்ல, பிரசன்னா உதயநிதிக்கு தெரியாமல் அந்த காரை எடுத்துக் கொண்டு பூமிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கு பூமிகாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயலும் போது கொல்லப்படுகிறார்.
இந்த கொலையை கண்டு பயந்த பிரசன்னா இந்த கொலை பழியை உதயநிதி மீது சுமத்தி விட்டு காவல்துறையிடம் இருந்து தப்பிக்க நினைக்கிறார். இந்நிலையில் இந்த கொலை செய்தது யார் என்பதை உதயநிதி கண்டுபிடிக்க முயல்கிறார். இந்த கொலை செய்தது யார் என்பதை உதயநிதி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் மீதி கதை.
எப்போதுமே தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கும் உதயநிதி, இந்த படத்திலும் நடுத்தரவர்க்கத்து இளைஞனாக மிக இயல்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். அந்த அளவுக்கு அவரது கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கிறது பக்கத்து வீட்டு பையன் என்று சொல்லும் அளவுக்கு அப்பாவியாக நடிக்கும் காட்சிகள் சூப்பர். கொலையான பிணத்தை வைத்துக் கொண்டு காரில் வலம் வரும் காட்சிகளிலும், தன்னை சுற்றி என்ன நடக்கிறது..என்று தெரியாமல், பிரசன்னாவிடம் குழம்பும் காட்சிகளிலும், நடிப்பில் அசத்துகிறார். யார் கொலை செய்தார்கள் என்பது தெரியாமல் கடைசியில் தெரியும்போது அவரது ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் அபாரம்.
உதயநிதியின் காதலியாக நடித்திருக்கும் ஆத்மிகாவுக்கு ஒரு பாடல் மற்றும் சிலகாட்சிகள் என வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம். அதைக் குறைவில்லாமல் சிறப்பாக செய்து இருக்கிறார்.
‘ரோஜாக்கூட்டம்’ படத்தில் ஸ்ரீகாந்துடன் இணைந்து நடித்திருந்த பூமிகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இருவரது நடிப்பும் அனைவரின் மனதிலும் பதிய வைக்கிறது..
வசுந்தரா காஷ்யப், சதிஷ், மாரிமுத்து, சுபிக்ஷா, செண்ட்ராயன், கு.ஞானசம்பந்தம், பழ.கருப்பையா என படத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக இருந்தாலும், அனைவரும் தங்களது பணியை செவ்வனே செய்து இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் வரும் கதையில், பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால், அதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி ரசிக்கவைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜலந்தேர் வாசன்.
சஸ்பென்ஸ், கிரைம், திரில்லர் போன்ற படங்களுக்கு பின்னணி இசை மிகவும் முக்கியம்.என்பதால் அதை உணர்ந்து இசைத்திருக்கிறார் சித்துகுமார். அவரது இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்திருக்கிறது.
அருள்நிதியை வைத்து ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கியிருக்கும் இந்தப்படத்தின் கதையும் அனைவரும் ரசிக்கின்ற மாதிரி இருக்கிறது. இறுதிக் கட்ட காட்சியில் பூமிகா கதாபாத்திரத்தின் மூலம் இயக்குநர் வைத்த ட்விஸ்ட், எதிபாராதவிதமாக இருந்தாலும், அந்த காட்சிகள் பல படங்களில் பார்த்த ஞாபகம் வருகிறது. ஆனாலும் ‘கண்ணை நம்பாதே’ படத்தை எந்தவித தொய்வில்லாமல் இயக்கி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘கண்ணை நம்பாதே’ படத்தை அனைத்து ரசிகர்களும் ரசிக்கலாம்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.